வார்த்தையில் நிலைத்திருங்கள்!

“நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ, அது உங்களுக்குச் செய்யப்படும்” (யோவா. 15:7).

கர்த்தருடைய குரலை வேதத்திலே நாம் கேட்கிறோம். ஆவியும், ஜீவனுமான வேத வசனங்களை வாசிப்பது நமக்கு பெரிய பாக்கியமாகும். இரவும் பகலும் வேதத்தின் மேல் தியானமாயிருக்கும்போது, அது இன்னும் அதிக பாக்கியத்தைக் கொண்டு வருகிறது. மட்டுமல்ல, கர்த்தருடைய வார்த்தையிலே நீங்கள் எப்பொழு தும் நிலைத்திருக்க வேண்டும். “வார்த்தையிலே நிலைத்திருங்கள்” என்று சொல்லு கிற இயேசுகிறிஸ்து, தம்முடைய உபதேசத்திலும் நிலைத்திருங்கள் என்கிறார். “இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத் திருந்தால், மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்” என்றார் (யோவா. 8:31).

கர்த்தருடைய வார்த்தைகள் உங்களைத் தேற்றுகிறது, ஆற்றுகிறது, ஆறுதல்படுத்து கிறது. அதே நேரம், அவருடைய உபதேசங்கள், உங்களைக் கட்டியெழுப்புகிறது. கிறிஸ்துவிலே ஒரே மாளிகையாய் விளங்கும்படி, ஆவிக்குரிய ஜீவியத்தை மேன்மை யாகக் கட்டி முடிக்கிறது. ஆகவே, கர்த்தருடைய வார்த்தைகளாகிய வாக்குத்தத்தங் களும் உங்களுக்கு அவசியம். உபதேசங்களும் உங்களுக்கு அவசியம்.

கிறிஸ்துவின் சில வார்த்தைகள், நோய்களைக் குணமாக்கி, அற்புதங்களை கொண்டு வந்தது. அவர் வார்த்தையினால் பிசாசுகளைத் துரத்தும்போது, ஜனங்கள் விடுதலையடைந்தார்கள். மகிழ்ச்சியாயிருந்தது. ஆனால் உபதேசம் என்று வந்த போது, அவைகள் கடுமையாய் இருக்கிறதைக் கண்டார்கள். இதை யார் பின்பற்ற முடியும் என்று சொல்லி, பின் தங்க ஆரம்பித்தார்கள். இயேசு சொன்னார், “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ, அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்” (யோவா. 7:16,17).

செடி வளருவதற்கும், கனி கொடுப்பதற்கும் சில சட்ட, திட்ட உபதேசங்கள் இருக்கின்றன. ஒரு செடி கனி கொடுப்பதற்கு நல்ல தண்ணீர், நல்ல சூரிய வெளிச் சம் தேவை. வீணான கிளைகள் நறுக்கப்பட்டு, செடி சுத்திகரிக்கப்பட வேண்டும். அதுபோலவே, ஆண்டவரும், தனக்குப் பிரியமில்லாத கிளைகளை நறுக்குவார். ஆபிரகாமை விட்டு லோத்தைப் பிரித்தார். ஆகார், இஸ்மவேல் என்ற களைகளை நறுக்கினார். குடும்பத்தை சுத்திகரித்தார். வேத வசனத்துக்கு விரோதமாக ஏதாகிலும் உங்களுடைய வாழ்க்கையில் இருக்குமானால், அவைகளை தீர்மானமாய் வெட்டி யெறியப்பட வேண்டியது அவசியம். ஆகாத கொடிகள், கிளைகள் நறுக்கப்பட வேண்டும். “ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” (1 கொரி. 15:33)
கனி கொடுப்பது எப்படி? முதலாம் சங்கீதம் நமக்கு அதை அறிவுறுத்துகிறது. 1) துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்கக்கூடாது. 2) பாவிகளுடைய வழியில் நிற்கக்கூடாது. 3) பரியாசக்காரர் உட்காருமிடத்தில் உட்காரக்கூடாது. ஏற்றுக்கொள்ள வேண்டியவைகள் என்ன? கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்க வேண்டும். இரவும், பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்க வேண்டும்.

கர்த்தருடைய கட்டளைகளும், உபதேசங்களும் எளிதானவைகள்தான். ஞானஸ் நானம் எடுப்பதால் யாரும் குறைந்துவிடப்போவதில்லை. அப்படி சந்தோஷமாய் ஞானஸ்நானம் எடுக்கும்போது, கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றுகிறோம் என்ற மன மகிழ்ச்சி உங்களுடைய உள்ளத்தில் வரும். ஆகவே, தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வசனத்தில் நிலைத்திருங்கள்.

நினைவிற்கு:- “ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும், பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்” (1 யோவா. 2:24).