நிலைத்திருங்கள்!

“நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவா. 15:5).

நீங்கள் கனி கொடுக்க விரும்பினால், எப்போதும் இடைவிடாமல் கர்த்தரில் நிலைத்திருங்கள். யோவான் 15-ம் அதிகாரத்தில், “நிலைத்திருங்கள்” என்ற வார்த்தை, பதிமூன்று முறை திரும்பத் திரும்ப வருகிறது. நம் ஆண்டவர் ஒரு முறை சொன்னாலே போதும், அது அசைக்க முடியாத சத்தியமாயிருக்கும். ஆயினும் சிலவற்றை சொல்லும்போது, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று உறுதிப்படுத்துகிறார். அதுபோலவே பதிமூன்று முறை, “நிலைத்திருங்கள்” என்று சொன்னால், அது எவ்வளவு முக்கியமானது!

ஒரு வேடிக்கையான கதை ஒன்று உண்டு. ஒரு மரத்தில் அழகாய் இருந்த இலை ஒருநாள் அலுத்துக்கொண்டது. “நான் ஏன் இந்த மரத்திலே ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்? இந்த மரத்தைவிட்டுப் பிரிந்து விட்டால், எவ்வளவு ஜாலியாக தென்றல் காற்றிலே மிதந்துச் செல்லலாம்,” என்று எண்ணி, “மரமே, உனக்கு ஒரு வந்தனம். நான் சுயாதீனமாய் சென்று, உலகத்தை அனுபவிக்க விரும்புகி றேன்” என்று சொல்லி பிரிந்தது.

அதுபோலவே, ஒரு பெரிய மலையிலிருந்து ஒரு மண் கட்டி பெயர்ந்து, உருண்டு வந்து, உலகத்தை சுற்றிப் பார்க்க எண்ணினது. இந்த இலையும், மண் கட்டியும் ஒன்றையொன்று சந்தித்து நண்பர்களானார்கள். இருவரும் இணைந்து உலகமெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் என்று தீர்மானித்தார்கள்.

ஆனால், கொஞ்ச நேரத்திற்குள் எல்லாம், பெரும் புயல் அடித்தது. இலை பயந்து, நடுங்கி, “ஐயோ, நான் கிழிந்து ஒன்றுமில்லாமல் போய் விடுவேன் போல் இருக்கிறதே. தென்றல் காற்று இனிமையாக வீசும் என்று பார்த்தால், புயல் காற்று மோதுகிறதே” என்று நடுங்கியது. அதுபோல மண் கட்டியும், “ஐயோ, திடீரென்று பெரும் மழை பெய்கிறதே, நான் கரைந்து ஒன்றுமில்லாமல் போய் விடுவேனே,” என்று பயந்தது. அவர்கள் பயப்பட்ட படியே நடந்தது.

தேவபிள்ளைகளே, நீங்கள் குடும்பத்திலும், கர்த்தரிலும் நிலைத்திருப்பதுதான் உங்களுடைய பெலன். கர்த்தருடைய பாதுகாப்பிலே அடங்கியிருக்கும்போதுதான், உங்களால் கனி கொடுக்க முடியும். கர்த்தரைவிட்டு தனியாய் பிரிந்துபோனால், உங்களுடைய நித்தியத்தை அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலில் அல்லவா செலவழிக்க வேண்டும்? ஒரு பக்தன் சொன்னான் ‘
With Christ I am a Hero. Without Christ I am a Zero.’ இயேசுவோடு இணைந்திருந்தால், நீங்கள் பலவான்கள், வல்லவர்கள். இயேசுவிலே நிலைத்திராவிட்டால், நீங்கள் வெறும் காற்றுபோன பலூன்கள்தான். பியூஸ் போன பல்புகள்.

நீங்கள் கர்த்தரில் நிலைத்திருந்தால், முழு பரலோகமும் உங்களோடிருக்கும். ஆயிரம், பதினாயிரம் தேவதூதர்கள் உங்களோடிருப்பார்கள். உலகமெங்குமிருக்கிற பரிசுத்தவான்களும், உங்களுக்காக ஜெபித்து, பலப்படுத்துவார்கள். நீங்கள் கனிதரும் வாழ்வு வாழ்ந்து, கர்த்தரைப் பிரியப்படுத்துவீர்கள். ஆனால் கிறிஸ்துவில் நிலைத்திரா விட்டால், அது போன்ற பரிதாபம் வேறு ஒன்றுமில்லை. அப்படிப்பட்டவர்கள் வானத்தின் கீழே திறந்துவிடப்பட்ட நிலைமையில், அனாதைகளாக நிம்மதி யற்றவர்களாவார்கள். ஆகவே நீங்கள் கனிகொடுக்க விரும்பினால், கர்த்தரில் நிலைத்திருங்கள்.

நினைவிற்கு:- “சகல மனுஷரே, கேளுங்கள், நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்க ளோடிருப்பார். நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்” (2 நாளா. 15:2).