நல்ல கனிகளைத் தருகிறவர்கள்!

“நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால், என் பிதா மகிமைப்படுவார். எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” (யோவா. 15:8).

உங்களைக் குறித்து ஆண்டவருக்கு ஒரு நோக்கமுண்டு. முதலாவது, நீங்கள் கர்த்தருக்கு நல்ல சுவையான கனி கொடுக்க வேண்டும். இரண்டாவது, மிகுந்த கனிகளைக் கொடுக்க வேண்டும். மூன்றாவது, உங்களுடைய கனியுள்ள ஜீவியத்தைப் பார்த்து, ஜனங்கள் பிதாவை மகிமைப்படுத்த வேண்டும். தேவபிள்ளைகளே, நீங்கள் கனியுள்ள வாழ்க்கை வாழுகிறீர்களா?
ஆரம்ப நாட்களில், திருப்பத்தூர் உபவாச முகாமிலே, அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே, காப்பி, மற்றும் உணவு பரிமாறுவதுண்டு. அந்த ஆலமரம் பழுக்கிற காலத்திலே, மரம் முழுவதும் சிகப்பான கனிகளால் நிரம்பியிருக்கும். ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து, கனிகளை உண்டு, மகிழும்.

அந்த ஆலமரத்தில், வருடத்திற்கு வருடம் பழங்கள் அதிகமாகிக் கொண்டே யிருக்கும். ஏன்? அந்த ஆலமரம் சொல்லும், “சகோதரனே, கடந்த ஆண்டு கனி தேடி, ஆயிரம் பறவைகள் என்னிடம் வந்தன. இந்த ஆண்டுக்குள் அவைகள் கூடு கட்டி, முட்டையிட்டு பொரித்து எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஆகவே அவைகளுக்கும் சேர்த்து, நான் இரண்டாயிரம் கனிகளைக் கொடுக்கிறேன். அடுத்த ஆண்டு, நான் மூவாயிரம் கனிகளைக் கொடுக்க வேண்டும்.”
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பாரதியார் பாடினார். “நாற்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் ஓர் உடைமை.” ஆனால் இப்போது 130 கோடிக்கு மேலாக, இந்திய ஜனத்தொகை பெருகிவிட்டது. உலகத்தார் பெருகும்போது, இரட்சிக்கப்பட்டவர்களின் தொகை, ஆவிக்குரியவர்களின் தொகை, இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், அல்லவா?
முந்தின காலத்தில், சம்பா நெல் விளைய ஆறு, அல்லது ஏழு மாதங்களாகும். ஆனால் இப்பொழுது ஜனம் பெருகுகிறபடியால், மூன்று மாதங்கள் விளையக்கூடிய புது வகை நெல்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். ‘ஐ ஆர் 20’ போன்ற ரக நெல்கள் இரண்டே மாதத்தில் அறுவடைக்கு வந்துவிடுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பரலோக அரசாங்கம், மிகுதியான கனிகளை உங்களிடம் எதிர்பார்க்கிறது.

தேவபிள்ளைகளே, உங்களுடைய ஆவிக்குரிய கனிகளின் மூலமாக, இயேசுவை வெளிப்படுத்துங்கள். உங்களுடைய வாய் பேசுவதை விட, உங்களுடைய ஆவிக்குரிய கனிகள் நிறைந்த இனிமையான வாழ்க்கை பேசட்டும். உங்களுக்கு ஆவிக்குரிய வரங்களும் தேவை, கனிகளும் தேவை. அந்த கனிகள் மிகுதியாயிருக்க வேண்டும்.

ஏழ்மை நிலைமையிலிருந்த ஒரு குடும்பத்தாரின் ஜெபத்தைக் கேட்டு கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களுடைய இனத்தவர்கள், ஊழியக்காரர்கள், தங்கள் ஊழியங்களுக்காகவும், காணிக்கைகளுக்காகவும் அவர்களை அணுகினார்கள்.

அவர்கள் முகம் கோணினபோது, கர்த்தர் சொன்னார், “என் மகனே, உன்னை நான் கனிதரும் மரமாய் வைத்திருக்கிறேன். ஆகவே உன்னைத் தேடி வருகிறவர்களைப் பார்த்து முகம் கோணாதே. நீ மிகுதியான, கனிகொடுப்பாயானால், இன்னும் நான் உன்னை உயர்த்தி ஆசீர்வதிக்க ஆவலாயிருக்கிறேன்” என்றார்.

நினைவிற்கு:- “என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப் போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்” (யோவான் 15:2)