புளிப்புள்ள பழங்கள்!

“பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள். பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன?” (எசேக். 18:2).

தன் தோட்டத்தில், கனிக்காகவே மரத்தை நாட்டுகிற எஜமான், குறிப்பிட்ட காலம் வரும்போது, நிச்சயமாகவே கனியைத் தேடி, எதிர்பார்ப்போடு தோட்டத் துக்கு வருவான். அவன் கனியை எதிர்பார்த்தால், தவறு ஒன்றுமில்லையே. அன்றைக்கு கர்த்தர் அத்திமரத்தை நோக்கி வந்தபோது, அங்கே இலைகள் தான் காணப்பட்டன (மாற். 11:13). இஸ்ரவேலரிடத்தில் கனி தேடி வந்தபோது, அது தனக்குத்தானே, கனி கொடுத்துக் கொண்டிருந்தது (ஓசியா 10:1). செழிப்பான மேட்டிலுள்ள திராட்சச்செடி, கசப்பான கனிகளையே கொடுத்தது (ஏசா. 5:4). ஆனால் இங்கே சொல்லப்பட்ட திராட்சைப் பழங்களோ, புளிப்பானவைகளாயிருந்தன.

மதுரையிலிருந்து சென்னை செல்லும் வழியிலே கொடை ரோடு என்ற ஸ்டே ஷன் வரும். கொடைக்கானலில் விளைந்த மிக அருமையான மலைப் பழங் கள், வாழைப்பழங்கள், பன்னீர் திராட்சை, ஆரஞ்சுகள் என்று பலவிதமான கனி வகைகள் கிடைக்கும். அங்கே புகை வண்டி நிற்கும்போது, ஜனங்கள் இறங்கி வாங்குவார்கள்.

அங்கே ஒருவன், தலையிலே பலவகை பழங்களை சுமந்து விற்று வந்தான். நான், பழம் எப்படி? என்ன விலை? என்று கேட்டபோது, சேம்பிள் என்று சொல்லி ஐந்து ஆறு பழங்களைக் கொடுத்தான். அது பன்னீர் திராட்சை. நல்ல இனிப்பாக இருந்தன. ஆகவே அவன் பிளாஸ்டிக் பையிலே அடைத்து வைத்திருந்த பழங்களை, விலை கொடுத்து வாங்கிவிட்டேன். வீட்டுக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தபோது, அவன் ஏமாற்றிவிட்டான் என்பதை கண்டுகொண்டேன். அதிலிருந்த பழங்கள் சேம்பிள் கொடுத்தப் பழங்களைப் போல அல்லாமல், மகா புளிப்பாய் புளித்தன. என் பற்களெல்லாம் உதிர்ந்து கொட்டிப்போய் விடுமோ என்று, பயப்பட வேண்டியதாயிற்று. ஏமாற்றம் தந்த பழங்கள் அவை.

சில கனிகள் ருசியாயிருக்கும் என்று நாம் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். ஆனால் அவைகளோ, நமக்குப் புளித்த அனுபவங்களைத்தான் தருகின்றன. மனிதருக்குள்ளும் புளித்த கனிகளைக் கொடுக்கிற, ஏராளமான மக்கள் உண்டு அல்லவா? இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்கள் அநேகர் உண்டு.
ஆண்டவர் மூன்று வகையான புளிப்புகளைக் குறித்து பேசினார். பரிசேயர் என்பவரின் புளித்தமா. சதுசேயர் என்பவர்களின் புளித்தமா. ஏரோதின் புளித்த மா (மத். 16:6,11, 12, மாற். 8:15). பரிசேயருடைய புளித்தமா, தவறான உபதேசங் களாயிருக்கின்றன (மத். 16:12).பரிசேயருடைய புளித்தமா, மாய்மாலமாயிருக்கின்றன (லூக். 12:1). ஏரோதின் புளித்தமா, மகா வஞ்சகமாயிருக்கிறது (மாற். 8:15).

இந்தப் புளிப்புகளைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாயிராவிட்டால், அந்த புளிப்பினால் உங்களுடைய வாழ்க்கையே கூசிப்போகும். கொஞ்சம் புளித்தமா, பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்கிவிடுமே (1 கொரி. 5:6).

சுய ஞானத்தினால் வரும் ஆலோசனைகளும், புளிப்பை உண்டாக்கி, வாழ்க்கையை நாசமாக்கிவிடக்கூடும். ஆகவே துர்க்குணம், பொல்லாப்பு என்னும் புளித்தமாவை அப்புறப்படுத்துங்கள். உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத் தோடே பஸ்காவை ஆசரிக்கக்கடவோம் (1 கொரி. 5:8).

நினைவிற்கு:- “அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும். புளிப்புள்ள அப்பம், உன்னிடத்திலே காணப்படவேண்டாம். உன் எல்லைக்குள் எங்கும் புளித்த மாவும் உன்னிடத்தில் காணப்பட வேண்டாம்” (யாத். 13:7).