கனிகளாலே அறிவீர்கள்!

“அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். முட்செடிகளில் திராட்சப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?” (மத். 7:16).

இயேசு கிறிஸ்து, கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரித்து சொன்னார். “தீர்க்க தரிசிகள் என்று வருகிற எல்லோரையும் நம்பாதிருங்கள். ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலே அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளாலே அவர்களை அறிவீர்கள்.”

சாத்தானும், ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டு, ஜனங்களை வஞ்சித்துக்கொண்டிருக்கிறான். பொய்யான அற்புதங்களையும், அடையாளங் களையும் நிகழ்த்தி, தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் கூட, பாதை விலகிப் போகப் பண்ணுகிறான். அப். யோவான் எழுதுகிறார், “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” (1 யோவா. 4:1). ஆம், வெளித்தோற்றத்தின் மூலமாக ஒருவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாது, அவர்களுடைய கனிகளை கவனித்து அறிய வேண்டும்.

நல்ல மரம், அது ஒருநாளும் கெட்ட கனிகளைக் கொடாது. அடுத்தது, கெட்ட மரம். அது ஒருநாளும் நல்ல கனிகளைக் கொடாது. ஏதேன் தோட்டத்திலே கர்த்தர் இரண்டு மரங்களை வைத்திருந்தார். ஒன்று, நல்ல மரம். அதற்கு ஜீவ விருட்சம் என்று பெயர். அடுத்த மரம், கெட்ட மரம். அது நன்மை தீமை அறியத்தக்க விருட்சம். பாருங்கள்! இந்த உலகத்திலே இரண்டு வல்லமைகள் உண்டு. ஒன்று, தேவனுடைய வல்லமை, அது நல்ல வல்லமை. அடுத்தது, கெட்ட வல்லமை. அது சாத்தானுடையது. கர்த்தர் நல்ல தீர்க்கதரிசிகளை ஏற்படுத்தியிருக்கும்போது, சாத்தான் கள்ளத்தீர்க்கதரிசிகளைக் கொண்டு வருகிறான். ஒரு பக்கத்தில் கனிதரும் செடிகள். மறுபக்கத்தில் முட்செடிகள். சில பழங்கள், விஷத்தன்மை யுள்ளவைகளாயிருந்து, உடலுக்கு கெடுதியை ஏற்படுத்தும்.

சிலர் பக்தி வேஷம்போட்டுக் கொண்டு, கையிலே வேத புத்தகத்தோடு உங்களுடைய வீட்டுக்கு வருவார்கள். அவர்களை ஏற்றுக்கொள்ளும்போது, பலவித உபதேசங்களுக்குள் உங்களை குழப்பி விடுவார்கள். அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு வருகிற ஓநாய்கள். அரசாங்கம் நல்ல நோட்டுகளை அடித்தால், சில கொள்ளைக்காரர்களோ, கள்ள நோட்டுகளை அடிக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து, கனி கொடுக்கிற வாழ்க்கையை மட்டும் சொல்லி நிறுத்தி விடவில்லை. “கனிகளால் அறியுங்கள்” என்று, அவைகளை பகுத்துணருகிற கிருபைகளையும் நமக்குப் போதித்திருக்கிறார். ஒரு மனுஷனுடைய உபதேசங்கள், பிரசங்கங்கள், தீர்க்கதரிசனங்களை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, அவனிலே எப்படிப்பட்ட கனிகள் இருக்கின்றன? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ராஜாவாயிருந்த சவுல், தேவ ஆவியால் நிரப்பப்பட்டபோது, சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவராய், நல்ல தீர்க்கதரிசனம் சொன்னார். அதே சவுல், கர்த்தருக்கு கீழ்ப்படியாமற்போனபோது, பொல்லாத ஆவியினால் பீடிக்கப்பட்டவராய் இருந்தார். ஈட்டியை ஏந்தியிருந்தார். தேவபிள்ளைகளே, கனிகளினால் தேவ ஜனங்களை அறிந்து கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “அவன் (சாத்தான்) பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்” (யோவா. 8:44). “அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே” (2 கொரி. 2:11).