கிறிஸ்துவின் பூரண வளர்ச்சி!

“அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்” (எபேசி. 4:13).

லண்டன் மாநகரில், ‘தேம்ஸ்’ என்ற நதிக்கரையிலே, அநேக கூலியாட்களின் மத்தியிலே, ஒரு போதகரும் நின்று கொண்டிருந்தார். “ஆண்டவரே, இன்றைக்கு ஒரு ஆத்துமாவையாவது, நான் ஆதாயம் செய்ய வேண்டும்” என்று ஜெபித்துக் கொண்டிருந்தார். அதிலே ஒரு துஷ்ட மனிதன், அவரைப் போதகர் என்று அறியாமல் கேலியும், பரியாசமும் செய்து, அந்த நதிக்குள் அவரைத் தள்ளிவிட்டான். அவர் தலையில் சுமந்த சரக்குகளோடு, தொப்பென்று நதிக்குள் விழுந்தார்.

அவனும், மற்றவர்களும் அவரை கேலி செய்தார்கள். அவர் கரையேறினபோது, சிரித்த முகத்தோடும், தெய்வீக அன்போடும் அவனோடு பேசினார். அப்போது அவன் மனந்திறந்து, “ஐயா, நான் கூலியாள் அல்ல. நான் ஒரு பெரிய டாக்டர். மதுபானத்திற்கு அடிமையாகி, என் மனைவி, பிள்ளைகளை இழந்தேன். இப்போது கொஞ்ச ஆதாயத்திற்காக, கூலி வேலை செய்கிறேன்,” என்றான், கண்ணீரோடு.

போதகர் அவனை ஆறுதல்படுத்தினது மட்டுமல்ல, தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து, உணவு கொடுத்து, உபசரித்து, அவனை இரட்சிப்புக்குள்ளே நடத் தினார். அவன் ஆவியின் அபிஷேகம் பெற்றான். அவனுடைய மனைவி, பிள்ளை களோடு மீண்டும் மகிழ்ச்சியோடு வாழும்படி, அந்தப் போதகர் முயற்சி செய்தார். போதகருடைய வாழ்க்கையிலே ஆவியின் கனிகள் அத்தனையும் காணப்பட்டது. உங்களுடைய போராட்ட நேரங்களிலும், பிரச்சனை நேரங்களிலும் கூட, நீங்கள் கர்த்தருக்கென்று கனிகொடுக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.

கிறிஸ்துவினுடைய வாழ்க்கையிலே, ஆவியின் கனிகள் அத்தனையும் அவரிடத் தில் காணப்பட்டது. ஒரு பக்கத்தில் பிதாவோடு ஆழமான ஐக்கியங்கொண்டு, அவரை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார். மலர்களைத் தேடி வண்டினங்கள் வருவதுபோல, கனிகளை விரும்பி ஆயிரக்கணக்கான பறவையினங்கள் வருவது போல, திரளான ஆத்துமாக்கள் அவரிடத்திலே வந்துகொண்டேயிருந்தார்கள். அற்புதங்களையும், ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொண்டார்கள். சாபங்கள் நீங்கி, ஆசீர்வாதத்தைத் சுதந்தரித்தார்கள்.

கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக, பூரண புருஷ ராகும்படி, கர்த்தர் உங்களை அழைத்திருக்கிறார். அப்படிப்பட்ட நீங்கள் பூரணப் படும்போது, உங்களைக் காண்கிறவர்கள், உங்களிலே கிறிஸ்துவைக் காண்பார்கள். ஆவியின் கனிகளைக் காண்பார்கள்.

ஒரு தேவ மனிதன், ஆவியின் கனிகளை வர்ணித்து கூறும்போது, ‘அன்பு’ என்றால், கீழ்ப்படிதலின் ஊற்று. ‘சந்தோஷம்’ என்பது, பரிசுத்தமான மகிழ்ச்சி. ‘சமாதானம்’ என்பது, நம்பிக்கையின் வெளிப்பாடு. ‘நீடிய பொறுமை’ என்பது, அமரிக்கையின் தோழன். ‘தயவு’ என்பது, அன்பின் இனிய குமாரத்தி. ‘நற்குணம்’ என்பது, கிருபையின் இலக்கு. ‘விசுவாசம்’ என்பது உத்தமம். ‘சாந்தம்’ என்பது, கிறிஸ்துவின் சிந்தை. ‘இச்சையடக்கம்’ என்பது, விசுவாசத்தின் ஆளுகை என்றெல்லாம் வர்ணித்தார்.

தேவபிள்ளைகளே, உங்களால் முடியாத காரியங்களை கர்த்தர் உங்களிடத்தில் கேட்கவில்லை. பரிசுத்த ஆவியின் மூலம் இந்த ஆவியின் கனிகளை, நீங்கள் மற்றவர்களுக்கு காண்பிக்கிறது மட்டுமல்ல, கனியுள்ள பிரயோஜனமான வாழ்க்கை வாழும்படி தீர்மானம் செய்வீர்களாக. அதை பரலோகம் விரும்புகிறது மட்டுமல்ல, எதிர்பார்க்கிறது.

நினைவிற்கு:- ‘என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக” (உன். 4:16).