அம்பறாத்தூணி!

“ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு, வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடு” (ஆதி. 27:3).

தன் வயதான நாட்களில், ஈசாக்கு தன்னுடைய மூத்த மகனாகிய ஏசாவை நோக்கி, “என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கு நீ போய், எனக்காக வேட்டையாடி, அதை எனக்குப் பிரியமாய் இருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்துக்கொண்டு வா” என்றார்.

கர்த்தர் காட்டு மிருங்கங்களையும் சிருஷ்டித்தார், வீட்டு மிருகங்களையும் சிருஷ்டித்தார். வீட்டிலே ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள், புறாக்கள் என்று பல பறவைகளும் உண்டு. ஆனால் ஈசாக்கு விரும்பினது, “வேட்டையாடின காட்டு மிருகங்களின் இறைச்சியாகும்.” என்னமோ, அதிலே அவருக்கு ஒரு ஆசை வைத்திருந்தார். ஈசாக்கின் மூத்த குமாரனாகிய ஏசா நல்ல வேட்டைக்காரன் என்பதும், வேட்டையாடுவதற்கான ஆயுதங்கள் அவரிடத்திலே இருக்கிறது என்பதையும் ஈசாக்கு அறிந்திருந்தார். இங்கே “அம்பறாத்தூணி” என்று அழைக்கப்படுவது, “வில்லையும், அம்பையும்” குறிக்கிறது. அதுவும் யுத்த ஆயுதங்களில் ஒன்று.

பழைய ஏற்பாட்டில் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்று சொல்லுவதுபோல, வில் வீரர்படையும் இருந்தது. தூரத்திலிருந்து வில்லை எய்வார்கள். அது குறிப்பிட்ட நபரை நோக்கிச் சென்று பாயும். சில வில்லிலே அக்கினி பந்தங்களை வைத்து ஏந்தி, எதிரிகளின் படைகளை முறியடிப்பார்கள்.

ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்கும், காட்டுமிருகத்தைப் போன்ற பொல்லாத சுபாவமுடைய மிருக ஆவிகளோடு யுத்தம் இருக்கிறது. ஆண்டவர் தன்னுடைய சிருஷ்டிப்பின் ஆறாவது நாளிலே காட்டு மிருகங்களை சிருஷ்டித்தார் (ஆதி. 1:24). சிங்கம், கரடி, புலி, ஓநாய் போன்றவை பொல்லாதவைகள். மனுஷரை அழிக்கக்கூடியது. இவைகள் மனுஷரிலிருந்து புறப்படுகிற, பொல்லாத தீய குணத் திற்கு, பொல்லாத சிந்தைகளுக்கு ஒப்பாயிருக்கின்றன.

இயேசுவின் சிலுவைக் காட்சியை சங்கீதக்காரன் 22-ம் சங்கீதத்திலே விவரித்த போது, இந்த காட்டுமிருகங்களைப் பற்றி சொன்னார். “பாசானின் எருதுகள், நாய் கூட்டம். என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும். நான் காண்டாமிருகத்தின் கொம்புகளிலிருக்கும்போது, எனக்கு செவிகொடுத்தருளும் என்று மன்றாடினார் (சங். 22:12,16,21). ஈசாக்கிலும் பெரியவரான, கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு வர வேண்டுமென்றால், உங்களுக்குள்ளிருக்கிற தீய காட்டுமிருகங்களோடு யுத்தம் பண்ணி, நீங்கள் ஜெயிக்க வேண்டும்.

ஒரு தேவனுடைய ஊழியக்காரர், “ஆண்டவரே, என்னைச் சுத்திகரியும்” என்று கேட்டு உபவாசித்து ஜெபித்தபோது, கர்த்தர் அவருக்குள்ளிருக்கிற நான்கு பொல்லாத காட்டு மிருகங்களின் சுபாவங்களை வெளிப்படுத்திக் காண்பித்தார். கர்த்தர் சொன்னபடியே அவைகளுக்கு விரோதமாய் ஜெபித்தபோது, ஒவ்வொன்றாக அவரை விட்டு விலகிப் போனது.

நோவாவின் காலத்திலே ஜலப்பிரளயத்தை அனுப்பி, காட்டு மிருகங்களையும் அழித்துப் போட்ட ஆண்டவர் (ஆதி. 7:21), உங்களுக்குள்ளிருக்கும் எல்லா தீய சுபாவங்களையும் அழித்துப்போடுவார். உங்களுக்குள் காட்டு மிருகங்கள் பெருகக்கூடாது. கிறிஸ்துவின் தெய்வீக சுபாவங்கள் வளரட்டும். கிறிஸ்துவின் குணாதிசயத்தில் பூரணப்படுங்கள்.

நினைவிற்கு:- “அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான். அவர்கள் நாணமடையாமல் ஒலிணிகவாசலில் சத்துருக்களோடே பே‘வார்கள்” (சங். 127:6).