அன்பினாலே அறியுங்கள்!

“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்” (யோவா. 13:35).

நீங்கள் கனிகளால் அறியப்படுகிறீர்கள். இரண்டாவது, தேவ அன்பினால் அறியப் படுகிறீர்கள். நீங்கள் தேவனுடைய அன்பை ஜனங்களுக்கு வெளிக்காட்டும்போதும், தேவ அன்பினாலே நிரம்பியிருக்கும்போதும், நீங்கள் தேவனுடைய சீஷர்கள் என்பதை உலகத்தார் அறிந்துகொள்ளுகிறார்கள்.

ஒரு பழைய பாடல் உண்டு. “என்னைக் காண்போர் உம்மைக் காண, உம் சாயல் என்னில் வேண்டும்.” ஆம், என்னைக் காண்பவர்கள் என்னிலே, என்னைக் காணக் கூடாது. கிறிஸ்துவின் குணாதிசயங்களைக் காண வேண்டும். ஆவியின் கனிகளை காண வேண்டும். போதகர் பால் யாங்கி சோ, தன் ஊழியத்தின் ஆரம்ப நாட்களில், மிகக் கண்டிப்பான நியாயத்தீர்ப்பு பிரசங்கங்களை செய்வார். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல, கொடிய அனல் பறக்கும் அவர் பிரசங்கங்களில், சாபமான, நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் வெளியே வரும்.

அன்பின் செய்திகளோ, அரவணைப்பின் செய்திகளோ, தேற்றி உருவாக்கும் செய்திகளோ இல்லாதபடியால், போகப் போக சபையிலுள்ள மக்கள் மகிழ்ச்சியை இழந்தார்கள். ஒவ்வொருவராய் பிரிந்து செல்ல ஆரம்பித்தார்கள். கர்த்தர் ஒருநாள் அவரை உணர்த்தி, “பழைய ஏற்பாட்டிலுள்ள சீனாய் மலையில் அல்ல. புதிய ஏற்பாட்டிலுள்ள கல்வாரி மலையிலே நிற்கிறாய் என்று நீ உணர்ந்து தேவ அன்போடு பிரசங்கி” என்று சொன்னார். இதனால் ரோமர் 5:5-லே சொல்லப்பட்டபடி, பரிசுத்த ஆவியினால், தேவ அன்பு அவருடைய இருதயத்திலே ஊற்றப்பட்டது. கிறிஸ்துவின் அன்பை பிரதிபலித்து, அவருடைய மனதுருக்கத்தோடும், கண்ணீரோடும் பிரசங்கித்தார்.

வாழ்க்கையெல்லாம் பாடுகளையும், கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் அனுபவித்தவர்கள், ஆலயத்துக்கு வந்து, தேவனுடைய அன்பினால் தேற்றப்பட்டார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் யாரை சந்தித்தாலும், கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துங்கள். “கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக்கொடுத்து, நம்மில் அன்பு கூர்ந்தது போல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்” (எபேசி. 5:2).

ஒரு முறை சாது சுந்தர்சிங், அடர்ந்த காடு வழியாய் நடந்து போனபோது, ஒரு புலி அவருக்கு எதிர்கொண்டு வந்து, பயங்கரமாய் உறுமி சத்தமிட்டது. ஆனால் சாது சுந்தர் சிங் பயப்படாமல், அமைதியாய் அதோடு பேசி, “புலியே, நாம் இருவரும், ஒரே அன்புள்ள கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்டோம். கர்த்தர் என்னை நேசிக்கிறார். அந்த அன்பினால் நான் உன்னை நேசிக்கிறேன்,” என்று மனதுருக்கத்தோடே பேசிக்கொண்டு புலியின் அருகே வந்து தடவிக் கொடுத்தார். அதுவும் சாது சுந்தர் சிங்கை அன்போடு நக்கிக் கொடுத்தது.

தேவபிள்ளைகளே, உங்களுடைய பாதையில் ஒருவேளை கொடூரமான புலியைப் போன்ற சுபாவமுள்ள, தீய மனுஷர்கள் வரலாம். அப்போது அவர்களிடத்தில் நீங்கள் அன்புகூர்ந்தால், அந்த கொடிய மனிதரும் உங்களிடம் அன்புகூருவார்கள். அன்பின் மூலமாகவே பயங்கரமான குடிகாரனான கணவனையும் திருத்தலாம். வாயாடியான மனைவியையும் வழிக்குக் கொண்டு வந்து விடலாம். நீங்கள் அன்பு கூருகிறவர்களானால், அவர்களை ஆதாயப்படுத்திக்கொள்வீர்கள்.

நினைவிற்கு:- “என்னுடைய சந்தோஷம், உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும் , இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவா. 15:11).