தலைச்சீரா!

“இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத் தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” (எபேசி. 6:17).

யுத்தவீரர்கள் தங்களுடைய தலையை பாதுகாப்பதற்காக, சிரசில் எப்போதும் தலைச்சீராவை அணிந்திருப்பார்கள். இன்றைக்கும் இருசக்கர வாகனமாகிய மோட்டார் சைக்கிளிலே செல்பவர்கள், தங்களுடைய தலையிலே தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கட்டளையாகும். தலைச்சீரா என்பது, தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளுகிற ஓர் பாதுகாப்பு ஆயுதமாகும். ஒரு மனிதனின் சரீரத்திலுள்ள எல்லா அவயவங்களிலும், “தலை” மிக முக்கியமானது. பாதுகாக்கப்பட வேண்டியது.

“எண் ஜாண் உடம்புக்கு, சிரசே பிரதானம்” என்பார்கள். மனிதனுடைய தலையில்தான் விலையேறப்பெற்ற மூளை இருக்கிறது. அழகான பார்வை தரும் கண்கள் இருக்கின்றன. முகருகிற மூக்கு, சுவைக்கிற வாய், கேட்கிற காது அனைத்தும் சிரசில்தான் இருக்கின்றன. ஆகவே, தலைக்கு கவசம் மிகவும் முக்கியமானது.

ஒருவர் ரோட்டிலே போய்க் கொண்டிருந்தபோது, அவரை அறியாதபடி வானத் திலே ஒரு கருடன், விஷப்பாம்பு ஒன்றை, தூக்கி பறந்து சென்றது. ஆகாயத்திலே பாம்புக்கும், கருடனுக்கும் சண்டை ஏற்பட்டதால், கருடன் பாம்பைக் கீழே போட்டது. உயரத்திலிருந்து வந்த பாம்பு, கீழே அந்த மனிதனுடைய தலையிலே விழுந்ததும், கோபவெறியோடு கொத்தி அவனைக் கொன்று போட்டது. அவன் மட்டும் தலைக்கவசம் அணிந்திருந்தால், மேலேயிருந்து வரும் ஆபத்துக்குத் தப்புவிக்கப்பட்டிருந்திருக்க முடியும்.

மேலேயிருந்து என்ன விழுமோ என்று நமக்குத் தெரியாது. சில வேளைகளில் கற்கள் விழக் கூடும். பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்கள் விழக்கூடும். ஆகவே தலைச்சீரா அணிந்து, தீய எண்ணங்களுக்கும், தலையில் அலைமோதும் பாவ சிந்தனைகளுக்கும், இச்சைகளுக்கும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பல வகையான யுத்த ஆயுதங்களைக் குறித்து, அப். பவுல் எபேசி. 6-ம் அதிகாரத்தில் எழுதிக்கொண்டு வரும்போது, இந்த தலைச்சீராவுக்கு “இரட்சண்யம்” என்னும் பெயரை கொடுக்கிறார். “இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக்கடவோம்” (1 தெச. 5:8) என்று குறிப்பிடுகிறார். பழைய ஏற்பாட்டிலுள்ள ஏசாயா தீர்க்கதரிசி, “இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதி சரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்தி, வைராக் கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்” (ஏசா. 59:17).

கீழேயிருந்து சத்துரு தாக்கும்போது, பாதரட்சையால் அவனுடைய தலையை மிதிக்கிறோம், நசுக்குகிறோம். நெஞ்சை நோக்கி வரும் பட்டயத்திற்கும், ஈட்டிக்கும், அம்புக்கும் தப்பும்படி மார்க்கவசத்தை அணிகிறோம். அதே நேரம், மேலிருந்து, அல்லது வான மண்டலத்திலிருந்து சாத்தான் தாக்குகிற எல்லா தாக்குதலையும் முறியடிக்கும்போது, அதற்கு தப்பும்படி தலைச்சீராவை அணிந்திருக்க வேண்டியது அவசியம். பெலிஸ்தியனாகிய கோலியாத் தன் தலையை பாதுகாக்கும்படி வெண்கல சீராவைப் போட்டிருந்தான்.

தேவபிள்ளைகளே, உலகப்பிரகாரமான தலைச்சீரா அல்ல, இரட்சிப்பே உங்கள் தலைச்சீராவாயிருக்கட்டும். அந்த தலைச்சீரா உங்களுடைய எண்ணங்களையும், சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக பாதுகாத்துக்கொள்ளும்.

நினைவிற்கு:- “குதிரைவீரரே, குதிரைகளின்மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைச் சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள். ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களைத் தரித்துக் கொள்ளுங்கள்” (எரே. 46:4).