விசுவாசம் என்னும் கேடகம்!

“பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்க தாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள்” (எபேசி. 6:16).

“கேடகம்” என்பது, “யுத்த ஆயுதங்களில் ஒன்றாகும்”. இரண்டுவித ஆயுதங்கள் உண்டு. ஒன்று, உங்களைப் பாதுகாக்கக்கூடிய ஆயுதங்கள். கேடகம், தலைச்சீரா, அரைக்கச்சை, பாதரட்சை போன்ற தற்காப்பு ஆயுதங்கள் உண்டு. இரண்டாவது, எதிரிகளை தாக்குகிற ஆயுதங்கள். ஈட்டிகள், அம்புகள், பட்டயம் போன்றவைகள். இரண்டு வகையான ஆயுதங்கள் உங்களுக்குத் தேவை.

கர்த்தரே உங்களுக்கு கேடகமாயிருப்பார். அடைக்கலமும் கோட்டையுமாயிருப் பார். உங்களை பாதுகாத்து வெற்றியை கட்டளையிடுவார். ஆபிரகாமுக்கு கர்த்தர் வாக்குக்கொடுத்து, “ஆபிரகாமே, நீ பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்” (ஆதி. 15:1).

ஒருமுறை ஆபிரகாமின் உறவினான லோத்து, சில ராஜாக்களால் சிறைப் பட்டுப்போனார் என்று கேள்விப்பட்டவுடனே, ஆபிரகாம் தன் வீட்டிலிருந்த முந்நூற்றுப் பதினெட்டு பேருக்கு ஆயுதம் தரித்து, ராஜாக்களைப் பின் தொடர்ந்து போய், அவர்களை முறியடித்து சிறைபிடித்தார். லோத்தின் குடும்பத்தாரையும் சிறை மீட்டுக்கொண்டு வந்தார்.

எப்படி? அந்த வயதில் தைரியம் வந்தது. ஆம், கர்த்தர் தனக்கு கேடகமாயிருப் பதை அவர் எப்பொழுதும் உணர்ந்தார். அதுபோல அப். பவுலும், கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்ந்து, “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே, எல்லா வற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” என்று சொன்னார் (பிலி. 4:13).

வேதத்தில் அநேகம் பராக்கிரமசாலிகளைக் குறித்து வாசிக்கிறோம். ஒரு யுத்த வீரன் எவ்வளவுதான் பலசாலியாயிருந்தாலும், அவனை பாதுகாக்க கேடகம் மிகவும் அவசியம். “பராக்கிரமசாலிகளுடைய கேடகம்” என்று 2 சாமு. 1:21-லே வாசிக்கிறோம். பெலிஸ்தியரின் பராக்கிரமசாலியான கோலியாத், வெண்கலக் கேடகத்தை தரித்திருந்தான் (1 சாமு. 17:6). ஆனாலும் அந்த வெண்கலக் கேடகம், கோலியாத்துக்கு பாதுகாப்பாயிருக்கவில்லை. தாவீது சுழற்றி அடித்த கூழாங்கல், அவன் நெற்றியிலே பாய்ந்தது. வேரற்ற மரம்போல, கீழே சாய்ந்தான்.

உலகப்பிரகாரமான கேடகங்களல்ல. தேவபிள்ளைகளே, கர்த்தரே உங்களுக்கு மகா பெலனும், கேடகமுமாயிருப்பாராக. அவரைப் போல, பலத்த பராக்கிரமசாலி யார் உண்டு? வேதம் சொல்லுகிறது, “இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரம சாலியாக வருவார். அவர் தமது புயத்தினால் அரசாளுவார். இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது. அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது” (ஏசா. 40:10). “கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்” (ஏசா. 42:13).

இன்றைக்கு உலக தலைவர்களான ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்றவர்கள் தங்களுக்கு கேடகத்தைப் போன்று மெய்காப்பாளர்களை அமர்த்தியிருக்கிறார்கள். அவர்கள் சிறந்த பயிற்சி பெற்று, எந்த ஆபத்து நேரிட்டாலும், தங்கள் உயிரைக் கொடுத்தாகிலும் தலைவர்களைப் பாதுகாக்கிறார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தரே உங்களுக்கு கேடகமாகவும், மெய்காப்பாளர்களைப்போலவும் விளங்குவாராக.

நினைவிற்கு:- “கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார். ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள். தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்” (எரே. 20:11).