சிம்சோனும், சிங்கமும்!

“திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள் மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பால சிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது” (நியாயா. 14:5).

வேதத்திலே, சாத்தானும், “சிங்கம்” என்று அழைக்கப்படுகிறான். அவன் யாரை விழுங்கலாமோ, என்று வகைதேடிச் சுற்றித்திரிகிற சிங்கம் (1 பேது. 5:8). அதே நேரம், இயேசு கிறிஸ்துவும் “சிங்கம்” என்று அழைக்கப்படுகிறார். “அவர் யூதா கோத்திரத்துச் சிங்கமும், தாவீதின் வேருமானவர்” (வெளி. 5:5).

ஆனால் சாத்தானாகிய சிங்கம், தோற்கடிக்கப்பட்டவன். யூதா கோத்திரத்து சிங்கமாகிய இயேசு கிறிஸ்து, கல்வாரியிலே அவனுடைய தலையை நசுக்கிவிட்டார். உங்களை சாத்தானாகிய சிங்கம் மேற்கொள்ளாதபடி, தம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரப்புகிறார். கெர்ச்சிக்கிற ஒரு சிங்கம், சிம்சோனுக்கு எதிராய் வந்தபோது, “கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுகிறதுபோல், கிழித்துப்போட்டான்” (நியாயா. 14:6). ஆம், கர்த்தருடைய ஆவியானவரே, சிம்சோனுக்கு ஆயுதமாயிருந்தார்.

“சிம்சோன்” என்ற வார்த்தைக்கு “சூரியனைப் போன்றவன்” என்பது அர்த்தமாகும். அவன் பிறப்பதற்கு முன்பாகவே, கர்த்தரால் பெயரிடப்பட்டவன், முன் குறிக்கப்பட்டவன். பெலிஸ்தியரின் கைகளிலிருந்து இஸ்ரவேலை விடுதலையாக் கும்படி, தெரிந்துகொள்ளப்பட்டவன். மற்றும் யுத்த வீரனும், பலசாலியும், வல்லமையுள்ளவனுமாயிருந்தான். சிம்சோனுடைய பெலன் எதினாலே வந்தது என்று, எல்லோரும் ஆச்சரியப்பட்டு அவனைப் பார்த்தார்கள். ஆனாலும் சிம்சோனை சுற்றிச் சுற்றி, சத்துருக்கள் வந்துகொண்டேயிருந்தார்கள். உலகப்பிரகாரமான சிங்கத்தை, மேற்கொள்ளுவது சிம்சோனுக்கு எளிதாயிருந்தது. பின்பு, கழுதை தாடை எலும்பையெடுத்து, ஆயிரம் பெலிஸ்தியரை கொன்று போட்டார். முந்நூறு நரிகளைப் பிடித்து, எதிரிகளின் வெள்ளாண்மையை அழித்தார். ஆனாலும், சிம்சோனை விழ வைப்பதற்கு ஒரு கூட்டம் பிசாசுகள் ஆயத்த மாயிருந்தன. அவன் அறியாத ஒரு சோதனை சுற்றிச் சுற்றி வந்தது. சிம்சோனோ, அதை அறியவில்லை. எச்சரிக்கையாயிருக்கவில்லை.

சிம்சோனை விழச் செய்த பிசாசின் ஆவி என்ன? அதுதான் விபச்சார, வேசித் தன ஆவி. போகப்போக, அவன் கர்த்தருடைய ஆவியானவரால் நடத்தப்படாமல், வேசித்தன ஆவியினால் நடத்தப்பட்டார். திம்னாத்துக்குப்போய் பெலிஸ்தியரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணை கொண்டார். பிறகு, காசாவுக்குப் போய் அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனார். “அதற்குப் பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேக மாயிருந்தான்” (நியாயா. 16:4).

என்மேல் பெரிய அபிஷேகம் இருக்கிறது. யாருக்கும் இல்லாத பெலனும், வல்லமையுமிருக்கிறது என்ற அசட்டு தைரியத்திலே, வேசியிடம் மனந்திறந்து பேசி, தன் பெலத்தின் இரகசியத்தை அறிவித்தான். அவன் நித்திரையை விட்டு விழித்து, கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியாமல், எப்போதும் போல உதறிப் போட்டு வெளியே போவேன் என்றான். அந்தோ பரிதாபம்! பெலிஸ்தியர் அவனைப் பிடித்து, கண்களைப் பிடுங்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்கு களைப் போட்டு, சிறைச்சாலையிலே வைத்தார்கள். தேவபிள்ளைகளே , எப்போதும் எதிராளிகளைக் குறித்து ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். சிறு காரியமோ, பெரிய காரியமோ, ஜெபம் பண்ண மறவாதிருங்கள்.

நினைவிற்கு:- “எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்” (சங். 91:9).