ஒரு கோல்!

“உன் ஆயுதங்களோடே ஒரு சிறு கோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது” (உபா. 23:13).

இந்த மாதம் பல்வேறு போராயுதங்களைக் குறித்து நாம் தியானித்து வருகிறோம். நமக்கு ஒரு எதிரி உண்டு. அவன் சாத்தான். அவனோடுகூட பிசாசின் கூட்டங்களும், வான மண்டலத்தின் பொல்லாத ஆவிகளும் நம்மோடு போரிடுகின்றன. உலகம், மாம்சம், பிசாசு மூன்றும் நமக்கு விரோதமாய் எதிர்த்து நிற்கின்றன. கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமையை நமக்குள்ளே கொண்டு வருகின்றன.

கர்த்தரோ, நமக்கு ஆவிக்குரிய போராயுதங்களைத் தரிப்பிக்கிறார். நம்மை பாதுகாக்கவும், சத்துருவை எதிர்த்து நின்று போராடவும், ஜெயங்கொள்ளவும், சர்வாயுதவர்க்கங்களைத் தரிப்பிக்கிறார். “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவை களாயிருக்கிறது” (2 கொரி. 10:4) என்று அப். பவுல் சொல்லுகிறார்.

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்பார்கள். ஒரு கோலை வைத்துக் கொண்டு எப்படி யுத்தம் செய்வது? என்பதைக் குறித்து கர்த்தர் தாமே மோசேக்கு விளங்கப் பண்ணினார். கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையில் இருக்கிற அந்தக் கோலை தரையிலே போடு என்றார் (யாத். 4:2,3). தரையில் போட்டபின் அது பாம்பாக நெளிந்தது. மோசேக்கு பெரிய ஆச்சரியம். அப்படியானால், நான் அவ்வளவு நாளும் பாம்பையா (சாத்தானையா) என்னுடைய கையில் வைத்துக்கொண்டிருந் தேன். ஆம், மோசேயின் சுய ஞானம், சுய பெலன் எல்லாம் சாத்தானிடத்திலிருந்து வந்ததேயாகும். அந்த கோலினால் எகிப்தியனை அடித்து, கொலை செய்து, மண்ணிலே புதைத்தான்.

இப்பொழுது கர்த்தர் அந்த கோலை தன்னுடைய வல்லமையான ஆயுதமாக பயன்படுத்த சித்தமானார். அந்த கோல் எகிப்திலுள்ள மந்திரவாதிகளின் கோல்களை விழுங்கிப் போட்டது. அந்த கோலைக்கொண்டு எகிப்தின் நதியை அடித்தபோது, அது இரத்தமாய் மாறினது. புழுதியில் அடித்தபோது, எகிப்து முழுவதிலும் பேன் கள், வண்டுகள், கொள்ளை நோய்கள் ஏராளமாய் ஏற்பட்டது. அந்த “கோல்” என்பது, “கர்த்தருடைய வல்லமையைக்” குறிக்கிறது.

இஸ்ரவேலர் அமலேக்கியரோடு யுத்தம்பண்ண வந்தபோது, மோசே அந்த கோலை வானத்துக்கு நேராக உயர்த்தினார். அந்த கோல் ஊக்கமான ஜெபத்துக்கும், மன்றாட்டுக்கும் அடையாளமாயிருந்தது. அந்த கோல் உயர்ந்திருந்தபோது, இஸ்ரவேலர் எளிதாய் அமலேக்கியரை மேற்கொண்டார்கள். சிவந்த சமுத்திரத்துக்கு நேராக மோசேயும், இஸ்ரவேலரும் வந்து நின்றார்கள். பின்னால் பார்வோனும், அவனுடைய சேனையும் பின் தொடர்ந்தார்கள். இப்போது இஸ்ரவேலருக்கு வழி திறக்கவும், பார்வோனையும், அவனுடைய சேனையையும், சிவந்த சமுத்திரத்திலே தள்ளிவிடவும் மோசே அந்த சமுத்திரத்துக்கு நேராய் தன் கோலை நீட்டினார். அந்த கோல் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களுக்கு அடையாளமாயிருந்தது.

தேவபிள்ளைகளே, கர்த்தர் கொடுத்திருக்கிற போராயுதங்கள் சில உலகப்பிரகார மானவை, சில ஆவிக்குள்ளானவைகள். கர்த்தர் சொல்லுகிறபடி நீங்கள் செய்யும் போது, சிறிய சிறிய பொருட்கள் மட்டுமே போராயுதங்களாய் மாறி, உங்களுக்கு ஜெயத்தைக் கொடுக்கும். மோசேயிடம் கோல் இருந்தது. உங்களிடம் வேதாகமம் இருக்கிறது. கர்த்தர் ஏவுகிறபடி கர்த்தருடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

நினைவிற்கு:- “நீ எனக்குத் தண்டாயுதமும், அஸ்திராயுதமுமானவன். நான் உன்னைக் கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன். உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்” (எரே. 51:20).