அக்கினி அபிஷேகம்!

“நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி. 2:5).

கட்டுகளை உடைப்பதற்கும், பில்லிசூனியங்களைச் சுட்டெரிப்பதற்கும், பிசாசின் மேல் பூரணமான ஜெயம் எடுப்பதற்கும், அக்கினி அபிஷேகம் மிக மிக அவசியம். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்துக்கு, பிசாசு எவ்வளவு பயப்படுகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு அவனைச் சுட்டெரிக்கக்கூடிய பரலோக அக்கினிக்கும், அவன் பயப்படுகிறான். ஆகவே கட்டுகளை உடைக்கும் ஊழியத்திலே இறங்குகிறவர்கள், பரிசுத்த ஆவியின் அக்கினியினால், தங்களை முழுவதுமாய் நிரப்பிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

எனக்கு ஒரு வல்லமையான தேவனுடைய ஊழியரைத் தெரியும். அவர் இரட்சிப்பின் அனுபவத்திலே உறுதியாயிருந்தவர். ஜெபமும், கர்த்தர் மேல் வைராக் கியமும் அவருக்கு இருந்தது. அவர் ஜெபம்பண்ணினால், நோய்கள் குணமாகும். பிசாசுகள் ஓடிவிடும்.

ஆனால் அவரோ, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நம்புவதேயில்லை. அந்நிய பாஷையையெல்லாம் கேலி செய்து, இது பெந்தெகொஸ்தேக்காரனின் உளறுதல் என்று சொல்லுவார். விதண்டாவாதம் பண்ணுவார். ஆனால் அவர் இரட்சிப்பிலும், சாட்சியிலும், ஊழியத்திலும் உறுதியாயிருந்தார்.
பிசாசு துரத்துவதற்கு முன்பாக, மாற். 16:17,18-ம் வசனத்தை வாசித்து, ஜெபித்து விட்டுப் போய் துரத்துவார். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன, என் நாமத்திலே பிசாசுகளைத் துரத்துவார்கள் என்று எழுதியிருக்கிறது. நான் இரட்சிக்கப்பட்டு கர்த்தரை விசுவாசிக்கிறேன். பேய்கள், போய்த் தான் ஆக வேண்டும் என்று வைராக்கியமாய் சொல்லுவார்.

ஒருநாள் ஒரு பயங்கரமான பிசாசைத் துரத்தப்போனார். அநேகர் அதை தெய்வமாய் கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவர் வழக்கம்போல அதைத் துரத்த முற்பட்டார். அது இவரைப் பார்த்து ஏளனமாய் சிரித்து, “உன்னுடைய இரட்சிப்பின் அனுபவத்திலே குட்டி பேய்களையும், அசுத்த ஆவிகளையும் துரத்தினாய். என்னை துரத்த வேண்டுமென்றால், போய் பரிசுத்த ஆவியின் அக்கினியை பெற்றுக் கொண்டு வா.” என்று சொல்லி விரட்டிவிட்டது. கடைசி வரை அவரால், அந்தப் பிசாசைத் துரத்தவே முடியவில்லை.
அதுவரை எத்தனையோ ஊழியக்காரர்கள், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து சொல்லியும் நம்பாமல் இருந்தவர், இந்தப் பிசாசு சொன்னதும், அவர் சிந்திக்க ஆரம்பித்தார். திரும்பத் திரும்ப புதிய ஏற்பாட்டை வாசித்தார். பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி வந்தது ஒருபக்கம். அக்கினி மயமான நாவுகள் வந்தது இன்னொரு பக்கம் (அப். 2:3,4). அதுபோல நசரேயனாகிய இயேசுவை, பிதாவாகிய தேவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணினது ஒரு பக்கம். வல்லமையினால் அபிஷேகம் பண்ணினது இன்னொரு பக்கம், என்பவைகளை உணர்ந்தார்.

அதுபோல, அந்தகார வல்லமைகளின் ஆளுகையிலே முதலாவது நிற்பவன், லூசிபர் என்கிற சாத்தான். பிறகு அவனுடைய வல்லமை படிப்படியாக ஒவ்வொரு துரைத்தனங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மிருகம் என்ற அந்திக்கிறிஸ்து வருகிறான் (வெளி. 17:8,11). அதற்கு அடுத்ததாக, கள்ளத் தீர்க்கதரிசி வருகிறான் (வெளி. 16:13). ஆகவே, பரலோக அக்கினியோடு பிசாசுகளைத் துரத்துங்கள்.

நினைவிற்கு:- “உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக” (சங். 122:7).