மதிலும் அரணும்!

“அக்காலத்திலே, யூதா தேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு. இரட்சிப்பையே அதற்கு மதிலும், அரணுமாக ஏற்படுத்துவார்” (ஏசா. 26:1).

“தேவன் தரும் இரட்சிப்பு,” சாத்தானின் தாக்குதல்களிலிருந்து, நிச்சயமாய் உங்களை பாதுகாக்கக் கூடியது. இரட்சிப்பு, பெலனான நகரத்தைப் போன்றது. இரட்சிக்கப்படுகிற தேவனுடைய பிள்ளைகளுக்கு, அதையே கர்த்தர் மதிலும், அரணுமாக ஏற்படுத்துகிறார். காரணம் என்ன? நீங்கள் இரட்சிக்கப்படும்போது, கர்த்தருடைய பிள்ளைகளாகிறீர்கள். கர்த்தரை, “அப்பா, பிதாவே” என்று கூப்பிடக் கூடிய புத்திர சுவிகார ஆவியைக் கர்த்தர் உங்களுக்குத் தந்தருளுகிறார்.

நீங்கள் இரட்சிக்கப்பட்டு, உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்படும் போது, பரலோக பார்லிமெண்டிலே கர்த்தர் மிகுந்த சந்தோஷத்தோடு, “இன்னார், இன்னார் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள்,” என்பதை அறிவிக்கிறார். அப்போது தேவதூதர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும் (லூக். 15:7,10). தேவதூதர்கள், கரம் தட்டி ஆர்ப்பரிப்பார்கள். அதே நேரம், எதிர்க்கட்சியிலிருகிற சாத்தானும், அவனது சேனையும், திகைப்பார்கள். இன்று இரட்சிக்கப்பட்டவன், நாளை நமக்கு விரோதமாய் “அப்பாலே போ சாத்தானே” என்று கடிந்து கொள்வான். “நாம் விலகியோட வேண்டியதிருக்குமே” என்று எண்ணுவான். இரட்சிக்கப்பட்டவர்களை தொடுவதற்கு கர்த்தர், சாத்தானுக்கு அதிகாரம் கொடுப்பதில்லை. “அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்” (உபா. 28:10). “நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு. கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்” (சங். 118:15).

இரட்சிக்கப்பட்டவர்களின் வீடுகளில், பராக்கிரமம் செய்யும்படி கர்த்தருடைய கரம் நீட்டப்பட்டிருக்கிறபடியால், சாத்தானால் உங்களுக்கு தீங்கிழைக்க முடியாது. நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அநேக வீடுகளில் தேவ ஆலோசனையை கேளாமல், நாள், நட்சத்திரம் பார்த்தல், ஜோசியம் பார்த்தல், குடுகுடுப்பைக்காரனிடத்தில் குறிகேட்டல், மந்திரவாதிகளிடம் செல்லுதல், ஏவல், பில்லி சூனியம் இருக்கிறதா? என்று பார்த்தல், போன்றவற்றில் துணிகரமாய் ஈடுபட்டுக் கொண்டு, சாத்தானுக்கு வீட்டில் இடங்கொடுக்கிறார்கள். அவர்களைத் தாக்குவதற்கு, வாசல்களைத் திறந்து வைக்கிறார்கள்.

இன்றைக்கே, உங்களுடைய வீட்டிலிருக்கும் மந்திர புத்தகங்கள், ஜோசிய நூல்கள், ஜாதகம், தாயத்துக்கள், தகடுகள் போன்ற பொருட்களிருந்தால், இயேசுவின் நாமத்திலே தூக்கி வீசி, சத்துருவினுடைய வல்லமையை சுட்டெரித்து விடுங்கள். இயேசுவின் இரத்தம் நிச்சயமாகவே உங்களை காப்பாற்றும். உங்கள் வீட்டிலே சிலர் இரட்சிக்கப்பட்டு, சிலர் இரட்சிக்கப்படாமலிருக்கலாம். அப். 16:31-ஐ வாக்குத்தத்தமாக வைத்து, அனைவருடைய இரட்சிப்புக்காகவும் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டேயிருங்கள். “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப். 16:31). யோசுவாவைப்போல கர்த்தருக்குள் தீர்மானம் செய்யுங்கள்.

“நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” (யோசு. 24:15). “இரட்சிக்கக் கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை” (ஏசா. 59:1) என்ற வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, ஆண்டவரை துதிக்க ஆரம்பித்து விடுங்கள்.

நினைவிற்கு:- “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்” (சங். 91:1).