நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்!

“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம், ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (யோசு. 1:5).

இந்த வாக்குத்தத்தத்தில் மூன்று பகுதிகளிருக்கின்றன. முதலாவது, நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம், ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்பதில்லை. இரண்டாவது, நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். மூன்றாவது, “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களெல்லாம், கிறிஸ்து இயேசுவுக்குள், “ஆம் என்றும், ஆமென் என்றும்” இருக்கின்றன. வானமும், பூமியும் ஒழிந்துபோனாலும், கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் ஒருநாளும் ஒழிந்து போவதில்லை. அவை நிச்சயமாகவே நிறைவேறும். யோசுவா, எகிப்தை விட்டு வெளியே வரும்போது, அவருக்கு நாற்பது வயது. மோசேக்கு எண்பது வயது. அப்போது அமலேக்கியர், இஸ்ரவேலருக்கு விரோதமாக ரெவிதீமில் யுத்தத்திற்கு வந்தார்கள். “அமலேக்கு” என்ற வார்த்தைக்கு, “மாம்சம், மனுஷ புயபலம், சுயபெலன்” என்பது அர்த்தமாகும். இயேசுவை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளோடும், இந்த மாம்ச இச்சையான, “அமலேக்கு” போரிடுகின்றான்; எதிர்த்து நிற்கிறான்.

மோசே யோசுவாவை, “அமலேக்கியரோடு யுத்தம் செய்யப் புறப்படு” என்றார். அதே நேரம் மோசே, யோசுவாவுக்காக மலையுச்சியிலே ஏறி, தன் கைகளிலுள்ள தேவனுடைய கோலை வானத்துக்கு நேராக உயர்த்திப் பிடித்துக்கொண்டு நின்றார். அமலேக்கியரால், யோசுவாவை எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள்.

தேவபிள்ளைகளே, நீங்கள் ஜெபிக்கிறது மட்டுமல்ல, உங்களுக்காக ஜெபிக்கிற வர்களை நீங்கள் எழுப்ப வேண்டும். உங்கள் ஆத்துமாவுக்காக உத்தரவாதம் செய்கிற கர்த்தருடைய ஊழியக்காரர்கள், மோசேயைப்போல தங்கள் கைகளையும், இருதயத்தையும் கர்த்தருக்கு நேராக உயர்த்தி, உங்களுக்காக மன்றாடும்போது, நிச்சயமாகவே உங்களுடைய காரியம் ஜெயமாயிருக்கும். நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. “யோசுவா” என்ற பெயருக்கு, “இரட்சகன்” என்பது அர்த்தம். பழைய ஏற்பாட்டு யோசுவா, இயேசுகிறிஸ்துவுக்கு நிழலாட்டமானவர்.

“இயேசு” என்ற வார்த்தைக்கும் கூட, “இரட்சகர்” என்பதுதான் அர்த்தம். “அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத். 1:21). தேவபிள்ளைகளே, இயேசு கிறிஸ்து என்ற வல்லமையுள்ள நாமத்தினாலே, வெற்றிக் கொடியை ஏற்றுங்கள். இயேசுகிறிஸ்து ஒருநாளும் தோல்வியடைந்தவரல்ல. உங்களை தோல்விக்கு ஒப்புக்கொடுக்கிற வருமல்ல, உங்களுக்கு விரோதமாய் வருகிற எல்லா அமலேக்கியரையும், உலகம், மாம்சம் பிசாசையும், முறியடியுங்கள். வனாந்தரத்தில் நடந்த நாற்பது வருடங்களும், யோசுவா உண்மையும், உத்தமமுமாய் மோசேயைப் பின்பற்றிக்கொண்டே வந்தார். ஆகவே, மோசேக்குப் பிறகு கர்த்தர் யோசுவாவை தெரிந்துகொண்டு, ஜனங்களை வழிநடத்த அபிஷேகம்பண்ணினார். “மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின் மேல் தன் கைகளை வைத்தபடியினால், அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே சேதார்கள்” (உபா. 34:9).

நினைவிற்கு:- “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும். நான் கர்த்தருடைய வீட்டிலே, நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங். 23:6).