உபவாச ஜெபம்!

“இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி, மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்” (மத். 17:21).

சில பிசாசுகள், அதட்டினால் ஓடுகின்றன. சில, இயேசுவின் நாமத்தைச் சொல்லும்போது ஓடுகின்றன. ஆனால், சில ஜாதிப்பிசாசுகளும், சில கட்டுகளும் முறிக்கப்பட வேண்டுமானால், உபவாச ஜெபமும் மிகவும் அவசியம். உபவாச நேரத்தில் உங்களுடைய சரீரத்தை ஒடுக்குகிறீர்கள். நேரத்தை ஒதுக்கிவிட்டு, கர்த்தருடைய பாதத்தில் அதிகமாய் செலவழிக்கிறீர்கள். இதனால் உள்ளான மனுஷனோ, வல்லமையுள்ள பெலவானாய் மாறுகிறான்.

சாத்தானை விட, நீங்களே அதிக பெலவானாய் மாறுவீர்கள். அவனுடைய வல்லமையை அதமாக்குவீர்கள். அவனை முந்திக் கட்டிவிடும்போது, அவனுடைய உடமைகளை எளிதாய்க் கொள்ளையிட முடியும். கர்த்தருக்கு உகந்த உபவாசம் என்ன? “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், அல்லவோ, எனக்கு உகந்த உபவாசம்” (ஏசா. 58:6,7).

ஆண்டவர் உபவாசத்தையும், ஜெபத்தையும் இணைத்து, இந்த ஜாதிப்பிசாசு, “உபவாசத்தினாலும், ஜெபத்தினாலுமேயன்றி” என்று குறிப்பிட்டார். ஜெபம் இல்லாத உபவாசம் வெறும் பட்டினிதான். ஜெபிக்காவிட்டால், காற்றுப் போன பலூன் போலவும், நனைந்த கோழி போலவும், பெலனற்றுப்போய் விடுவீர்கள். ஜெபிக்க ஜெபிக்க உங்களுக்குள்ளே பெரிய வல்லமை, பெரிய விசுவாசம், பெரிய பெலன் நிச்சயமாகவே வரும். “தானியேலே பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி, உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்” (தானி. 10:12). ஆம், கர்த்தர் ஜெபத்தைக் கேட்கிறவர் மட்டுமல்ல, ஜெபத்திற்குப் பதிலும் கொடுக்கிறவர். ஜெபத்திலே, நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன?

1. எதிர்த்து நில்லுங்கள்:-
“பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்” (யாக். 4:7). “தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும்” என்று எபே. 6:13-ல் வாசிக்கலாம். தாவீது தைரியமாய் கோலியாத்தை எதிர்த்து நின்றார். தாவீது கோலியாத்தின் பெரிய உருவத்தைப் பார்க்கவில்லை. அவனை விட பெரியவராய், கர்த்தர் தன்னோடு இருக்கிறதை உணர்ந்தார். கர்த்தர் பெரியவராய் உங்களோடு நிற்கிறதை உணருங்கள். 2. பலவானை முந்திக் கட்டுங்கள்:- அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிட முடியாது (மத். 12:29).

எப்படி அவனை முந்திக் கட்டுவது? “அவர்களுடைய ராஜாக்களைக் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள் பேரில் செலுத்தவும், அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்” (சங். 149:7,8).

நினைவிற்கு:- “பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ, அது பரலோகத்திலும் கட்ட விழ்க்கப்பட்டிருக்கும் என்றார்” (மத். 16:19).