போராயுதங்கள்!

“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (2 கொரி. 10:4).

நாம் எல்லோரும், ஒரு போர்க்களத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். நம்முடைய சரீரம், ஒரு போர்க்களம். நம்முடைய ஆத்துமா, ஒரு போர்க்களம். நம்முடைய சிந்தைகளும், ஒரு போர்க்களம். இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்கும் எதிரியாக, சாத்தானும், பிசாசு கூட்டங்களும், எண்ணற்ற அசுத்த ஆவிகளும் இருக்கின்றன.

அவைகளை நம் கண் காணாமலிருந்தாலும், அவைகளோடு யுத்தம் செய்து, ஜெயங்கொள்ள வேண்டும். நம்முடைய சரீரத்திலே, நோய்க்கிருமிகள் புகுந்துவிட்டால், இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், நோய்க்கிருமிகளோடு போரிடுகின்றன. வெள்ளை அணுக்கள் ஜெயித்தால், நோய் குணமாகிறது. தோற்றுப்போனால், நோய் முற்றிவிடுகிறது. ஆத்துமாவிலே பொல்லாத எண்ணங்களையும், அதைரியங்களையும், அவிசுவாசங்களையும் சாத்தான் கொண்டு வருகிறான். நீங்கள் ஆவியும், ஜீவனுமான வாக்குத்தத்த வசனங்களை வைத்து, யுத்தம் செய்து, மேற்கொள்ளவேண்டும்.

உங்களுடைய ஆவியும், ஒரு யுத்தக்களம் தான். பலவேளைகளில், ஆவி முறிந்து போகிறது. சோர்பு, கலக்கங்கள், தொய்வுகள் வருகின்றன. ஆவியானவர் உங்களுக்காக யுத்தம் செய்கிறார்.

மிருகங்களுக்கு, மிருகங்கள் சண்டை. தேசங்களுக்கு, தேசம் யுத்தம். ஒவ்வொரு நாளும், உலகம் கோடி கோடிக்கணக்கானப் பணத்தை, யுத்தத்திற்குச் செலவழிக்கிறது. முன்பு நேருக்குநேர் வாள் ஏந்தி யுத்தம் செய்தார்கள். அதன் பிறகு துப்பாக்கி, பீரங்கி வந்தது. இப்பொழுதோ, அணுகுண்டுகள், ஏவுகணைகள் ஆயத்தமாய் இருக்கின்றன. விஷ வாயு குண்டுகளைப் பார்த்து, உலகமே பயப்படுகிறது.

நமக்குப் போராட்டம் உண்டு. “ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும், நமக்குப் போராட்டம் உண்டு” (எபே. 6:12).

இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவபிள்ளைகளும், மூன்று யுத்தக்களங்களை சந்திக்கிறார்கள். அவை உலகம், மாம்சம், பிசாசு ஆகும். மறந்து விடாதிருங்கள். யுத்த நேரத்தில் ஜெயக்கிறிஸ்து உங்களோடு இருக்கிறார். தேவதூதர்கள், கேருபீன்கள், சேராபீன்கள் உங்களுடனே இருக்கிறார்கள். தேவனுடைய பிள்ளைகள், ஊழியக்காரர்கள், பரிசுத்தவான்கள் உங்களோடு இருக்கிறார்கள்.

19-ம் நூற்றாண்டிலே, கிறிஸ்தவர்களுக்கு விரோதமாய், அநேக நாத்தீகவாதிகள் எழும்பினார்கள். ரஷ்யா, சீனா போன்ற தேசங்களிலே, கம்யூனிசவாதிகள் எழும்பினார்கள். விசுவாசிகள், சபைகள், ஊழியங்களுக்கு விரோதமான, கொடிய யுத்தங்கள் நடைபெற்றன. ஆனாலும், கர்த்தர் தேவபிள்ளைகளுக்கென்று போராயுதங்களைத் தந்திருக்கிறார். நமது போராயுதங்கள் மாம்சத்துக்குரியவைகள் அல்ல. “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.” சிம்சோனுக்கு பச்சை கழுதை தாடை எலும்பு ஆயுதமாய் இருந்தது. தாவீதுக்கு கவணும், கல்லும் ஆயுதமாய் இருந்தன. கிதியோனுக்கு பானையும், தீவெட்டியும், எக்காளமும் ஆயுதங்களாய் இருந்தன. அவைகள் மாம்சத்துக்குரியவைகள் அல்ல! தேவபிள்ளைகளின் யுத்தம் ஆவிக்குரிய யுத்தம். எய்தவனாகிய சாத்தான் இருக்கும்போது, அம்பாகிய மனுஷனை நீங்கள் நொந்துகொள்ள வேண்டியதில்லை.

நினைவிற்கு:- “என் கைகளைப் போருக்கும், என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” (சங். 144:1).