உலக அதிசயம்!

“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன். உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” (சங். 139:14).

கர்த்தருடைய சிருஷ்டிப்பின் அன்பைக் குறித்து, சங்கீதக்காரன் சிந்தித்து ஆச்சரியப்பட்டான். “அது ஒரு அதிசயமான அன்பு,” என்பதை புரிந்து கொண்டார். “நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது. என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே, அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது” (சங். 139:15,16).

ஒரு பள்ளிக்கூடத்தில், சிறுவர்கள் மத்தியிலே, ஒரு ஆசிரியை ஒரு கேள்வியை வைத்தார். “உலக அதிசயங்களில், ஏழை குறிப்பிடுக” என்றார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த அதிசயங்களையெல்லாம் எழுதினார்கள். சிலர், “இந்தியாவிலுள்ள தாஜ்மஹால், சீனாவிலுள்ள நீண்ட நெடுஞ்சுவர், எகிப்திலுள்ள பிரமிடுகள், பனாமா கால்வாய். நேபுகாத்நேச்சார் கட்டி எழுப்பிய தொங்கு தோட்டம், ரோமாபுரியிலுள்ள பிரமாண்டமான, பேதுருவின் தேவாலயம்.

ஆனால் ஒரு சிறுமி, டீச்சர், “அன்புள்ள ஆண்டவர், என்னிலே உருவாக்கிய ஏழு அதிசயங்களை நான் எழுத விரும்புகிறேன். முதலாவது, தொட்டு உணருகிற அதிசயம். என் தாய் என்னை அன்போடு தொடும்போது, எனக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்படுகிறது. அழகான, மென்மையான மலர்களைத் தொடும்போதும் ஏற்படுகிற ஒரு உணர்வை, அன்போடு எனக்குத் தந்த தேவனைத் துதிக்கிறேன். இரண்டாவது பெரிய அதிசயம், என் கண்களால் பார்க்கிற அதிசயமாகும். கண்கள் இல்லாமலிருந்தால், கஷ்டப்பட்டிருந் திருப்பேன்.

மூன்றாவது, என் காதுகள் எல்லாவற்றையும் கூர்மையாய் கேட்கிறதே. அது ஒரு பெரிய அதிசயம். என்னுடைய மூக்கு முகர்ந்து பழங்களின் வாசனை, மலர்களின் வாசனை எல்லாவற்றையும் அறிந்து கொள்வது ஒரு அதிசயம். அப்படியே, என் நாவு ஒவ்வொன்றையும் ருசிபார்த்து உணரச் செய்கிறது. அப்படியே, சொல்லிக் கொண்டு போனால், ஆண்டவர் எனக்குள் சிருஷ்டித்த ஏழெழுபது அதிசயங்களை நான் சொல்ல முடியும். அன்புள்ள ஆண்டவர், அந்த கிருபையை எனக்குத் தந்தார் என்று சொன்னாள். எல்லாவற்றிலும் பெரியது என்று நான் கருதுவது, நான் கர்த்தரை நேசிப்பதும், அவர் என்னை அளவில்லாமல் நேசிப்பதும், உலக அதிசயங்களில் ஒன்று அல்லவா? என்றாள்.

கர்த்தரிடத்திலிருந்து இவ்வளவு அன்பைப் பெற்றுக்கொண்ட நீங்கள், அவரில் எவ்வளவாய் அன்புகூர வேண்டும்.” முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும், முழுமனதோடும், அவரில் அன்புகூர தீர்மானித்து விடுங்கள். மட்டுமல்ல, கர்த்தருடைய அன்பில் நிலைத்திருங்கள். நாளுக்கு நாள், தெய்வீக அன்பிலே நீங்கள் பெருகவேண்டும்.

“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே, நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக, நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும், வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (வெளி. 1:6). கிறிஸ்தவ மார்க்கமே, அன்பின் மார்க்கம். கர்த்தருடைய அன்பை ருசிக்கிற மார்க்கம் மட்டுமல்ல, அன்பை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிற மார்க்கம்.

நினைவிற்கு:- “அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவா. 4:8).