தேவ குமாரனும் மனுஷகுமாரனும்!

“நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ, நான் வானத்தையும், பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ?” (எரே. 23:23,24).

கர்த்தருடைய அன்பு, இருவகைப்பட்டது. ஒரு பக்கம், அவர் தேவ குமாரனாயிருந்தார். மறுபக்கம், மனுஷகுமாரனாயிருந்தார். தேவகுமாரனாயிருந்து, நம் எல்லோரையும் சிருஷ்டித்தார். அண்டசராசரங்களை சிருஷ்டித்தார். அதே நேரம், மனுஷ குமாரனாயிருந்து, சிலுவையிலே தம்முடைய இரத்தத்தை சிந்தி, நமக்கு மீட்பை உண்டாக்கினார். இரட்சிப்பை உண்டாக்கினார். சாபங்களை முறித்து, ஆசீர்வாதத்தைத் தந்தார்.

போலீஸ் அதிகாரி ஒருவர், தன் மனைவி பிள்ளைகளோடு கடற்கரையில் உலாவப்போனார். பிள்ளைகளோடும், மனைவி யோடும் மிகுந்த அன்பாய் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் கேட்டதையெல்லாம், அன்போடு வாங்கிக் கொடுத்தார். திடீரென்று அவருடைய முகம் கோபமாய் மாறினது. ஒருவனைப் பார்த்து மிகக் கோபமாய்ச் சாடினார். “எச்சரிக்கையாய் இரு!” என்றார். அந்த அன்புள்ளவரின் முகமா, இப்படி கொடூரமாய் மாறினது? அவர் தன் மனைவியிடம் சொன்னார், “இவன் பொல்லாத திருடன், கொள்ளைக்காரன், கொலையாளியும்கூட. அவனைப் பார்த்ததும், நான் அடையாளம் கண்டுகொண்டேன். கொஞ்சம் ஏமாந்திருந்தால், நம்முடைய பிள்ளையைக்கூட தூக்கிக்கொண்டு போய்விடுவான்,” என்றார்.

கிறிஸ்து சாந்தமான ஒரு ஆட்டுக்குட்டிதான். ஆனால் சாத்தான் வந்து நிற்கும் போது, யாரை விழுங்கலாமோ என்று சிங்கத்தைப் போல வகை தேடி சுற்றித் திரியும்போது, சாந்தமாயிருந்தவர், யூத ராஜசிங்கமாய் மாறுகிறார். அன்பின் சொரூபியாயிருந்த அவர், நம்மைப் பாதுகாக்கும்போது, சேனைகளின் தேவனாக, சர்வ வல்லவராக மாறுகிறார். ஏனென்றால், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனையோடு, சாத்தானோடு நமக்கு யுத்தம் இருக்கிறது.

வெளிதேசத்திலிருந்து, நிறைய சோப்புகளை ஒருவர் வாங்கி வந்தார். கஸ்டம்ஸ் அதிகாரி அவரைப் பிடித்தபோது, சில சோப்பு பெட்டிக்குள்ளே தங்கக் கட்டிகள் இருந்தது. வெளியே பார்த்தால் சோப்பு. உள்ளே பார்த்தால் தங்கக் கட்டி. அதுபோலத்தான் மனுஷகுமாரனுக்குள், தேவகுமாரனும் இருந்தார். தேவ அன்பு, கர்த்தருக்குள் நிரம்பி வழிந்ததினாலே, அந்த அன்பினால் மனுஷகுமாரனைப்போல செயலாற்றினார். அந்த அன்பு, நம்முடைய புத்திக்கு எட்டாதது. ஆச்சரியமானது.

ஒரு மனிதன் இரட்சிக்கப்படும்போது, வெளிப்பிரகாரமான சரீரத்திலே அவன் மனுஷீக தோற்றமுள்ளவனாயிருந்தாலும், உள்ளத்திலே தெய்வீக பரிபூரணங்களெல்லாம் வாசம்பண்ணுகிறது. சரீரம் மண்ணுக்குரியது. ஆனாலும் ஆவியும், ஆத்துமாவும், விண்ணுக்குரியது. சரீரம் மரணத்திலே விழுந்துபோனாலும், ஆவி, ஆத்துமா அழியாததாய் நித்தியத்தை சுதந்தரித்துக்கொள்ளுகிறது. இது எவ்வளவு பெரிய ஆச்சரியம்!

தேவபிள்ளைகளே, கிறிஸ்து உங்களுக்காக மரித்து, ஜீவனைக் கொடுத்து, உயிரோடு எழுந்ததினாலே, உயிர்த்தெழுந்த நம்பிக்கையை தந்திருக்கிறார். ஆபிரகாமை கர்த்தர் ஒருநாள் பார்த்து, “ஆபிரகாமே, உன் கண்களை ஏறெடுத்துப் பார். உன்னுடைய சந்ததி நட்சத்திரங்களைப்போல இருக்கும்” என்றார். மண்ணுக் குரியவர்களை, விண்ணுக்குரியவர்களாய் மாற்றும்படியாக, விண்ணுக்குரிய இயேசு மண்ணுலகத்துக்கு வந்தார். அவரது அன்பை எண்ணிப்பாருங்கள்!

நினைவிற்கு:- “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரி. 8:9).