தியாகமான அன்பு!

“பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவரானார்” (எபி. 2:14).

பில்லிகிரஹாம், ஒரு முறை நடந்து போகும்போது, ஒரு எறும்புப் புற்றிலே கால் வைத்து விட்டார். அதிலே ஒரு எறும்பு மிதிப்பட்டு, பயந்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பில்லிகிரஹாம், “ஐயோ! பாவம்,” என்று சொல்லி, மிதிப்பட்ட எறும்பை தன்னுடைய கையிலே எடுத்து வைத்து, “உன்னை நான் மிதித்து விட்டேனா? கால் முறிந்து விட்டதா? உனக்காக வருத்தப் படுகிறேன்” என்று சொன்னார். “நான் ஒரு எறும்பாய் பிறந்திருந்தால், சரியானபடி, என்னுடைய மன வேதனையையும், எண்ணங்களையும் இந்த எறும்போடு பகிர்ந்து கொள்வேனே,” என்று நினைத்தார்.

அதுபோலத்தான் காணக்கூடாத இறைவனாகிய இயேசு, சகல உலகங்களையும் பரலோகத்தையும், கிரகங்களையும் சிருஷ்டித்திருந்தாலும், தான் சிருஷ்டித்த மனித னோடு உறவாட வேண்டும் என்பதற்காகவே, மனிதனைப்போல மாம்சமும், இரத்தமுமுடையவராய் மாறினார். அவரது உள்ளத்திலே, பரலோக தேவ அன்பு வெளியானது. நமக்காக மனிதனானது மட்டுமல்ல, அவர் அடிமையின் ரூபமெடுத்தார். பரலோகத்தையும், மகிமையையும் துறந்தார். மரணபரியந்தம் கீழ்ப்படிந்து, தன்னுடைய ஜீவனையே நமக்காக தந்தார்.

“பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம் பெற்றேன். நித்தியமும், அழிவில்லாமையும், அதரிசனமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும், மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக” (1 தீமோத். 1:16,17). “தேவன் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1 யோவா. 1:5) என்றார், அப் பவுல்!
எல்லா ஜோதியிலும், மேலான ஜோதிமயமானவர், எல்லா மகிமைக்கும் மேலான மகிமையின் ராஜா (சங். 24:7), வெளித் தோற்றத்தில் சாதாரண மனுஷனாயிருந்தாலும், அவருக்குள் பூரணமான அன்பும், பூரணமான வெளிச்சமும், குடி கொண்டிருந்தது. ஆம், ஒரே நேரத்தில், அவர் மனுஷகுமாரனாகவும், தேவ குமாரனாகவுமிருந்தார். என்னோடும், உங்களோடும் பேசி, அன்புகூர்ந்தார்.

சாதாரணமான நாட்களில், ஒரு எரிமலை பார்ப்பதற்கு அமைதியாயிருப்பது போலத் தோன்றும். ஆனால் அந்த எரிமலைக் குமுறும்போது, உள்ளுக்குள்ளிருந்து எரிமலை குழம்பும், கந்தகமும், அக்கினியும் கொட்ட ஆரம்பிக்கும். “இந்த எரிமலையா இதுவரையிலும் சாதாரண சாதுவைப்போல அமைதியாயிருந்தது?” என்று எண்ணத் தோன்றும். அது போல, இயேசு கிறிஸ்து ஒரு அடிமைப்போல இருந்தாலும், மறுரூபமலையிலே, அவருடைய முகத்திலே, எவ்வளவு மகிமையின் பிரகாசம் உண்டாயிற்று!

அவர் மறுரூபமானார். அவருடைய முகம் சூரியனைப்போல பிரகாசித்தது. அவருடைய வஸ்திரம் எந்த வண்ணானாலும் வெளுக்கக்கூடாத வெண்மையாயிற்று. தேவபிள்ளைகளே, இன்றைக்கு உங்களுக்குள் கிறிஸ்து வாழுகிறபடியால், எக்காள சத்தம் தொனிக்கும்போது, இயேசுகிறிஸ்து மறுரூபமலையிலே, எப்படி பிரகாசித்தாரோ, அதுபோல நீங்களும் மறுரூபமாகி, பிரகாசிப்பீர்கள். கிறிஸ்துவுக்கு ஒப்பாயிருப்பீர்கள்.

நினைவிற்கு:- “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும், வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்” (2 பேது. 1:16).