ஆத்தும நேசரின் அன்பு!

“மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன் மேல் மகிழ்ச்சியாயிருப்பார்” (ஏசா.62:5).

“மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக் கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்” (ஏசா. 61:10).

ஆதாமின் விலாவிலிருந்து எடுக்கப்பட்ட எலும்பின் மூலமாக, ஏவாள் சிருஷடிக்கப்பட்டு, ஆதாமின் மணவாட்டியானாள் (ஆதி.2:22). அதுபோலவே கிறிஸ்துவினுடைய விலா குத்தப்பட்டு, விலாவி லிருந்து வடிந்த இரத்தத்தினாலே சபையாகிய மணவாட்டி கிறிஸ்துவுக்கு உண்டானது. “தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபை” (அப்.20:28).

அப்.பவுல், கணவனுக்கும் மனைவிக்குமிடையே உள்ள உறவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது கிறிஸ்துவைக் குறித்தும், மணவாட்டியாகிய சபையைக் குறித்தும் பேசினார். “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல், பரிசுத்தமும், பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும், தம்மை தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” (எபே.5:25-27).

அப். பவுல் “நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கிய மான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவிக்கிறார் (2 கொரி.11:2). “புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு, இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” (வெளி.21:2). காலங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆத்தும மணவாளனாகிய இயேசுவின் இரண்டாம் வருகை சமீபமாய் இருக்கிறது. அவரை சந்திக்க ஆயத்தப்படுவோம்! ஆயத்தப்படுத்துவோம்!

“நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக் குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சோல்லக்கேட்டேன். சுத்தமும், பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக் கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே” (வெளி.19:7-9).

வேதத்தில், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை வாசிக்கும்போது, தேவனை சிருஷ்டி கர்த்தராக, தகப்பனாக, தாயாக, போதகராக, சகோதரனாக, சிநேகிதனாக அன்புகூருகிறதைக் காணலாம். எந்த அளவு நீங்கள் கர்த்தரை நெருங்கி ஜீவிக்கிறீர்களோ, அந்த அளவு, கர்த்தரும் உங்களில் மகிழ்ச்சியோடு நெருங்கி வரு வார். ஆனால், எல்லாவற்றையும் விட, மிக விசேஷமான கர்த்தருடைய அன்பு ஒன்று உண்டு. உன்னதப்பாட்டிலே, திரும்பத் திரும்ப கிறிஸ்துவை ஆத்தும நேசராக விவரிக்கப்பட்டதை அறிகிறோம் (உன். 3:1-4). ஏசாயா சொல்லுகிறார், “உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது” (ஏசா. 26:8). “இந்த இரகசியம் பெரியது. நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப் பற்றியும் சொல்லுகிறேன்” (எபேசி. 5:32).

நினைவிற்கு:- “என் ஆத்தும நேசரைக் கண்டேன். அவரை நான் என் தாயின் வீட்டலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக் கொண்டேன்” (உன். 3:4).