சிநேகிதனின் அன்பு!

“ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” (யோவான் 15:13,14).

கர்த்தர் உங்களை அன்போடு, “சிநேகிதன்” என்று அழைக்கிறார். அவருடைய அன்பு உத்தம சிநேகிதனின் அன்பு. “பரிமளதைலமும், சுகந்த தூபமும், இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது, களிப்பாக்கும்” (நீதி. 27:9).

“சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்” (நீதி. 17:17). தன் நண்பனுக்காக உயிரையே கொடுக்கக் கூடிய, ஆத்தும சிநேகிதனும் உண்டு. ஒரு நல்ல சிநேகிதன் தான் சிநேகிதனுக்குத் தேவையான ஆலோசனைகளைக் கொடுத்து, அன்போடு வழி நடத்துவான். தவறு செய்யும்போது, உரிமையோடு கண்டிப்பான். எப்பொழுதுமே நண்பனுடைய உயர்வையும், மேன்மையையும், எண்ணி வாழ்வான்.

சிநேகிதனை நம்பி, மனம்விட்டு பேசலாம். எல்லாப் பிரச்சனைகளையும், போராட்டங்களையும் பகிர்ந்துகொள்ளலாம். தேவபிள்ளைகளே, இந்த உலகத்திலே உத்தமமான சிநேகிதன் ஒருவர் உண்டென்றால், இயேசுகிறிஸ்து ஒருவர் மாத்திரமே. அந்த சிநேகிதன். நமக்காக ஜீவனைக் கொடுத்த சிநேகிதர். கடைசி சொட்டு இரத்தத்தையும் ஊற்றிக் கொடுத்த சிநேகிதர்.

இயேசு, லாசருவையும் சிநேகிதன் என்று அழைத்தார் (யோவான் 11:11). அதே நேரம், தன்னைக் காட்டிக் கொடுத்த யூதாசையும், “சிநேகிதனே” என்று அழைத்தார் (மத்.26:50). ஆனால், யூதாஸோ, அந்த அன்புக்கு பாத்திரவானா இருக்கவில்லை. முத்தத்தினாலே கிறிஸ்துவை காட்டிக்கொடுத்து, கிறிஸ்துவின் அளவற்ற சிநேகத் துக்கு துரோகம் செய்தான். “என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டேன்” என்ற தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறினது (சகரி.13:6).

வேதத்திலே மூன்று முறை, கர்த்தர் ஆபிரகாமை “சிநேகிதன்” என்று அழைத்தார் (யாக்.2:23). ஆபிரகாம் அந்த அன்புக்கு அடிபணிந்து, உத்தம சிநேகிதனாய் ஆண்டவரோடு நடந்தார். ஆகவே, “நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?” என்று சொல்லி, தேவன் தம்முடைய இரகசியங்களையெல்லாம் ஆபிரகாமுக்கு சோல்லிக் கொடுத்தார். தன் சிநேகிதனாகிய ஆபிரகாம் ஜெபித்த ஜெபத்தைக் கேட்டு, லோத்தை சோதோமின் அழிவிலிருந்து பாதுகாத்தார்.

அதுபோலவே மோசேயையும், கர்த்தர் ஒரு நண்பனைப்போல நேசித்தார். வேதம் சொல்லுகிறது, “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (யாத். 33:11). கர்த்தர் சொன்னார், “என் தாசனாகிய மோசே, என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன். நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும், பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன். அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான் என்றார்” (எண். 12:7,8).

நீங்கள், கர்த்தரோடு பிள்ளைகளைப்போல பேசலாம். சகோதரனைப்போல பேசலாம். ஆனாலும், “சிநேகிதன்” என்கிற உன்னத நிலைமையை, கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கிறார். ஆபிரகாமோடு சிநேகிதனாக பழகினவர், மோசேயோடு சிநேகிதனாக பழகினவர், இன்றைக்கு உங்களோடும் சிநேகிதனாக பழக விரும்பு கிறார். நீங்கள் அவருடைய உன்னதமான அன்பை ஏற்றுக்கொண்டு, அவரோடு இணைந்து நடப்பீர்களா? “சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்” (நீதி. 18:24).

நினைவிற்கு:- “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன். ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவா. 15:15).