சகோதரனின் அன்பு!

“ஆபிரகாம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும், வாக்குவாதம் வேண்டாம். நாம் சகோதரர்” (ஆதி. 13:8).

சிருஷ்டி கர்த்தராய் நம்மீது அன்புகூர்ந்தார். தகப்பனும் தாயுமாய் அன்புகூர்ந்தார். போதகராய் அன்புகூர்ந்தார். மட்டுமல்ல, சகோதரனாய் அவர் அன்புகூர்ந்தார். ஆம், இயேசுகிறிஸ்து நம்முடைய மூத்த சகோதரன்.

ஆபிரகாமும், லோத்தும் சகோதரர்கள் அல்ல. முறைப்படி பார்த்தால், ஆபிரகாம், லோத்தின் பெரியப்பா முறை வரும். ஆனாலும், அவர் சகோதரனைப் போல லோத்துவை நேசித்தார். என்னதான் அண்ணன், தம்பிக்குள்ளே விரோதம் இருந்தாலும், எதிரி ஒருவன் வந்து, அண்ணனையோ, தம்பியையோ அடித்தால், சகோதரனால்பொறுத்துக்கொள்ளவே முடியாது. இரத்த பாசத்தால், உடனே, தன் சகோதரனுக்கு விரோதமாய் எழும்பினவனை, அடித்து நிர்மூலமாக்குவான். ஆங்கிலத்தில் “The blood is thicker than water” என்பார்கள்.

ஆபிரகாம், ஒரு தகப்பன் பாசத்தோடும், சகோதர பாசத்தோடும், லோத்துவை நேசித்து, கூடவே கூட்டிக் கொண்டு போனார். ஆனால் அந்த பாசம், லோத்துவுக்கு இருந்ததில்லை. தனக்கு சிறந்த இடமும், நீர்வளமும், நிலவளமும் பொருந்திய சோதோம் கொமோரா வேண்டும், என்று விரும்பினான். ஆபிரகாம் எக்கேடடைந்தால் எனக்கென்ன, என்கிற அலட்சியப் போக்கு லோத்துவுக்கு இருந்தது. ஆனால், ஆபிரகாமோடு இருந்தால் தான் கர்த்தருடைய ஆசீர்வாதம், பாதுகாப்பு என்பதை மறந்துவிட்டான்.
சோதோம் கொமோரா ராஜாக்களோடு, லோத்துவும், அவனுடைய குடும்பத்தாரும், எதிரிகளுக்கு சிறைப்பட்டார்கள். ஆபிரகாம், லோத்துக்கு ஏற்பட்ட சிறையிருப்பை அறிந்து, உடனே துரிதமாய் இயங்கி, தன்னுடைய வேலையாட்களுக்கு ஆயுதம் தரித்து, லோத்தின் குடும்பத்தை, மீட்டுக் கொண்டு வந்தார்.

இயேசு கிறிஸ்து நமக்கு சகோதரன். ஒருமுறை உலகப்பிரகாரமான அவருடைய சகோதர, சகோதரிகளும், தாயும் அவரைப் பார்க்க வந்தபோது, இயேசுகிறிஸ்து கேட்டார். “என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமா இருக்கிறான் என்றார்” (மத். 12:48,49,50).
நாம் கிறிஸ்துவண்டை வரும்போது, பரலோகத்தின் இனிய குடும்பத்திற்கு வருகிறோம். சிலுவையண்டை வந்து நிற்கும்போது, கல்வாரியின் ஒரே இரத்தம் நம்மை மீட்டதையும் ஒரே குடும்பத்தில், நாம் சகோதர, சகோதரியுமா இருப்பதையும் உணருகிறோம். ஒரே பிதாவானவர் நமக்கு உண்டு. ஒரே ஆவியானவர் நம்மை அபிஷேகம் பண்ணியிருக்கிறார். ஆகவே கிறிஸ்துவை, “நம் சகோதரன்” என்று சொல்லித் துதிக்கலாம். ஆம்! அவர் இரத்த பாசமுடைய சகோதரன்.

ஆனால் இயேசுகிறிஸ்துவோ, உன்னதமான தேவனுடைய குமாரனாயிருந்த போதிலும், பிதாவுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், அடிமையின் ரூபமெடுத்து பூமிக்கு வந்தார். இதினிமித்தம் நம்மைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படவில்லை (எபி.2:11). தேவபிள்ளைகளே, கிறிஸ்தவ குடும்பத்தில், நாம் எல்லோரும் விசுவாசிகளாக மட்டுமல்ல, சகோதரர்களாகவும் இருக்கிறோம். “சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது” (எபி. 13:1).

நினைவிற்கு: – “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளை யிடுகிறார்” (சங்.133:1,3).