முந்தி அன்புகூர்ந்தார்!

“அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூரு கிறோம்” (1 யோவா. 4:19).

பரபாஸ் தூரத்திலிருந்து சிலுவையைப் பார்த்துக்கொண்டே நின்றான். இந்த இயேசு இல்லாதிருந்தால், நான் அல்லவா, இந்த வேளையிலே, அதே சிலுவையில் பாடு அனுபவித்துக்கொண்டிருக்க வேண்டும். பாவியும், திருடனுமாகிய என்னை விடுதலை செய்யவும், பாவமற்ற கிறிஸ்துவை சிலுவையில் அறையவும், இந்த பரிசேயருக்கு என்ன வந்தது? கிறிஸ்து, ஏன் அமைதியாக இருக்கிறார்?
எனக்காக பாவம் அறியாத அவர் பாவமாக்கப்பட்டார். தேவ நீதியை எனக்கு தருவதற்காக அல்லவா? நீதிமானாகிய அவர், அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப் பட்டார். நித்திய ஜீவனை எனக்கு தருவதற்காக அல்லவா? எனக்காக, அவர் தரித்திர ராகி, மரண பரியந்தம் தன்னைத்தான் தாழ்த்தினார். உன்னதத்தின் பாக்கியத்தை எனக்குத் தந்து, பரலோக பரியந்தம் உயர்த்தவல்லவா?
என்னை விடுதலையாக்கும்படி, அவர் கட்டுண்டார். என்னைக் குணமாக்கும்படி, கொடூரமான தழும்புகளை ஏற்றார். எனக்கு மகிமையின் கிரீடம் சூடும்படி, அவர் முட்கிரீடம் தரித்தார். என்னை தேவ சாயலிலே மாற்றும்படி, அணுஅணுவாய் சிலுவையிலே பாடுகளை அனுபவித்தார். “கல்மனதையும் உருகச் செய்யும், கல்வாரியின் அன்பு,” என்று பரிசுத்தவான்கள், கிறிஸ்துவின் அன்பை தியானித்து மனதுருகிப் போனார்கள். அந்த அன்புக்கு தங்களை அர்ப்பணித்தார்கள். கிறிஸ்துவின் அன்பு எப்படிப்பட்டது?

1. அது மாறாதது. “தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்” (யோவா. 13:1).

2. அது தெய்வீகமானது. “பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல, நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன். என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்” (யோவா. 15:9).

3. அது ஜீவனைக் கொடுத்தது. “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு, ஒருவரிடத்திலுமில்லை” (யோவா. 15:13).

4. அது தியாகமானது. “என்னில் அன்புகூர்ந்து, எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே, பிழைத்திருக் கிறேன்” (கலாத். 2:20).

5. கல்வாரியில் “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே, அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவா. 3:16).

6. அது மேன்மையானது. “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாய் மாற்றினார் (வெளி. 1:6).

எந்தவித கடின இருதயமுள்ளவர்களையும், அன்பு இழுத்து மேற்கொள்ளுகிறது. கல்மனதையும் உருகச் செய்துவிடும். உண்மையான, கரிசனையுள்ள அன்பை நம்மால் என்றும் மறக்க முடிவதில்லை. வாயின் வார்த்தைகளை நாம் மறந்துவிடக்கூடும். கொடுத்த பணத்தை செலவழித்துவிடக்கூடும். ஆனால் அன்புள்ளோர் காட்டிய அன்பை, நம்மால் என்றும் மறக்க முடிவதில்லை.

நினைவிற்கு:- “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே, நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் , தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவா. 4:9).