சுண்டியிழுக்கும் அன்பு!

“மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன்” (ஓசியா 11:4).

“சீனாவுக்கு மிஷனெரிகள் தேவை” என்று 19-ம் நூற்றாண்டில் ஒரு விளம்பரம் வந்தது. அந்த நாட்களில், இங்கிலாந்தில் வேலையில்லா திண்டாட்டம் வாலிபர்களை வாட்டியது. மிஷனெரிக்குக் கொடுக்கிற வருமானம் கவர்ச்சிக்கக் கூடியதாயிருந்தது. ஆகவே, அந்த வேலைக்கு அநேகர் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களுக்கு “ஹட்சன் டெய்லர்” என்ற தேவ மனிதர், நேர்முகத் தேர்வு நடத்திக் கொண்டிருந்தார். முதல் கேள்வியானது, ஏன் மிஷனெரியாக விரும்புகிறீர்கள்? என்பதாகும். அதற்கு ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதங்களிலே பதிலளித்தார்கள்.

1. “ஐயா, பல வேலைகளுக்கு முயற்சித்துவிட்டேன். ஒன்றும் கிடைக்கவில்லை. ஒருவேளை இது என்னுடைய ஊழியத்திற்கு அழைப்பாக இருக்குமே என்று உணர்ந்து, கர்த்தருடைய சேவைக்கு வந்திருக்கிறேன்.”
2. “ஐயா, என் பெற்றோர், என்னை சிறுவயதிலேயே ஊழியத்திற்கென்று அர்ப் பணித்துவிட்டார்கள். “இருந்த வாய்ப்பைத் தட்டிவிட்டு, வேறு வேலைகளுக்கு சென்றால், அது ஆசீர்வாதமாயிருக்காது.”
3. “ஐயா, கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு, என்னை அர்ப்பணித்திருக்கிறேன். நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்று அவர் சொன்னார் அல்லவா? ஆகவே தேவனுடைய கட்டளையை நிறை வேற்ற மிஷனெரியாக செல்லுகிறேன்.”
4. “ஐயா, நிமிடந்தோறும் இயேசுவை அறியாமல், ஜனங்கள் அழிந்து போகிறார் களே, பாதாளத்துக்கும், நரகத்துக்கும் அவர்கள் செல்வார்களே. அவர்கள் ஆத்து மாவைப் பற்றிய கரிசனையால் நான் மிஷனெரியாக செல்ல விரும்புகிறேன்.”

இப்படி எல்லா பதில்களையும் கேட்ட ஹட்சன் டெய்லர் சொன்னார், “நீங்கள் சொன்ன இந்த பதில்களெல்லாம் உபத்திரவ காலத்திலும், சித்திரவதை நேரத்திலும் உங்களை நிலைநிறுத்தாது. நீங்கள் பின் வாங்கிப் போய்விடுவீர்கள். ஆனால் அப். பவுல் சொன்னதுபோல, கிறிஸ்துவின் அன்பு உங்களை நெருக்கி ஏவினால் மட்டுமே, மிஷனெரி பணியில் நின்று பிடிக்க முடியும். கர்த்தருடைய அன்பினால் பூரணமாய் நிரம்பியிருந்தாலொழிய, மிஷனெரி பணி செய்ய முடியாது,” என்றார்.

“நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” (யோவா 21:15) என்று இயேசு கிறிஸ்து பேதுருவிடம் கேட்டபோது, அவருடைய உள்ளம் உடைந்தது. கிறிஸ்துவின்மேல் வைத்த அன்பினால்தான், அவர் தன் தொழிலையும், வலையையும், படகையும் விட்டு விட்டு, கிறிஸ்துவை பின்பற்றினார். தன் எதிர்காலம், நம்பிக்கை எல்லா வற்றையும் கிறிஸ்துவிடம் அர்ப்பணித்தார்.

மீண்டும் இயேசு பேதுருவைப் பார்த்து, “இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? என்றார். அதற்கு பேதுரு, ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றார்” (யோவா. 21:15). அதன்பின்பு, “என் ஆடுகளையும், ஆட்டுக்குட்டிகளையும் மேய்ப்பாயாக” என்று சொன்னார்.

அப். பேதுரு தன் வாழ்நாளெல்லாம் கிறிஸ்துவினுடைய அன்பினால் நிறைந்து, ஊழியம் செய்தார். ஆனால் முடிவிலே ரோமர்கள், அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி கொண்டு சென்றனர். அவரோ, கிறிஸ்துவைப்போல நேராக அல்ல; தலைகீழாக சிலுவையில் அறையுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

நினைவிற்கு:- “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால், என் கற்பனைகளைக் கைக் கொள்ளுங்கள்” (யோவா. 14:15).