அன்பிலே வெற்றி!

“நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” (ரோம. 12:21).

ஒரு மனுஷனின் உள்ளத்திலே, தெய்வீக அன்பு இருக்குமானால், ஒருநாளும் அவன் தீமையைக் கண்டு துவண்டு போகமாட்டான். “ஐயோ, மற்றவர்கள் என்னை எவ்வளவு கொடுமைப்படுத்துகிறார்கள்” என்று சொல்லி, சுய பரிதாபத்தைத் தேட மாட்டான். கர்த்தரில் அன்புகூருகிறவர்களுக்கு, சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும், என்று கர்த்தரில் அன்பு வைத்து, அவரை சார்ந்துகொள்வான். அப்படியே பிற்காலத்தில் யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து, “நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ, அதை நன்மையாக முடியப்பண்ணினார்” (ஆதி. 50:20) என்று கர்த்தரைத் துதித்தார்.

ஒரு வேடிக்கையான கதை உண்டு. ஒரு முறை காற்றுக்கும், சூரியனுக்கும் ஒரு போட்டி வந்தது. தங்களில் யார் திறமைசாலி என்பதை நிரூபிக்கும்படிக்கு, “ஒரு மனிதன் அணிந்திருந்த கோட்டை கழற்ற செய்ய வேண்டும்,” என்பதே அந்த போட்டி. முதலில் காற்று முயற்சித்தது. பெருங்காற்றாக, சுழல்காற்றாக அவன்மேல் வேகமாய் வீச, அந்த கோட்டு அவனைவிட்டு கழன்றுபோக முயற்சித்தது. எவ்வளவு உக்கிரமாக, வேகமாக காற்று வீசியதோ, அவ்வளவுக்கவ்வளவு அவன் அதை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டான். முடிவில் காற்று தோல்வியடைந்தது.

அடுத்து சூரியனுடைய முறை வந்தது. மூர்க்கமான, முரட்டு முறைகள் ஒன்றை யும் கையாளாமல், மெதுவாகத் தன் வெப்ப கதிர்களை அவன்மேல் அதிகமதிகமாய் செலுத்திக் கொண்டேயிருந்தது. சிறு நேரத்திற்குப் பின் அவனாக “ஐயோ, எவ்வளவு உஷ்ணமாயிருக்கிறது?” என்று சொல்லி, தானே தன் மேலிருந்த கோட்டைக் கழற்றி வைத்தான். சூரியன் வெற்றி பெற்றது.
அடக்குமுறையால், ஒருவரை பணிய வைப்பதை விட, அன்பு முறையால் எளிதாக பணிய வைத்துவிடலாம். சட்டத்தினாலும், சமுதாயத்தினாலும், அரசாங்கத்தினாலும், சிறைக்கம்பிகளினாலும் திருத்த முடியாதவர்களை, கிறிஸ்து தன் கல்வாரி அன்பினால் திருத்திக் காண்பித்தார். கொஞ்சமும் அன்பில்லாமல், மனிதரைப் பிடித்து சாப்பிடுகிறதான நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளையும், மிஷனெரிகள் தேடிப்போய், அவர்களிடத்தில் அன்பு செலுத்தி, இரட்சிப்புக்குள் வழிநடத்தினார்கள். தெய்வீக அன்புக்குள் கொண்டு வந்தார்கள். இன்றைக்கும்கூட, காட்டுமிருகங்களையும் அன்பினால் திருத்திவிடுவதைக் காண முடிகிறது. சிங்கங் கள், யானைகள் கூட, அன்புக்கு அடிபணிகிறதை நாம் பார்த்திருக்கிறோம்.

இயேசு கிறிஸ்து சொன்னார், “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்து கிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (மத். 5:44). தேவபிள்ளைகளே, நீங்கள் தீமையை தீமையினால் வெல்லாமல், தீமையை நன்மையினால் வெல்வீர்களாக. ஆரம்பத்தில், “தீமை தான் வெற்றிபெறும்,” என்பதுபோல தோன்றலாம். ஆனால், அன்புக்கு ஆக்கப்பூர்வமான பெரிய வல்லமை உண்டு. அன்பு, மற்றவர்களுடைய இருதயத்தை கவர்ந்து இழுக்கிறது.

மட்டுமல்ல, அன்புக்கு முன்பாக, துஷ்டர்களும் தாழ்ந்து, தங்கள் முழங்கால்களை முடக்குவார்கள். ஆகவே உங்களுடைய செயல்களெல்லாம், தெய்வீக அன்போடு இருக்கட்டும். அப்பொழுது நிச்சயமாகவே வெற்றிமேல் வெற்றி பெறுவீர்கள்.

நினைவிற்கு:- “உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்” (ரோம. 12:9).