நெருக்கி ஏவும் அன்பு!

“கிறிஸ்துவினுடைய அன்பு, எங்களை நெருக்கி ஏவுகிறது” (2 கொரி. 5:14).

கிறிஸ்துவின் அன்பைக் குறித்து, அப். பேதுரு, தன் நிருபத்திலே ஏராளமான தேவ இரகசியங்களை எழுதியிருக்கிறார். அந்த அன்பு, “அறிவுக்கெட்டாத அன்பு” என்றார். நீங்கள் கிறிஸ்துவின் அன்பிலே, வேரூன்றி, நிலை பெற்றவர்களாக வேண்டும். கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும், இன்னதென்று அறிந்துகொள்ள வேண்டும். ஆம், ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு, கிறிஸ்துவின் அன்பு. அவருடைய அன்பு, திராட்சரசத்திலும் இனிமையானது. இன்பமானது (உன். 1:2). கிறிஸ்துவின் அன்பு தியாகமான அன்பு. தன்னையே முற்றிலும் நமக்காக அர்ப்பணிக்கும் அன்பு. ஜீவனைக் கொடுக்கும், அன்பு (யோவா. 3:16). சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கும் அன்பு (யோவா. 15:11).

உலகத்திலே தகப்பனின் அன்பைவிட, தாயின் அன்போ, ஒருபடி விசேஷ மானது. குழந்தை அழகாக துணி மாற்றிப் பவுடர் போட்டிருந்தால், தகப்பன் அணைத்து, பிள்ளையை முத்தமிடுவான். ஆனால் ஒரு குழந்தை சிறுநீரும், மலமும் கழித்தபோது, உடனே தன் மனைவியைக் கூப்பிட்டு, பிள்ளையை சுத்தம் செய் என்று சொல்லி விட்டு, நழுவிவிடுவான். தாய் பிள்ளையை வளர்க்கும்போது, எவ்வளவு தியாகம் செய்கிறாள்!
தெருவிலே விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தை, எங்கிருந்தோ வந்த, ஒரு காரிலே அடிபட்டு விபத்துக்குள்ளாயிற்று. தாய் ஐயோ, என் மகனே, என்று ஓடி வந்தாள். அவளுக்கு எங்கிருந்து அசுர பெலன் வந்ததோ தெரியவில்லை. அந்த காரைப் புரட்டிப்போட்டு, பிள்ளையை உள்ளேயிருந்து தூக்கினாள். சாதாரணமாக அந்தக் காரை ஒருநாளும் அவளால் புரட்டித் தள்ள முடியாது. அவள் உள்ளத்தில் வந்த அன்புதான், அப்படிப்பட்ட காரியத்தை செய்யும்படி அவளை ஏவினது.

அப். பவுல், தன்னுடைய வாழ்க்கையிலே, பரிசுத்த ஆவியினால் தேவனுடைய அன்பு தனக்குள் ஊற்றப்பட்டிருக்கிறதையும் (ரோம. 5:5), அந்த கிறிஸ்துவின் அன்பு நெருக்கி ஏவுகிறது என்றும் குறிப்பிட்டார் (2 கொரி. 5:14). இதனாலே, “ஜெபிக்க வேண்டும்,” என்ற ஏவுதல் உண்டாகிறது. கர்த்தரைப் பிரியப்படுத்த வேண்டும். பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டும் என்ற ஏவுதல் உண்டாகிறது. இதனாலேயே அப். பவுல், மூன்று சுவிசேஷ பிரயாணங்களின் மூலம், ஆத்தும ஆதாயம் செய்தார். அந்த அன்பு நெருக்கி ஏவினதினாலே, கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாகவும், மரிக்க தன்னை ஒப்புக்கொடுத்தார்.”உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” என்று முழங்கினார் (ரோம. 8:39).

கிறிஸ்துவின் அன்பு, சாதாரணமானது அல்ல, இதனால் பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை, நமக்குக் கொடுக்கும்படி சித்தமானார் (மத். 16:19). நீங்கள் கர்த்தர்மேல் அன்புள்ளவர்களாயிருந்தால், உங்களையும், உங்களுக்கு உண்டான யாவற்றையும் கர்த்தருக்குக் கொடுப்பது, உங்களுக்கு மகிழ்ச்சியின் அனுபவ மாயிருக்கும். தேவபிள்ளைகளே, உங்களையும், கர்த்தர் கிருபையாக உங்களுக்குக் கொடுத்த யாவற்றையும் கர்த்தருக்குக் கொடுப்பீர்களா? அப்பொழுது கர்த்தர், வானத்தின் பலகணிகளைத் திறந்து, சிறந்ததை உங்களுக்குக் கொடுப்பார்.

நினைவிற்கு: – “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன் னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். இதுவே, நீங்கள் செய்யத்தக்க புத்தி யுள்ள ஆராதனை” (ரோம. 12:1).