முத்தமிடும் அன்பு!

“அவர் தமது வாயின் முத்தங்களால், என்னை முத்தமிடுவாராக. உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது” (உன். 1:2).

ஒரு பழங்கால கதை உண்டு. ஒரு முறை ஒரு தேவதை, ஒரு இளவரசனுக்கு கொடிய சாபம் கொடுத்து, “நீ ஒரு அருவருப்பான தவளையாக சுற்றித்திரிவாய். என்றைக்கு ஒரு அழகிய இளவரசி வந்து, உன்னை முத்தமிடுகிறாளோ, அதுவரை நீ தவளையைப் போலவே குதித்து, தவளையைப் போலவே சத்தமிட்டு, தவளையைப் போலவே சுற்றித்திரிவாய்,” என்றதாம்.

இந்த பயங்கரமான சாபத்தின்படி, அழகிய இளவரசன் ஒரு தவளையானான். காலங்கள் கடந்துச் சென்றது. ஊரும் பிராணிகளையும், சிறு சிறு மிருகங்களையும், பறவைகளையும் நேசிக்கிற ஒரு இளவரசி, இந்த தவளையின்மேலும் அன்பு கூர்ந் தாள். தவளையின் அருவருப்பையும் பொருட்படுத்தாமல், அதை தூக்கி ஆவலோடு முத்தமிட்டாள். என்ன ஆச்சரியம்! மறுவினாடி அந்த தவளை, இளவரசனாய் மாறி விட்டது.

பாருங்கள்! நாமும்கூட, ஆதாமுக்கு வந்த சாபத்தினிமித்தம், தவளையைப் போல தத்தளித்து சுற்றிக் கொண்டிருந்தோம். பாவங்கள், சாபங்கள், வியாதிகள், நம்மை அருவருப்பாக்கிற்று. தேவசாயலை இழந்துபோனோம். ஆனால் அழகிய தேவ குமாரனாகிய இயேசு, நம்மைத் தேடி வந்து, அன்போடு முத்தமிட்டார். அது கல்வாரியின் முத்தம், காருண்ய முத்தம். அநாதி சிநேகத்தால் நம்மை சிநேகித்த, அந்த அன்பினிமித்தம், அவர் கல்வாரியிலே தன்னுடைய இரத்தத்தை சிந்தினார். அந்த அன்பினாலேயே, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. சாபத்தின் முதுகெலும்புகள் தகர்ந்தன. சாத்தானுடைய அடிமைத்தனம் விலகினது. இமைப் பொழுதிலே, நாம் அழகிய தேவனுடைய பிள்ளைகளாகிவிட்டோம்.

ஆதாமின் பாவங்கள் நம்மை கறுப்பாக்கினாலும், நம்மேல் விழுந்த கிறிஸ்து வின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே, நாம் அழகாகிவிட்டோம். அவருடைய காருண்யத்தினாலே, நம் மேல் இருந்த அடிமைத்தழைகள் முறிந்து, விடுதலையுள்ள வர்களாய் மாறிவிட்டோம். “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படு வதினாலே, பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு, எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவா. 3:1). ஆகவே தாவீது 2 சாமு. 22:36-லும், சங். 18:35-லும், நம்பிக்கையோடே கர்த்தரைத் துதித்து, “உமது காருணியம் என்னைப் பெரிய வனாக்கும்,” என்று விசுவாச அறிக்கை செய்தார். ஆம், ஒருவனுடைய திறமையோ, அவனுடைய ஆஸ்தி, அந்தஸ்தோ, அவனது விடாமுயற்சியோ, அவனைப் பெரிய வனாக்குவதில்லை. கர்த்தருடைய அன்பும், கிருபையும், காருணியமுமே, அவனைப் பெரியவனாக்கும்.

வேதம் சொல்லுகிறது, “அவருடைய காருண்யம், எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம், எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம், கன்னிகைகளையும் வளர்க்கும்” (சகரியா 9:17).

“காருணியம்” என்கிற வார்த்தையை சற்றே தியானித்துப் பாருங்கள். கர்த்தரு டைய அன்பு, பாசம், நேசம் என்ற வார்த்தைகளை விடவும், அது ஆழமானது. அதை பரிசுத்தவான்கள், “காருணிய கர்த்தாவே” என்று ஆண்டவரை அழைத்துப் போற்றிப் புகழுகிறார்கள். நம்மைக் காருணியத்தினாலே அழைத்தவர் என்று, அப். பேதுரு எழுதுகிறார் (2 பேது. 1:3). ஆம், அவர் காருணியத்தினால் அழைத்தார். காருணியத் தினால் சிநேகிக்கிறார். அவருடைய காருணியம் உங்களை பெரியவர்களாக்கும்.

நினைவிற்கு:- “கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்” (சங். 5:12).