இழுத்துக்கொள்ளும் அன்பு!

“நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்” (யோவா. 12:32).

அன்புக்கு ‘ஈர்ப்பு’சக்தி உண்டு. கல்வாரி காந்தமாகிய, இயேசு கிறிஸ்துவுக்கு ஜனங்களை இழுத்துக்கொள்ளும் வல்லமையுண்டு. சாதாரண காந்தம் இரும்புத் தூள்களையெல்லாம் இழுத்துக்கொள்ளுகிறது. நாமும், கிறிஸ்துவண்டையும், பரலோகத்தினண்டையும், இழுத்துக் கொள்ளப்படுகிறோம்.

ஒரு பெயர் கிறிஸ்தவன் ஆலயத்துக்கு வரும்போதெல்லாம் அனைவரையும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டேயிருப்பான். பாடல் குழு சரியாய் பாடவில்லை என்பான். போதகரின் பிரசங்கம் நன்றாகவேயில்லை. பிரசங்கத்தை ஆயத்தம் பண்ணாமல், பிரசங்கிக்கிறார் என்பான். ஆலயத்திலுள்ள மூப்பர்கள், ஊழியக்காரர் கள் அனைவரையும் திட்டிக்கொண்டேயிருப்பான். எப்போதும் எரிச்சலின் ஆவி யோடு, ஆராதனை முழுவதிலும், முறுமுறுத்துக் கொண்டேயிருப்பான்.

ஒருநாள், அவன் சுகவீனமாகி மரணத் தருவாய்க்குள்ளானான். மரண பயம் அவனை வாட்டி வதைத்தது. பரலோகம், தன்னை ஏற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருக்கவில்லை. நித்தியத்தை சந்திக்கவும், அவன் ஆயத்த மாயில்லை. ஆகவே சபைப் போதகரை உடனடியாக வரும்படி அழைத்தான். அவர் ஜெபிக்க ஆரம்பித்ததும், அவன் தனக்குள்ளே, “இது மாய்மாலமான ஜெபம். வீட்டுக்கூரையை தாண்டாது,” என்று சொல்லி முறுமுறுத்தான். ஆனால் அந்தப் போதகரோ, மிகுந்த உருக்கத்தோடும், கல்வாரி அன்போடும், அவனுக்காக கண்ணீரோடு ஊக்கமாய் ஜெபித்துக்கொண்டேயிருந்தார். முறுமுறுத்த அவன் போதகரின் ஜெப நேரத்தில், தன் கண்களைத் திறந்து பார்த்தபோது, அப்போதகரின் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்ததைக் கண்டான். ஜெபித்த போதகருக்குப் பின்பாக, இயேசு மனதுருக்கத்தோடு, அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்த காந்த சக்தியுள்ள கர்த்தருடைய பார்வை, அவனை உடைத்தது. பாவ உணர்வடைந்து, தன்னை முற்றிலும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தான். பாவ மன்னிப்புக்காக கெஞ்சினபோது, கர்த்தர் அவனுடைய பாவத்தை மன்னித்தது மட்டுமல்ல, அவனுடைய நோய்களையும் குணமாக்கி, ஆயுசைக் கூட்டிக் கொடுத் தார். தெய்வீக அன்பு, அவனுடைய முறுமுறுப்பை மேற்கொண்டது. குறைகூறுதலை மேற்கொண்டது. அவன் அன்பின் சீஷனாக, ஊழியம் செய்ய ஆரம்பித்தான்.

கிறிஸ்துவின் அன்பு எப்படிப்பட்டது? கர்த்தர் சொன்னார், “மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன்” (ஓசியா 11:4). ஆம், கர்த்தருடைய அன்பு, தீமையை நன்மையாய் மாற்றும். துக்கத்தை சந்தோஷமாய் மாற்றும். “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும், நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது” (ரோம. 8:28).

தேவன் உங்களை எந்தப் பாதையிலே நடத்தினாலும், எவற்றை உங்களுக்கு பங்காகக் கொடுத்தாலும், அதை சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். “என் தேவன், அன்பின் தேவன். அவர் என்னை நேசிக்கிறவர். அவர் எனக்கு எதை செய்தாலும், அதை என் நன்மைக்கேதுவாகவே செய்வார்,” என்று அறிக்கை செய்யுங்கள். கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஒரு வாக்குக் கொடுக்கிறார். “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (ஏசா. 43:2).

நினைவிற்கு:- “மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” (2 கொரி. 4:17).