ஆயத்தப்படுத்தும் அன்பு!

“தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு, ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1 கொரி. 2:9).

மனுஷனை சிருஷ்டிப்பதற்கு முன்பாக, அவனுக்கு என்னென்ன தேவையோ, அவைகள் எல்லாவற்றையும் முன்பே ஆயத்தப்படுத்தும்படி கர்த்தர் சித்தமானார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை உண்டாக்கினார். மலைகளையும், குன்றுகளை யும், கடல்களையும், ஆறுகளையும் உண்டாக்கினார். இன்னும் கனிவர்க்கங்களையும், பறவைகளையும், மிருக ஜீவன்களையும் உருவாக்கினார். கடைசியாக மனுஷனை சிருஷ்டித்து, ஏதேன் தோட்டத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தபோது, கர்த்தரின் “ஆயத்தப்படுத்துகிற அன்பை” எண்ணி, ஆதாம் வியந்திருக்கக்கூடும்.

மனிதன் பாவம் செய்துவிடுவான் என்பதற்காகவே, பாவ நிவாரண பலியாக இயேசுவை, உலகத்தோற்றத்துக்கு முன்பாக, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக ஆயத்தப்படுத்திவிட்டார். அப்படியே ஒரு நாள் நாம் பரலோகத்துக்குச் செல்லும் போது, பரலோகத்திலும் கர்த்தர் நமக்காக யாவற்றையும் செய்து முடித்திருக்கிறதைப் பார்த்து, நாம் மிகவும் மகிழ்ச்சியடைவோம். ஆண்டவரைத் துதிப்போம்.
யோனா, கர்த்தருடைய சமுகத்துக்கு விலகி, தர்ஷீசுக்குப் போவதற்கு முன்பே, அவனை விழுங்க, ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்திவிட்டார். மூன்று நட்களுக்குப் பின்பு, நினிவேயிலே கக்க வேண்டும் என்பதைப் போதித்திருந்தார். மனம் சோர்ந்து போன யோனாவைத் தேற்றும்படி, குளிர்ச்சியான ஆமணக்குச் செடியை ஆயத்தப்படுத்தி னார். பின்பு யோனாவுக்கு பாடம் படித்துக் கொடுக்க, அதில் ஒரு பூச்சியையும் உண்டாக்கினார்.

ஒரு பெரிய செல்வந்தன், தனக்கிருந்த ஒரே மகன் இறந்துபோன அதிர்ச்சியைத் தாங்கமுடியாமல் இருதய நோயால் தாக்குண்டு மரித்துப்போனார். அவனுக்கு மனைவியோ, வேறு பிள்ளைகளோ, இல்லாதபடியால், அவன் சொத்துக்கள் முழு வதும் ஏலத்துக்கு வந்தது. அந்த வீட்டில் வேலை செய்த வயதான மூதாட்டிக்கு, மரித்துப் போன அந்த சிறுவன்மேல், அளவில்லாத அன்பு இருந்தது.

ஆகவே அவள், ஏலமிடப்படும் இடத்துக்கு வந்தாள். விலையேறப்பெற்ற உடைகள், தட்டு முட்டு சாமான்கள், கம்பளங்கள் என்று ஒவ்வொன்றாய் ஏலமிடப்பட்டது. முடிவாக, அந்த வீட்டில் மாட்டப்பட்டிருந்த சிறுவனின் போட்டோவை ஏலம் விட்டபோது, ஒருவரும் ஏலம் கேட்கவில்லை. அந்த மூதாட்டி, தன்னிடமிருந்த எல்லா பணத்தையும் கொடுத்து, அந்த சிறுவனின் போட்டோவை வாங்கினாள்.
தன் வீட்டுக்குச் சென்று, தற்செயலாக அந்த போட்டோவின் பின்புறத்தைத் திறந்தபோது, அங்கே செல்வந்தனின் உயில் இருக்கக் கண்டாள். அதில் என் மகனில் அன்புகூருகிறவர்களுக்கு, என் ஆஸ்தி அனைத்தையும் கொடுக்க வேண்டுமென்று எழுதியிருந்தது. அதன் மூலம், அந்த செல்வந்தனின் ஆஸ்தி அனைத்தும், அந்த மூதாட்டிக்கு வந்து சேர்ந்தது.

ஒரு பழைய பாடல் உண்டு. “பொன் வெள்ளியுமோ, பெரும் பேர் புகழோ, பண ஆஸ்தியும் வீணல்லவோ? பரலோகத்தின் செல்வமே, என் அருள் இயேசுவே போதும் எனக்கு நீரே”. ஆம், தம்முடைய ஒரேபேறான குமாரனோடுகூட இரட்சிப்பையும், அபிஷேகத்தையும், ஆவியின் வரங்களையும் கூட, கர்த்தர் உங்களுக்காக ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

நினைவிற்கு:- “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளா திருப்பதெப்படி?” (ரோம. 8:32).