மன்னிக்கிற அன்பு!

“எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள், அன்பு திரளான பாவங்களை மூடும்” (1 பேதுரு 4:8).

கிறிஸ்துவின் அன்பை, “அறிவுக்கெட்டாத அன்பு” என்று வர்ணித்தார் அப். பவுல் (எபேசி. 3:19). தேவ அன்பிலே, மிகச் சிறந்தது, நம்முடைய பாவங்களை மன்னித்து மறக்கிற அன்பு. நாம் எவ்வளவு துரோகிகளாயிருந்தாலும், கிறிஸ்துவுக்கு சத்துருக்களாயிருந்தாலும், கர்த்தர் அதையெல்லாம் மன்னித்து, அவருடைய சொந்த பிள்ளைகளாக அரவணைத்து, ஏற்றுக்கொள்ளுகிறார்.

கல்வாரிச் சிலுவையிலே, இயேசு தம்முடைய இரத்தத்தையெல்லாம் சிந்திக் கொடுத்து, பிதாவினிடத்தில் முழு இருதயத்தோடு வேண்டிக்கொண்டதெல்லாம், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே.” என்பதாகும். சிலுவையிலே தொங்கிய ஆறு மணி நேரமும், அதையே திரும்பத் திரும்ப அவர் சொல்லிக்கொண்டிருந்தார். எத்தனையோ குஷ்டரோகிகளைக் குணமாக்கினவர், எத்தனையோ குருடருடைய கண்களைத் திறந்தவர், மரித்தோரை உயிரோடு எழுப்பினவர். இன்னும் அவரிடம் நன்மைப் பெற்றவர்கள், ஆயிரமாயிரமாக இருந்தாலும், கிறிஸ்துவுக்காக அனுதாபப்படவோ, அவரை ஆற்றித் தேற்றவோ, அங்கு ஒருவருமில்லை.

தன்னிடம் நன்மையை அனுபவித்து, தீமையையே செய்கிறவர்களைப் பார்க் கும்போது, இயேசு கிறிஸ்து கோபப்படவில்லை. சாபமிடவில்லை. அவர் மன்னிப் பதற்கு தயவு பெருத்திருந்தார். அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நாமும் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும் அல்லவா? “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (கொலோ. 3:13).

கிறிஸ்து மன்னித்துவிட்டதோடு நிற்பதில்லை. அவர் மறந்தும் விடுகிறார். கடலின் ஆழத்திலே போட்டுவிட்டு, அதை எண்ணாமலும் இருப்பார். உங்களுடைய ஒவ்வொரு பாவங்களுக்குள்ளும், போய் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதில்லை. “மன்னியும் பிதாவே” என்ற வேண்டுதலோடு, இயேசு சிந்தின இரத்தம், ஒவ்வொரு வருடைய பாவங்களையும் கழுவி, மன்னித்து விடுகிறது (1 யோவான் 1:7).
மகா அலெக்சாண்டருடைய உருவப்படத்தை, அழகாக வரைந்தார் ஒரு ஓவியர். ஆனால் அலெக்சாண்டர் வந்து, அதைப் பார்த்ததுவிட்டு, “எங்கே நெற்றியிலுள்ள என்னுடைய வீரத் தழும்பு?” என்று கேட்டார். அதற்கு அந்த ஓவியர், “அரசே என்னுடைய அன்பு அதை மூடிவிட்டது. உங்களுடைய முகம் மிக அழகாக, பளீச் சென்று தெரிய வேண்டும்” என்பது என் விருப்பம் என்றார்.

ஒரு வீட்டில் தெய்வீக அன்பு கிரியைச் செய்யுமானால், அங்கே ஒருவருக்கொரு வர் குறை கண்டுபிடித்து, அவர்களுடைய உள்ளம் புண்படும்படி பேசுவதில்லை. அவர்கள், தெய்வீக அன்போடு, எல்லா குறைகளையும் மன்னித்து, மறந்து விடு கிறார்கள். ஒருவருக்கொருவர் பாசமாயிருப்பார்கள்.

சிலர் “மன்னித்துவிட்டேன்” என்பார்கள். ஆனால் மறப்பதில்லை. அது அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலே துளைத்துக்கொண்டேயிருக்கும். ஏற்ற சமயம் வரும்போது, வெடிக்குண்டு வெடிப்பதுபோல, வெடிக்க ஆரம்பிக்கும். “எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும்” என்று ஜெபியுங்கள்.

நினைவிற்கு:-“அங்கேதானே பலிபீடத்தின் முன், உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (மத். 5:24).