அன்பில் நிலைத்திருங்கள்!

“அன்பில் நிலைத்திருக்கிறவன், தேவனில் நிலைத்திருக்கிறான். தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1 யோவா. 4:16).

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மிஷனெரி இந்தியாவில் வந்து ஊழியம் செய்து, அநேக சபைகளை ஏற்படுத்தினார். அவர் எப்பொழுதுமே, தேவ அன்பினால் நிரம்பியிருப்பார். இயேசு கிறிஸ்துவினுடைய, தியாகமான அன்பைக் குறித்து பிரசங்கிப்பார். அவர் உண்மையான அன்பும், அக்கறையும் காட்டி, ஏழை மக்கள் மேல் மனதுருகினபடியால், ஜனங்கள் அவரை மிகவும் நேசித்தார்கள்.
ஒருநாள் அவருடைய கிளை சபையிலுள்ள போதகர், அவரிடம் வந்து, “போதகரே, என்னுடைய சபையின் மூப்பருக்கு நான் எவ்வளவோ நன்மைகள் செய்தாலும், அன்பு பாராட்டினாலும், அவர் எனக்கு விரோதமாய் பேசி கொண்டி ருக்கிறார். என் வீழ்ச்சிக்காக குழி வெட்டுகிறார். எவ்வளவு காலம் நான் இதை பொறுத்துக்கொள்வது?” என்று கேட்டார்.

அவர் சொன்ன எல்லாவற்றையும், பொறுமையாய் கேட்ட அந்த மிஷனெரி போதகர், “நான் ஒன்று சொல்லுகிறேன். நீ அந்த மூப்பர் மேல் வைத்த அன்பை இன்னும் பல மடங்கு அதிகரித்து விடு. நீ பாராட்டுகிற அன்பினாலே அவரை திக்கு முக்காட செய்து விடு. அன்புக்கு அடிபணியாதவர்கள் ஒருவருமில்லை,” என்றார். அப்படியே, அன்றோடு அவர்களுக்குள்ளேயிருந்த பிரச்சனை தீர்ந்தது.
ஒரு குடும்பப் பெண், அவருடைய ஆலோசனையை நாடி வந்தாள். “ஐயா, என்னுடைய அப்பா, அம்மா, ஒரு துஷ்ட மிருகத்துக்கு என்னை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அவனிடம் பணம் இருந்ததே தவிர, குணம் இருந்ததில்லை. சுயநலமாக தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ளத்தான், என்னிடத்திலே வருகிறானே தவிர, உண்மையான அன்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவே விவாகரத்து கோரலாம் என்று எண்ணுகிறேன்,” என்றாள்.

அதற்கு அவர் “மகளே, ஒவ்வொருநாளும் கல்வாரியின் அன்பை அதிகமாய் தியானம் செய். நீ உன் கணவனிடம் காட்டும் அன்பை, மிகவும் அதிகமாக்கிவிடு, அப்பொழுது எல்லாம் சரியாகிவிடும்,” என்று சொல்லி அனுப்பினார். அப்படியே, அவள் அன்பு காட்டியபோது, அந்த குடும்பம் தழைத்தோங்கி செழித்தது. யார் அவரிடம் ஆலோசனைக்குப் போனாலும், அவர் கூறுவது இதுதான். உன் அன்பின் ஆழத்தை அதிகப்படுத்து. Increase the dosage of your love.

ஒருமுறை பேதுரு இயேசுவைப் பார்த்து, நான் என் சகோதரரை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறையா? என்று கேட்டார். ஆனால் ஆண்டவர் அந்த மன்னிக்கிற அன்பின் ஆழத்தை அதிகப்படுத்தும்படி, ஆலோசனை சொன்னார், “ஏழெழுபது முறை மன்னிப்பாயாக,” என்று ஆலோசனை சொன்னார்.

கிறிஸ்து முழுக்க, முழுக்க, நம்மை மன்னிக்கிற அன்பினால் நிரம்பியிருக்கிறார். அவர் ஏழெழுபது முறை அல்ல, நொறுங்குண்ட இருதயத்தோடு, கண்ணீரோடு அவரண்டை வரும்போதெல்லாம், எவ்வளவு பெரிய குற்றமும், பாவமும் செய்தாலும், அதையெல்லாம் அவருடைய தெய்வீக அன்பு சுத்திகரித்துவிடுகிறது.

இயேசு கிறிஸ்து சொன்னார், “பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல, நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன். என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறது போல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” (யோவா. 15:9,10).

நினைவிற்கு:- “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே , என்னுடைய கற்பனையாயிருக்கிறது” (யோவா. 15:12).