உடன்படிக்கையின் தேவன்!

“தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி, நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் சந்ததியோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்” (ஆதி. 9:8,9,10).

உலகத்திலுள்ள மனுஷரோடு தேவாதி தேவன் செய்த முதல் உடன்படிக்கை இது! நம்முடைய பிரதிநிதியாய் நின்று, நோவாவும், அவருடைய குடும்பத்தாரும் கர்த்தரோடு உடன்படிக்கை செய்தார்கள். கர்த்தர் உடன்படிக்கையை காக்கிற உண்மையுள்ள தேவனாயிருக்கிறார். அவர் வாக்குத்தத்தங்களின் தேவன். மனதுருக்கத் தோடு உடன்படிக்கை செய்திருக்கிற தேவன். கர்த்தருடைய கிருபையையும், வாக்குத்தத்தங்களையும், உடன்படிக்கையையும் காத்து நடப்பீர்களென்றால், தேவனுடைய மகிமையை காண்பீர்கள்.

“வானவில்” பூமியில் மட்டுமல்ல, பரலோகத்திலும் கர்த்தருடைய உடன் படிக்கையாக காணப்படுகிறது. அப். யோவான், பத்மு தீவிலிருந்து பரலோக சிங்காசனத்தை நோக்கிப் பார்த்தார். “வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக் கல்லுக்கும், பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார். இந்த சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில் இருந்தது. அது பார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று” (வெளி. 4:3).

“வானவில் எப்படி உண்டாகிறது?” சூரிய ஒளியானது, மழை நீர்த்துளிகளினூடே ஊடுருவி செல்லும்போது, கதிர் சிதைவு உண்டாகி, எதிர் திசையில் வானத்தில் ஒரு வில்லாக தோன்றுகிறது. அழகான ஏழு நிறங்கள் அடுக்கடுக்காய் காணப்படுகிறது. அது சரி, பரலோகத்தில் எப்படி வானவில் தோன்றுகிறது. நீதியின் சூரியனாக நம் ஆண்டவர் கெம்பீரமாக சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அந்த சூரியனிலிருந்து வருகிற ஒளிக்கதிர்கள், சிங்காசனத்துக்கு முன்பாக பிரகாசித்துக் கொண்டிருக்கிற ஏழு அக்கினி தீபங்களூடாக அவருடைய சுபாவங்களை வெளிப்படுத்தும்போது, வானவில்லை காண்கிறோம். கர்த்தருடைய அன்பும், மனதுருக்கமுமே.

அன்றைக்கு நோவாவோடு உடன்படிக்கை செய்தவர், இப்பொழுது அவரு டைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நம்மோடு உடன்படிக்கை செய்திருக்கிறார். அவர்தான் உலகத்தின் பாவங்களையும், அக்கிரமங்களையும் அதனால் வரும் நியாத்தீர்ப்புகளையும் சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி. அவருடைய உடன்படிக்கை என்ன? “மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா. 54:10). ஆகவே தாவீது ராஜா, கர்த்தருடைய உடன் படிக்கையை ஞாபகப்படுத்தி ஜெபித்தார். “உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும். பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே” (சங். 74:20).

“உடன்படிக்கை” என்பது, இரண்டுபேர் இணைந்து செய்கிறதாகும். கர்த்தர் இனி ஜலப்பிரளயத்தை ஏற்படுத்தமாட்டேன். உலகத்தை அழிக்கமாட்டேன் என்று உடன்படிக்கை செய்தபோது, உங்கள் பகுதியில் நீங்கள் செய்ய வேண்டிய பகுதியுமுண்டு. “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம். அவரைத் துதிப்போம். அவரை பின் பற்றுவோம்” என்று யோசுவாவைப்போல உடன்படிக்கை செய்து விடுங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர். அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள். அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்” (ஏசா. 40:22).