அரராத் மலை!

“ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே, பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று” (ஆதி. 8:4).

வேதத்தில் சொல்லப்பட்ட, முதல் மலை, “அரராத் மலை” யாகும். “அரராத்” என்றால், “உயர்ந்த, பரிசுத்தமான” இடமாகும். தற்போது, துருக்கி தேசத்தின் அருகில், “அர்மீனியா”வில் இந்த மலையிருக்கிறது. இதன் உயரம், ஏறக்குறைய ஏழாயிரம் அடி. ஜலப் பிரளயத்திற்கு பின்பு, நோவாவும், அவருடைய குடும்பத்தாரும், அரராத் மலையிலே இறங்கினார்கள். ஆண்டவர் அவர்களை, உயர்ந்த ஸ்தானத்திற்கு, மேன்மையான, மகிமையான, சூரியனுடைய ஒளி வீசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு கொண்டு போய் வைத்தார். அங்கு சுத்தமான காற்று கிடைக்கும். அங்கு பூரணமான அமைதி, சமாதானம் இருக்கும்.

நோவாவும், அவருடைய குடும்பத்தாரும் கஷ்டப்பட்டு, அந்த மலையின் மேல் ஏறவில்லை. அவர்கள் செய்ததெல்லாம், அந்த பேழைக்குள் ஏறினார்கள். மழை பெய்ய, பெய்ய, அந்த பேழை தானாகவே உயர்ந்துகொண்டே வந்தது. நீங்கள் கிறிஸ்துவுக்குள் வாருங்கள். உயருவீர்கள்.

நோவாவின் பேழையில், சுக்கான் இல்லை. இன்ஜின் இல்லை. மனித முயற்சி யிலோ, சுயஞானத்தினாலோ, எவ்விதத்திலும் அதை ஓட்டிச் செல்ல முடியாது. நீங்கள், பரிசுத்த ஆவியானவருக்கு, உங்களை முற்றிலும் ஒப்புக்கொடுக்கும்போது, அவரே உங்களுக்கு இன்ஜினும், சுக்கானுமாய் இருப்பார். ஆரம்பத்தில் கணுக்கால் அளவிலிருந்து, முழங்கால் அளவிற்கும், பின்பு, இடுப்பு அளவிற்கும், பின்பு, நீச்சல் ஆழத்திற்குமாக, உங்களை வழிநடத்திச் சென்று உயர்த்திக்கொண்டே யிருப்பார். நீங்கள் கீழாகாமல் , மேலாவீர்கள்.

அன்று நோவா, பேழை செய்வதற்கு , எவ்வளவோ கஷ்டப்பட்டிருந்திருப்பார். தம்முடைய நிலபுலன்களை எல்லாம் விற்று, மரம் வாங்கி, தச்சருக்கு கூலி கொடுத்திருந்திருப்பார். அவர் இழந்ததோ, கொஞ்ச நிலபுலன்களாய் இருக்கக்கூடும். இப்பொழுது, புதிய பூமியில் இறங்கி விட்ட பின், முழு உலகமுமே அவருக்கு சொந்தமாகி விட்டது. அவர் விற்ற நிலத்தைப் பார்க்கிலும், கோடி கோடி மடங்கு நிலபுலன்கள் அவருக்கு சொந்தம். “கிறிஸ்துவுக்காக இழந்த எவரும் தரித்திரராவதில்லை” என்று பாடுவது, எத்தனை உண்மையானது!

நோவாவின் காலத்தில், நாற்பது நாட்கள் இடைவிடாமல் மழை பெது கொண்டே இருந்தது. “நாற்பது” என்ற எண், நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. வேதத்தில் மொத்தம், நாற்பது பெரிய நியாயத்தீர்ப்புகள் உண்டு. யோனா நினிவேக்குப் போ பிரசங்கிக்கும்போது, அந்த மக்கள் மனம்திரும்ப, நாற்பது நாட்கள் தவணைக் கொடுத்தார். அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். தேவபிள்ளைகளே, இதோ, கிருபையின் நாட்கள், உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

நோவாவின் காலத்தில், வானத்தின் மதகுகள், திறந்து, மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டினது. அதுபோல, கர்த்தருடைய வருகைக்கு முன்பாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகம், தேசமெங்கும் ஊற்றப்படும். ஆகவே, பின்மாரி காலத்து மழைக்காக கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள் (சக. 10:1). “மாம்சமான யாவர் மேலும், என் ஆவியை ஊற்றுவேன்” என்று கர்த்தர் வைராக்கியமாய் சொல்லுகிறார் (யோவே. 2:28).

நினைவிற்கு:- “கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்” (ஏசா 2:2).