வானத்தின் மதகுகள்!

“மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன” (ஆதி. 7:11).

ஆற்றுத் தண்ணீர், வீணாகாதபடி, அணைகளை கட்டுவார்கள். பிறகு பாசனத்திற்கு பயன்படும்படி, அணைகளின் மதகுகளைத் திறப்பார்கள். வானத்திற்கும், ‘மதகுகள்’ உண்டு. “வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும், உங்களை ஆசீர்வதிப்பேன்” என்று வாக்குத்தத்தம் பண்ணின அதே ஆண்டவர், வானத்தின் மதகுகளை, திறந்தும் விடுகிறார். நோவாவின் நாட்களில், கர்த்தர் வானத்தின் மதகுகளைத் திறந்தபோது, நாற்பது நாட்கள், இரவும் பகலும் அடைமழை பொழிந்தது.
அந்த வானத்தின் மதகுகளிலிருந்து, பொழிந்த தண்ணீரானது, முதலாவது, பாவிகளை வேராடு அழித்தது. இரண்டாவது, பேழையிலிருந்த, தேவ ஜனங்களை உயர்த்தியது. வருகை வரும்போது, தேவனுடைய ஜனங்கள் எவ்விதமா உயர்த்தப் படுவார்கள் என்பதற்கு, அது அடையாளமா விளங்கியது.

நோவாவின் நாட்களில், வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டு, பெரும் மழை எப்படி பொழிந்ததோ, அதைப்போலவே, பரிசுத்தாவியாகிய பெருமழையை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். “பின்மாரி காலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக் கொள்ளுங்கள்” என்றார் சகரியா தீர்க்கதரிசி (சகரியா 10:1). “ஆண்டவரே, அபிஷேகத்தின் பின்மாரி, எங்களுக்கு வேண்டும். வானத்தின் மதகுகளை, எங்களுக்கு திறந்தருளுவீராக” என்று மன்றாடுவோமாக! முன்பு மழையால், எழுத்தின்படியான பாவிகள் அழிந்தார்கள். ஆனால் அபிஷேக மழை ஊற்றப்படும் போது, பாவங்களும், அக்கிரமங்களும் அழிகின்றன. தேவ சமாதானமும், கல்வாரி அன்பும் ஊற்றப்படுகிறது. தேவ ஜனங்கள், மென்மேலும் உயர்த்தப்படுவார்கள், பரிசுத்தப்படுவார்கள்.

கொஞ்ச காலத்திற்குள்ளாக, கர்த்தர் வானத்தின் பெரிய மதகுகளை திறந்து விடப் போகிறார். உலகம் ஒரு அடை மழையை சந்திக்கப் போகிறது. நோவாவின் காலத் திலே, நாற்பது நாட்கள் இரவும் பகலும் மழை பொழிந்தது போலவே, தொடர்ச்சியாக அவர் அபிஷேகத்தை இந்த பூமியில் ஊற்றுவார். இப்பொழுதே, அந்த அபிஷேகத் தின் தூறல்களைக் காண்கிறோம். விரைவில் அடைமழையைக் காண்போம். அப்பொழுது, சபையாகிய பேழை, உன்னதங்களுக்கு உயர்த்தப்படும்.

“இயேசு” என்கிற “இரட்சிப்பின் பேழையில்” கோடிக்கணக்கான தேவபிள்ளை கள் அமர்ந்திருக்கிறோம். பரிசுத்தாவியின் பெருமழை பொழிந்து, எக்காளம் தொனிக்கும் போது, நாம் வருகையிலே உயர்த்தப்படுவோம். “எக்காளம் தொனிக் கும், அப்பொழுது மரித்தோர், அழிவில்லாதவர்களா எழுந்திருப்பார்கள்; நாமும், மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது, அழியாமையையும், சாவுக்கேது வாகிய இது, சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும் (1 கொரி. 15:52,53).

கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும், கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல், அவர்களோடேகூட, ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமா, எப்பொழுதும், கர்த்தருடனேகூட இருப் போம் (1 தெச. 4:16,17).

நினைவிற்கு:- “அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும், உம்முடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது” (சங். 18:15).