பொல்லாத சிந்தை!

“மனுஷனுடைய அக்கிரமம், பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம், நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டார்” (ஆதி. 6:5).

கர்த்தர் உங்களுடைய செயலை மட்டுமல்ல, உங்களுடைய சிந்தையையும்கூட கவனித்து, அறிகிறார். நோவாவின் நாட்களில், ஜலப்பிரளயமாகிய நியாயத்தீர்ப்பு வருவதற்கு முக்கிய காரணம், அந்த நாட்களில் வாழ்ந்தவர்களின் இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம், நித்தமும் பொல்லாததாக இருந்தது. ஆம், அவர் எண்ணங்களையும், சிந்தைகளையும் அறிகிறவர்.

ஒரு நாள், வேதபாரகரும், பரிசேயரும், யோசனைபண்ணி, “தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? என்றார்கள். இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி, உங்கள் இருதயங்களில், நீங்கள் சிந்திக்கிறதென்ன?” (லூக். 5:21,22) என்று கேட்டார். “பரிசேயருடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம். தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம்” என்றார் (லூக். 11:17). மத்தேயு 9:4, மாற்கு 2:8; 8:33-ல், “கர்த்தர், மனிதருடைய சிந்தையை அறிகிறவர்” என்று எழுதப் பட்டுள்ளது.

அதே நேரத்தில், உங்களுடைய சிந்தையிலே, பரிசுத்தத்தையும், வெற்றியையும் தரும்படி, கல்வாரி சிலுவையிலே எவ்வளவாய் கிறிஸ்து பாடுபட்டார். பொதுவாக, எண்ணங்கள், சிந்தைகள் தலையிலிருந்து பிறக்கின்றன. ஆகவே, இயேசு பாடுபட்ட இடம், மண்டையோட்டு மலை, கல்வாரி, கபாலஸ்தலம், கொல்கொதா என்றெல் லாம் அழைக்கப்படுகிறது. அவர் பாடுபட்டு, தன் ஜீவனைக் கொடுக்க தெரிந்தெடுத்த இடம், அந்த “மண்டையோட்டு ஸ்தலமாகும்.”
சிந்தையிலிருந்து வருகிற எண்ணங்களை சீர்ப்படுத்தும்படி, கிறிஸ்து ஜனங்களின் நியாயத்தீர்ப்பை, தன் சிரசின்மேல் சுமந்துகொண்டு, முள்முடி சூட்ட ஒப்புக் கொடுத்தார். அவருடைய தலையில், கோலினால் அடித்தார்கள். அந்த தலையிலே, நியாயத்தீர்ப்பாகிய முள், ஆழமாய் குத்திச் சென்றது. உங்களுக்கு எண்ணங்களிலே, சிந்தனைகளிலே, ஜெயம் வேண்டும் என்பதற்காக, இயேசு கல்வாரியிலே எவ்வளவு பாடுகள்பட்டு, வேதனையைச் சகித்தார், பாருங்கள்.

உங்களுடைய சிந்தனைகள், பரிசுத்தமாக வேண்டுமென்று விரும்புகிறீர்களா? சிலுவையண்டை வந்து நின்றுவிடுங்கள். உங்களுடைய வீண் சிந்தனைகளினிமித்தம், கிறிஸ்துவினுடைய சிரசு, இரத்தக்களமாயிருக்கிறது. அவருடைய முகம், அவமானத் துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, காறித் துப்பப்பட்டிருக்கிறது. நோவா காலத்தில், ஜனங்களின் இருதயத்தின் நினைவுகள், சிந்தைகள் எல்லாம் பொல்லாங்கானவை களாய் இருந்தன. ஆகவே, நியாயத்தீர்ப்பு இறங்கினது. ஆனால் கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக, உங்களுக்கு இரக்கம் கிடைத்திருக்கிறது. உங்களுடைய சிந்தை தூய்மையாக்கப்பட்டு, கறைதிரையற்றதாய் மாறுவதற்கு, சிலுவையில் தொங்கின கிறிஸ்துவின் இரத்தம், எவ்வளவு நல்ல பரிகாரத்தை செய்து தருகிறது.

“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும். என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங். 139:23,24).

நினைவிற்கு:- “எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச் சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்” (மத். 15:19).