எனக்குப் போதித்தருளும்!

“நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங். 90:12).

இது ஒரு சிறு ஜெபம்தான். ஆனால் அபூர்வமான ஜெபம், நம்முடைய சிந்தனையைத் தூண்டிவிடும் வித்தியாசமான ஜெபம், “எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” என்று கர்த்தருடைய போதனைக்காக, இருதயத்தை ஊற்றி ஜெபிக்கும் ஜெபம்.

வேதத்தில் அநேக சிறு சிறு ஜெபங்களுண்டு. “பாவியாகிய என்மேல் கிருபையா யிரும்” என்று ஆயக்காரன் ஜெபித்தான். தன்னுடைய துக்கத்தை மாற்றும்படி, யாபேஸ் உருக்கமான ஜெபம் செய்தார். வானத்திலிருந்து அக்கினியை இறங்கப் பண்ணும்படியாக, எலியா செய்த, வல்லமையான ஜெபம் உண்டு. அதே நேரத்தில், தன் இரண்டு கண்களும் பிடுங்கப்பட்ட நிலைமையிலே, பரியாசப் பொருளாக நின்ற சிம்சோன், ஜெபித்த ஜெபமுமுண்டு. “நீர் என்னை ஆசீர்வதித்தா லொழிய உம்மை விடுவதில்லை” என்று யாக்கோபு ஜெபித்த ஜெபமுமுண்டு. “தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” என்று குருடனான பர்திமேயு ஜெபித்தார்.

வேதத்திலே, ஏழு பேர், “தேவனுடைய மனுஷர்” என்று அழைக்கப்பட்டார்கள். அதிலே முதலானவரும், முக்கியமானவரும் மோசேதான் (உபா. 33:1). இரண்டாவதாக, சாமுவேல் (1 சாமு. 9:6-10). மூன்றாவதாக, தாவீது (நெகேமி. 12:24). நான்காவதாக, எலியா (1 இராஜா. 17:18). ஐந்தாவதாக, எலிசா (2 இராஜா. 4:7). ஆறாவதாக, செமாயா (2 நாளா. 11:2). ஏழாவதாக, ஆனான் (எரே. 35:4). இதில் மோசே, சிறந்த ஜெப வீரர் மட்டுமல்ல, முகமுகமாய் கர்த்தரோடு பேசின வல்லமையான தீர்க்கதரிசி. “கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவர். சகல மனுஷரிலும் சாந்தகுணமுள்ளவர்” என்று நற்சாட்சி பெற்றவர்.

அப்படிப்பட்டவருடைய ஜெபத்தை, நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் அல்லவா? எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும் என்று மோசே ஜெபித்தார். இன்றைய மனுஷனுக்கு, பல்வேறு விதமான விஞ்ஞான அறிவுகளிருக்கின்றன. மருத்துவ அறிவு, பூகோள அறிவு, வானமண்டலத்தைப் பற்றிய அறிவு, கம்ப்யூட்டர் அறிவு என்று அவன் அறிவிலே முன்னேறிக்கொண்டு போகிறான். ஆனால், அவனுக்கு இல்லாத ஒரே அறிவு, நாட்களை எண்ணும் அறிவு.
பூமியிலே அவன் எவ்வளவு நாட்கள் வாழ்ந்திருப்பான்? அவன் எப்பொழுது மரிப்பான்? எப்பொழுது இந்த உலகம் முடிவடையும், எப்பொழுது கிறிஸ்து மீண்டும் இந்த உலகத்துக்கு வருவார்? அதை அறிய ஒருவருக்கும் அறிவில்லை. தூக்குக்காக காத்திருந்த ஒரு கைதியை சந்தித்தேன். “ஐயா, வெளியிலுள்ளவர் களுக்கு நாட்களை எண்ணும் அறிவு இல்லை. ஆனால் எனக்கோ, இத்தனாம் தேதி, இத்தனாம் மணிக்கு தூக்குத் தண்டனை என்று நிர்ணயித்துவிட்டதால், நாட்களை எண்ணும் அறிவு எனக்கு உண்டு. ஆனால் அந்த அறிவு மரண பயத்தை தந்து என்னை வாட்டுகிறது” என்றான்.

டாக்டர் ஜஸ்டின் பிரபாகரன், சகோதரன் சங்கர் போன்ற அநேக ஊழியர்கள் இளமையிலே மரித்துப்போனார்கள். இரண்டு பேருக்கும், நீண்ட கால ஊழிய திட்டங்கள், எதிர்பார்ப்புகள் இருந்தன. நாட்களை எண்ணும் அறிவு உங்களுக்கு இருக்குமானால், ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக்கொள்வீர்கள். நாட்கள் பொல்லாதவைகளானதால், காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்று எபே. 5:16-ல் கூறுகிறது.

நினைவிற்கு:- “உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே” (யாக். 4:14).