மோசேயின் ஜெபம்!

“ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்” (சங். 90:1).

வேதத்தின் பெரும்பாலான சங்கீதங்களை, தாவீது எழுதினார். “சங்கீதக்காரன்” என்ற பெயரைப் பெற்றார். வாத்திய கருவிகளை வாசிப்பதிலும், பாடல்களைப் பாடுவதிலும் தேறினவராயிருந்தாலும், அவருடைய ஜெபம், உள்ளத்தை அசைக் கிறது. 90-ம் சங்கீதத்தை யார் எழுதினார் என்பதைக் குறித்து, முன்னுரையிலே, அடைப்பு குறிக்குள்ளே, “தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்” என்று எழுதப்பட்டிருக்கிறது.

அதை வாசிக்கும்போதே, நம்முடைய உள்ளத்திலே ஒரு பயபக்தி உண்டாகிறது. மோசே, தனது எண்பதாவது வயதிலே, ஓரேப் என்ற மலையிலே நின்றபோது, கர்த்தர் முட்செடியிலே, அவருக்கு தரிசனமானார். அதற்கு முன்பாக, அவர் ஜெபித்த எந்த ஜெபத்தையும் வேதத்தில் காணமுடியாது. தனது எண்பதாவது வயதிலே, அவர் ஒரு பலத்த ஜெப வீரனாய் மாறினார். அவர் செய்த விண்ணப்பங்களுமுண்டு, வேண்டுதல்களுமுண்டு, திறப்பிலே நின்று ஜெபித்த, மன்றாட்டுமுண்டு.
மட்டுமல்ல, ஒன்றும் புசியாமலும், குடியாமலும் நாற்பது நாட்கள் வீதம் இரண்டு முறை சீனாய் மலையிலே ஏறி, கர்த்தருடைய சமுகத்திலே நின்றார். கர்த்தரோடு முகமுகமாய் பேசினார். முதல் முறை தேவன் தன் கைகளினால் எழுதின, இரண்டு கற்பலகைகளான நியாயப்பிரமாணத்தை, இஸ்ரவேலருக்கு கொண்டு வந்தார். மலையின் அடிவாரத்திலே ஜனங்களின் பாவங்களைக் கண்டு மோசே அதை உடைத்துப்போட்டார். பின்பு அந்த கற்பலகைகளுக்குத் தக்கதாக, வேறு இரண்டை அவர் செய்து, திரும்பவும் சீனாய் மலையில் ஏறி, நாற்பது நாட்கள் கர்த்தரோடு முகமுகமாய் பேசினார்.

நீங்கள் ஜெபிக்கும்போது, உங்களுடைய உள்ளத்தைக் கர்த்தர் பக்கமாய் திருப்புங்கள். அப்பொழுது கர்த்தருடைய பிரசன்னத்தை உணருவீர்கள். கர்த்தரைத் துதித்துக்கொண்டேயிருக்கும்போது, மௌனமாய் அவர் பேசுவார். மெல்லிய குரலின் மூலமாய் பேசுவார். தேவனுடைய சாயலைக் காண்பீர்கள். முகமுகமாய் அவர் பேசும்போது, தேவ மகிமையை காண்பீர்கள்.

சாதாரணமாய், ஒரு மனுஷனால் நீண்ட நேரம் ஜெபிக்க முடியாது. அவனுடைய சிந்தனைகளை ஒருமுகப்படுத்த முடியாது. தேவபிள்ளைகளே, நீங்கள் ஜெபிக்கும் போது முதலாவது, உங்களுக்குள்ளே, “ஒரு மணி நேரமாவது ஜெபிக்கணும், ஜெபிக்கணும்” என்ற தாகத்தை ஏற்படுத்துங்கள். இரண்டாவது, ஜெபிக்கும் முன், கல்வாரிச் சிலுவையை அதிகமாய் தியானியுங்கள். “ஆண்டவரே, நீர் கெத்செமனேயில் ஜெபித்ததுபோல, நான் ஜெபிக்கட்டும். அந்த பாரத்தை எனக்குத் தாரும். நொறுங்குண்ட, நருங்குண்ட இருதயத்தை எனக்குத் தாரும்” என்று கேளுங்கள். மூன்றாவது, பரிசுத்த ஆவியானவருடைய ஒத்தாசையை நாடுங்கள். முடிந்த வரையிலும் எதற்காக ஜெபிக்கப்போகிறீர்கள் என்பதைப் பற்றிய சிறுசிறு குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

மோசேயோடுகூட இருந்த கர்த்தர், அவருடைய 80-ம் வயதிலிருந்து 120 -ம் வயது வரையிலும் வழிநடத்திக் கொண்டு வந்த கர்த்தர், உங்களுக்கும் ஜெபத்தின் வல்லமையை தருவார். ஜெபிக்கிற மனிதன்தான், எழும்பிப் பிரகாசிப்பான். ஒளி வீசுவான். கர்த்தருடைய மகிமை அவன்மேல் தங்கியிருக்கும்.

நினைவிற்கு:- “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்” (யோசு. 1:5).