தாவீதின் ஜெபம்!

“அந்திசந்தி மத்தியான வேளைகளிலும், நான் தியானம்பண்ணி முறையிடுவேன். அவர் என் சத்தத்தைக் கேட்பார்” (சங். 55:17).

தாவீது ராஜாவுக்கு மூன்று முக்கியமான ஜெப வேளைகளிருந்தன. அவர் அரசாங்கத்தைப் பொறுப்போடு நடத்துகிறவர். எண்ணற்ற யுத்தங்களுக்கு, திட்ட மிட்டு தீர்மானிக்கிறவர். என்றாலும், மூன்று வேளை ஜெபத்திற்கு, தன்னுடைய நேரத்தை ஒதுக்கினார். அப்படியானால், உங்களுக்கு மட்டும் நேரமில்லையா?

தாவீது, தன் ஜெப நேரத்தை “அந்தி, சந்தி, மத்தியான வேளை” என்கிறார். கவனியுங்கள், அவர் முதலாவது, மாலை நேரத்தைதான் முக்கியமாகத் தெரிந்து கொண்டு அதை முன்னால் வைக்கிறார். சாதாரணமாக நாம் காலை, மத்தியானம், மாலை என்று குறிப்பிடுவதுண்டு. ஏன் தாவீது ராஜா மாலை நேரத்தை முதலாவது வைத்தார்? காரணம், அவர் பயங்கரமான பாவத்தில் விழுந்தது, மாலை நேரத்தில் தான். வேதம் சொல்லுகிறது, “ஒரு நாள், சாயங்காலத்தில் தாவீது அரண்மனையின் உப்பரிகையின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை மேலிருந்து கண்டார்” (2 சாமு. 11:2). அப்பொழுது இச்சையின் ஆவி, அவருடைய உள்ளத்தை தாக்கினது. அவளோடு விபச்சாரம் செய்தார். அதைத் தொடர்ந்து அவளுடைய கணவன் கொலை செய்யப்பட்டான். பல சாபங்கள் வந்தது.

ஆகவே, அன்று முதல், அப்படிப்பட்ட பாவங்களுக்கெல்லாம் தப்பும்படி, மாலை நேரத்தை தனது பிரதான ஜெப நேரமாக்கிக் கொண்டார். உங்களுக்கும் மாலை நேரம், இன்பமான ஜெப வேளையாயிருக்குமென்றால், பல சோதனை களுக்கும், இச்சைகளுக்கும் நீங்கள் தப்புவீர்கள். எம்மாவூருக்குப் போன சீஷர்கள் மாலை நேரத்திலே, கர்த்தருடைய பிரசன்னம் அவர்களோடிருக்க வேண்டுமென்று அவரிடம், “நீர் எங்களுடனே தங்கியிரும். சாயங்காலமாயிற்று. பொழுதும் போயிற்று என்று அவரை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள்” (லூக். 24:29).

எந்த நேரமானாலும், கர்த்தர் உங்களுடைய ஜெபத்தைக் கேட்க ஆவலாயிருக் கிறார். அது மாலையானாலும், இரவானாலும், காலையானாலும், உங்கள் ஜெபத்தைக் கவனிப்பதற்கு, அவருடைய செவிகள் திறந்திருக்கின்றன. தாவீது கர்த்தருக்கு “ஜெபத்தைக் கேட்கிறவர்” என்ற பெயரைச் சூட்டினார் (சங். 65:2). ஆகவே, நீங்கள் விசுவாசத்தோடு, நிச்சயமாய் என்னுடைய ஜெபத்துக்குப் பதில் உண்டு, என்று நம்பிக்கையோடு ஜெபியுங்கள்.

ஜார்ஜ் முல்லர் சொல்லுகிறார், “பல பதினாயிரம் ஜெபங்களுக்கு நான் பதில் பெற்றிருக்கிறேன். நான் காலையிலும் ஜெபிப்பேன். மாலையிலும் ஜெபிப்பேன். முழங்காற்படியிட்டும் ஜெபிப்பேன். நடந்து, தியானத்தோடும் ஜெபிப்பேன். உட்காரும்போதும், உணவு அருந்தும்போதும், ஜெபிப்பேன். என் வாழ்க்கை முறையை, நான் ஜெபமாக மாற்றிக்கொண்டேன்” என்றார்.

அமெரிக்கா தேசத்தில் ஜனாதிபதியாயிருந்த ஆபிரகாம் லிங்கனுக்கு, அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழும்பி, தேவனோடு உறவாடி ஜெபிக்கும் வழக்கம் உண்டு. ஒவ்வொருநாளும் கர்த்தரை சந்தித்த பிறகுதான், என் மந்திரிகளையோ, படைத் தளபதிகளையோ சந்திப்பேன் என்று சொல்லுவார். அதுபோல முன்னாள் ஜனாதிபதியான, புஷ் என்பவர் சொன்னார், “என்னுடைய நாட்டுக்கு நான் ஆற்றும் முதல் தொண்டு, தேசத்துக்காக ஜெபிப்பதுதான் என்று சொன்னது மட்டுமல்ல, நாம் எல்லோரும் அமெரிக்காவுக்காக கண்களை மூடி ஜெபிப்போம்” என்று ஜெபிக்க ஆரம்பித்து விட்டார்.

நினைவிற்கு:- “என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக” (சங். 66:20).