யோபின் வேண்டுதல் ஜெபம்!

“யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்” (யோபு 42:10).

ஜெபத்திலே, நான்கு பகுதிகள் இருக்கின்றன. அப். பவுல் எல்லா மனுஷருக் காகவும், விண்ணப்பங்களையும், ஜெபங்களையும், வேண்டுதல்களையும், ஸ்தோத்திரங்களையும் பண்ண வேண்டுமென்று சொல்லுகிறார் (1 தீமோ. 2:1).

பழைய ஏற்பாட்டிலே, ஜெபம், “தூபவர்க்கத்துக்கு” அடையாளமானது. தாவீது “என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு, அந்திப் பலியாகவும் இருக்கக்கடவது” என்று சொன்னார் (சங். 141:2). வெளிப்படுத்தின விசேஷத்திலே, பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால், நிறைந்த பொற்கலசங்களை தேவதூதன் பிடித்துக்கொண்டிருந்தான் (வெளி. 5:8).

புதிய ஏற்பாட்டில், கர்த்தர் ஆசாரியர்களையல்ல, விசுவாசிகளாகிய நம்மையே ராஜாக்களாக வைத்திருக்கிறார். ராஜரீக ஆசாரியக் கூட்டமாகிய நமது உள்ளமே, தூப கலசமாகும். ஜெபமே அந்த தூபவர்க்கமாகும். மணவாளன் உங்களுடைய ஆவிக் குரிய வாழ்க்கையாகிய, தோட்டத்திற்கு வரும்போது, அது தூபவர்க்க மரங்களும், கந்தவர்க்கச் செடிகளும் உள்ள சிங்காரவனமாயிருக்கிறது (உன். 4:13,14).

பழைய ஏற்பாட்டிலுள்ள, தூபவர்க்கத்திலுள்ள அல்பான் பிசினானது, “வேண்டுதல்” ஜெபத்துக்கு ஒப்புமையாக கூறப்பட்டிருக்கிறது. அல்பான் பிசினில் வாசனை இல்லாதிருந்தாலும், அது மற்ற கந்த வர்க்கங்களை இணைக்கவும், அவைகளைப் பாதுகாக்கவும் செய்கிறது. அதுபோல வேண்டுதல் ஜெபம், குடும்பங் களையும், சபைகளையும் அன்பின் ஐக்கியத்தால் இணைத்து, ஒருமனப்பாட்டை கொண்டு வருகிறது. ஒருவருக்கொருவர் வேண்டுதல் செய்து, ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இவ்விதமாய் கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்று வீர்களாக.

யோபின் ஜெபத்திலிருந்து, நாம் கற்றுக்கொள்வது என்ன? அன்றைக்கு யோபு பலவிதமான சிறையிருப்புக்குள்ளிருந்தார். வேதனையான இழப்புகள், சரீரத்தில் தாங்க முடியாத வியாதிகள், நண்பர்களால் புண்படுத்தும் சொற்கள், மனைவியின் புறக்கணிப்பு என்று, எல்லாப் பக்கங்களிலும் பாடனுபவித்தாலும், யோபு தன்னுடைய சிநேகிதருக்காக வேண்டுதல் செய்யும்போது, கர்த்தர் அவருடைய சிறையிருப்பை மாற்றினார். நல்ல சுகமும், ஆரோக்கியமும், பெலமும் வந்தது. அவர் இழந்தவைகளையெல்லாம், இரண்டு மடங்கு திரும்பப் பெற்றுக்கொண்டார்.

நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு, மற்றவர்களுக்காக பாரமெடுத்து ஜெபிக்கிறீர் களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுடைய வாழ்க்கையிலும் விடுதலையையும், சமாதானத்யைும் காண்பீர்கள். உதாரணமாக, நீங்கள் கடன் பிரச்சனையிலே சிக்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதே போல கடன் பிரச்சனை யிலே தவியாய் தவிக்கிற, ஒரு சிலருக்காக நீங்கள் பாரமெடுத்து ஜெபிக்கும்போது, கர்த்தர் உங்களுடைய கடன் பிரச்சனையை மாற்றுவார்.

நீங்கள் மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்யும்போது, முதல் ஆசீர்வாதம், உங்களுக்குத்தான். “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானாய் வளரும்” என்பது பழமொழி. தேவபிள்ளைகளே, உங்களுக்காக கிறிஸ்து பிதாவின் வலதுபாரிசத்திலே வேண்டுதல் செய்கிறாரே. நீங்களும் மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்ய வேண்டியது அவசியமல்லவா?

நினைவிற்கு: – “அவர் அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம், அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன். பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்” (ஏசா. 53:12).