யோபின் அங்கலாய்ப்பு!

“நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்” (யோபு 23:3).

கர்த்தரை சந்தித்து, யோபு பக்தன் தன்னுடைய எண்ணற்ற பிரச்சனைகளுக்கு முடிவு காண விரும்பினார். நீங்களும்கூட, கர்த்தரோடு மனம் திறந்து பேசவும், அவருடைய பொன் முகத்தை காணவும், அவருடைய பாதத்திலே உங்கள் இருதயத்தை ஊற்றிவிடவும், விரும்புகிறீர்கள் அல்லவா? இன்று உலகின் எல்லா பகுதியிலும், ஜனங்களுக்கு பிரச்சனைகள், போராட்டங்கள், வியாதிகள். அவர்கள் ஆறுதல் தேடி, நிம்மதியைத் தேடி, விடுதலையை தேடி அலைகிறார்கள். விடுதலையின் நாயகனான இயேசுவை, எங்கே சந்திக்கலாம்?

இந்திய மக்களுக்கு, தங்கள் சிருஷ்டி கர்த்தர் யார்? தங்களைத் தேடி வந்த இரட்சகர் யார்? ஜீவனைக் கொடுத்து, ஆத்துமாக்களுக்கு விடுதலைக் கிரயம் செலுத்தினவர் யார்? அருமையாய் வழிநடத்துகிற நல்ல மேய்ப்பன் யார்? என்று தெரியவில்லை. ஆகவே, பலவித அவதாரங்களையும், மனித தெய்வங்களையும், விக்கிரகங்களையும், நோக்கி ஓடுகிறார்கள்.

ஒரு காலத்தில், சாது சுந்தர் சிங்குக்கும் அப்படிப்பட்ட ஒரு ஏக்கம் இருந்தது. பல ரிஷிக்கள், முனிவர்கள், சாதுக்கள், சந்நியாசிகளைத் தேடினார். அந்த நேரத்தில் யாரோ அவரிடத்தில் ஒரு புதிய ஏற்பாட்டை கொடுத்தார்கள். “கிறிஸ்தவர்களின் தெய்வம் வெளிநாட்டு தெய்வம். எனக்கு வேண்டாம்” என்று சொல்லி, அந்த வேதாகமத்தை கிழித்துவிட்டார். அன்று முதல், அவர் மனதில் நிம்மதியை இழந்தார். சமாதானமேயில்லை. “தற்கொலை” முடிவுக்கு வந்தார்.
ஒரு நாள், அந்த எண்ணத்தோடு இரவிலே, அவர் படுக்கச் சென்றார். தனக்கு தெரிந்த, பல்வேறு தெய்வங்களை நோக்கிக் கூப்பிட்டார். மறுநாள் அதிகாலை வேளை நான்கு மணிக்கு, இயேசு கிறிஸ்து பெரிய வெளிச்சத்தோடு அவருக்கு தரிசனமானார். “நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று அவரோடு அன்பாக பேசினார். அந்த சந்திப்பு, அவரை இந்தியாவின் பெரிய அப்போஸ்தலனாக்கி விட்டது. கர்த்தரை எங்கே சந்திக்கலாம்? என்று உங்களுடைய உள்ளம் ஏங்குமானால், ஒவ்வொருநாளும், அவரை சந்திக்கும்படி அமைதியான ஒரு குறிப்பிட்ட இடத்தை தெரிந்தெடுங்கள்.

என்னைக் கர்த்தருக்குள் வழி நடத்தின தாயார், தன்னுடைய வீட்டின் முன் பகுதியிலுள்ள ஒரு தூணின் கீழே இருந்து இரவு நீண்ட நேரம் ஜெபிப்பார்கள். அதிகாலை எழுந்தவுடனே அங்கே வந்துவிடுவார்கள். அவர்கள் சொல்வார்கள், “இந்த தூணை நான், கர்த்தருடைய பாதங்களாகவே எண்ணிக்கொள்வேன். இந்த இடத்தில் ஜெபித்தால்தான், எனக்கு ஒரு திருப்தி. சில வேளைகளில் ஜெபிக்க முடியாதபடி, துயரங்கள் என் இருதயத்தை அடைத்தாலும், அதைக் கர்த்தருடைய பாதமாக நான் கருதுகிறதால், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து நல்ல பங்கைத் தெரிந்துகொண்ட மரியாளைப்போல, நானும் அமர்ந்துவிடுவேன். அப்பொழுது எனக்கு திருப்தியும், மகிழ்ச்சியும் உண்டாகும்” என்றார்கள்.

இரகசியமாய் இயேசுவை ஆராதித்து வரும், ஒரு இஸ்லாமிய சகோதரி சொன்னார்கள், “என் கணவன் மிகுந்த வைராக்கியமுள்ள இஸ்லாமியன். எனக்கு வெளியரங்கமாய் ஆலயத்துக்குச் சென்று, கர்த்தரை ஆராதிக்க முடியாது. நான் தேவனை சந்திக்க எடுத்துக்கொண்ட, என்னுடைய இடம் குளியலறைதான். தண்ணீரைத் திறந்துவிட்டு, அந்த சத்தத்தை என்னுடைய சத்தத்தோடு இணைந்து, அந்நியபாஷையிலே அதிக நேரம் ஜெபிக்கிறேன்” என்றார்கள்.

நினைவிற்கு:- “நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது” (யோவா. 4:21).