அன்னாளின் ஜெபம்!

“அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள்” (1 சாமு. 1:10).

“விண்ணப்பம்” என்பது “கண்ணீரின் ஜெபம்.” மனங்கசந்து, தனக்கு குழந்தை யில்லையே, வாரிசு இல்லையே என்று தன் தேவைக்காக அன்னாள் கண்ணீரோடு ஜெபித்தாள். அவளுக்கு ஏற்பட்ட நிந்தை மிகவும் அதிகமாயிருந்தது. கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியால், அவளுடைய சக்களத்தி, அவளை மிகவும் துக்கப்படுத்தினாள். பாவம், அவள் என்ன செய்வாள்? ஊக்கமான கண்ணீரின் ஜெபத்தையே ஆயுதமாக பயன்படுத்தத் தீர்மானித்தாள். சிறு குழந்தைகள், எந்த தேவையானாலும், தாயினிடத்திலே வந்து அழுகின்றன. பேச அறியாத குழந்தை களின் ஒரே மொழி, அழுகைதான். அந்த அழுகையைக் கண்டு, தாய் உடனே தீவிரமாய் ஓடி வந்து குழந்தையைக் கவனிப்பாள்.

நமக்கு தாயும், தந்தையும் கர்த்தர்தான். பிரச்சனை நேரங்களில், கர்த்தருடைய பாதத்தில் விழுந்து, நம் துயரங்களைக் கண்ணீராக கொட்டுகிறோம். அதுவே, கர்த்தருடைய கவனத்தை கவரும் விண்ணப்பமாகிறது. மரத்திலிருந்து குத்தப்படும் பிசின் வழிவதைப்போல, பல துரோகங்களால் உள்ளம் குத்தப்படும் போது, விண்ணப்பம் வெளிவருகிறது.

அன்னாளின் ஜெபமும், விண்ணப்பமும் கர்த்தருக்கு உகந்ததாயிருந்ததின் காரணம் என்ன? ஆம், அன்னாள் சுயநலமாய் ஜெபிக்கவில்லை. ஒரு பக்கம், கர்த்தருக்கு ஒரு ஊழியன் தேவையாயிருந்தது. அன்னாளுக்கு குழந்தைச் செல்வம் தேவையாயிருந்தது. என்னவென்றால், அந்த நாட்களில், தீர்க்கதரிசிகள் இல்லை. கர்த்தருக்கு ஊழியக்காரர்கள் இல்லை. ஆகவே, கர்த்தருடைய தேவையையும், தன்னுடைய தேவையையும், கர்த்தருக்குத் தெரியப்படுத்தி, “உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று, ஒரு பொருத்தனை பண்ணினாள்” (1 சாமு. 1:11).

இந்த ஜெபத்தைக் கேட்டு கர்த்தருடைய மனம் மகிழ்ந்திருக்கும். அன்னாளின் நாட்களில், எத்தனையோ தாய்மார்கள் குழந்தையில்லாமல் மலடிகளாய் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர்கள் குழந்தை தாரும் என்று மட்டுமே சுயநலமாய் கேட்டதினால், உடனே பதில் கிடைக்கவில்லை. அன்னாள் கர்த்தருடைய தேவையையும், தன்னுடைய தேவையையும் ஒன்றாக நிறைவேற்றும்படி கேட்டதினால், கர்த்தர் “ஆம் என்றும், ஆமென் என்றும்” பதிலளித்தார்.

இதனால் அன்னாளின் துக்கம் சந்தோஷமாய் மாறினது. கர்த்தர் ஒரு பெரிய ஊழியக்காரனும், தீர்க்கதரிசியும், நியாயாதிபதியுமாக சாமுவேலை எழுப்பினார். தனக்கென்று தன் பிள்ளையைக் கொடுத்துவிட்ட அன்னாளுக்கு, கர்த்தர் இன்னும் ஐந்து பிள்ளைகளைக் கொடுத்தார். அதற்கு பிறகும் அன்னாள் ஜெபிக்கிறதைப் பார்க்கிறோம். அது ஆனந்தக்களிப்பான ஜெபம். ஸ்தோத்திர, துதியின் ஜெபம். இனி அவளை யாரும் பரியாசம் பண்ண முடியாது.

யார் யாருக்கு ஜெபிக்கும் தாய்மார் இருக்கிறார்களோ, அவர்கள் பாக்கியவான்கள். ஜெபிக்கும் தாயின் வல்லமையால் வளரும் பிள்ளைகள், பாக்கியவான்கள். ஆம், நிச்சயமாகவே தாயின் ஜெபம் குழந்தைகளை மேன்மைப்படுத்தும். அறிவில் சிறந்தவர்களாய், புகழ் பெற்றவர்களாய் நிலை நிறுத்தும்.

நினைவிற்கு:- “அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்” (1 சாமு. 1:20).