ஈசாக்கின் தியானம்!

“ஈசாக்கு சாயங்காலவேளையிலே, தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன்கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்” (ஆதி. 24:63).

இந்தியாவிலே, “தியான ஆசிரமம்” என்ற பெயரோடு, பல மார்க்கத்தினர், பல இடங்களை குறித்து வைத்திருக்கிறார்கள். தனிமையாயிருந்து இறைவனைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவருடைய சேயல்களை எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதே, இந்த தியான ஆசிரமங்களின் முக்கிய நோக்கமாகும்.

“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார் (சங். 1:2). “தியான புருஷன்” என்று முதலாவதாக கருதப்படுபவர் ஈசாக்கு. இரண்டாவது, யோசுவா (யோசுவா. 1:8). மூன்றாவது தாவீது. கர்த்தருடைய வேதத்தை தியானிக்க, தியானிக்க, அது உங்களை பாக்கியமான அனுபவத்துக்குள் கொண்டுச் சேல்லுகிறது. மட்டுமல்ல, கர்த்தருடைய பிரசன்னத்தை, உங்களுடைய அருகிலே மிகவும் அதிகமா கொண்டு வருகிறது.

அதிகமான பக்தர்கள், காலை நேரத்தில் தேவனோடு தனித்திருந்து, தியானித்தார்கள். ஈசாக்கு, தன்னுடைய தியான நேரமாக, மாலை வேளையைத் தெரிந்து கொண்டார். ஆனால் தாவீதோ, இரவு நேரத்தில், கர்த்தரை அதிகமா தியானம் சேதார். “என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்” (சங். 63:6) என்றார்.

சிலர், வேதத்தை தியானிக்கிறார்கள். சிலர், இயற்கையைப் பார்த்து, கர்த்தருடைய சிருஷ்டிப்புகளை தியானிக்கிறார்கள். சிலர், பூர்வ நாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் தியானிக்கிறார்கள் (சங். 77:5). சிலர் கர்த்தருடையகிரியைகளையும், சேயல்களையும் தியானிக்கிறார்கள் (சங். 77:12). ஆனால் நமக்குஒரு தியான பீடம் உண்டென்றால், அது கல்வாரி மலையிலுள்ள கொல்கொதாமேட்டிலே, நமக்காக தம்மைதாமே ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்துவின் சிலுவையேயாகும். சிலுவையின் அடிவாரத்தில் வந்து, கிறிஸ்துவோடு தனித்திருக்க உங்களை ஒப்புக்கொடுப்பீர்களானால், உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் மிகச் சிறந்த கிறிஸ்தவர்களாயிருப்பீர்கள்.

“சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான், சாந்திளைப்பாறிடுவேன்” என்று பக்தன் பாடுகிறான். அந்த சிலுவையின் அடிவாரத்தில் உங்களுடைய பாரங்களையும், மனச்சுமைகளையும், கவலைகளையும் இறக்கி வைப்பீர்களாக. அப்பொழுது கர்த்தருடைய அன்பின் அக்கினி, உங்களுடைய உள்ளத்தில் பற்றியெரியும். மட்டுமல்ல, தியான வேளையில், நீங்கள் கர்த்தரோடு என்றென்றும் பரலோகத்தில் எப்படியிருப்பீர்கள் என்பதையும் தியானியுங்கள். மண்ணுக்குரியவனை விண்ணுக்குரியவனா மாற்றின, தெவீக அன்பை எண்ணி, கர்த்தரைத் துதியுங்கள். உங்களுக்காக பரலோகத்தில் வாசஸ்தலங்களையும், கிரீடங்களையும் ஏற்படுத்தினாரே! நித்திய ஜீவனை தந்தாரே! இதைத் தியானிக்கும்போது, அது பரிசுத்த வாழ்க்கை வாழும்படி, உங்களை ஏவி எழுப்பும்.

ஈசாக்கு தியானம் பண்ண விரும்பினபோது, தன்னுடைய பட்டணத்தின் ஆரவாரத்தையும், வீட்டிலுள்ள சப்தங்களையும் விட்டு விலகி, வயல் வெளிகளிலே போ, தியானம் சேதார். அப்படியே கர்த்தர் உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்திலே, தமது பிரசன்னத்தையும், வல்லமையையும், புத்துணர்ச்சியையும் தந்தருள்வாராக.

நினைவிற்கு:- “உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்” (சங். 119:15).