இஸ்மவேலுக்காக விண்ணப்பம்!

“இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்” (ஆதி. 17:20).

எழுபத்தைந்து வயதிலே, கர்த்தர் ஆபிரகாமுக்குப் பிள்ளையை மட்டுமல்ல, சந்ததியையும் வாக்குப்பண்ணினார். காலங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. பிள்ளையோ பிறக்கவில்லை. கர்த்தருடைய நேரத்திற்காக ஆபிரகாம் காத்திருக்காமல், சாராளின் ஆலோசனையைக் கேட்டு, அடிமைப் பெண் ஆகார் மூலம், குறுக்கு வழியில், இஸ்மவேலைப் பெற்றெடுத்தார்.

கர்த்தர் மீண்டும் பேசினார். சாராளின் மூலமாக நான் உங்களுக்கு ஒரு சந்ததியைத் தருவேன். அந்த நேரத்தில் ஆபிரகாமுக்குள்ளே நம்பிக்கை இல்லை. “அப்பொபது ஆபிரகாம், முகங்குப்புற விழுந்து நகைத்து: நறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டார்” (ஆதி. 17:17).

நம் தேவன், நல்ல தேவன். இரக்கம் நிறைந்தவர். பல வேளைகளில் நம் உள்ளத்தில் அவிசுவாசம் இருந்தால்கூட, கர்த்தர் சூழ்நிலைகளைப் புரிந்த கொள்ளுகிறவர். இஸ்மவேலின்மேல், ஆபிரகாமுக்குப் பாசம் இருந்தது. “இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைப்பானாக” என்று விண்ணப்பம் பண்ணினார்.

இன்றைக்கும் உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் மனமுடைந்து, கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கக்கூடும். என் பிள்ளைகள் தங்கள் மனம்போல வாழ்கிறார்களே, கட்டுப்பாடு இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறார்களே என்று கதறக்கூடும். வாலிப வயதில், என் மகன் கஞ்சாவுக்கும், போதைப் பொருளுக்கும் அடிமையாகிவிட்டானே என்று பெற்றோர் விண்ணப்பம் செய்யக்கூடும்.
ஒரு ஈஸ்டர் பண்டிகை அன்று, தூர தேசத்திலுள்ள ஒரு தாய் அழுதுகொண்டு, எனக்கு டெலிபோன் செய்தார்கள். “ஐயா, என் மகள் பெரிய வெள்ளி அன்று வீட்டை விட்டுப்போனவள், ஈஸ்டர் பண்டிகையான இன்றுவரை வீட்டுக்குத் திரும்பவில்லை. ஜெபம் பண்ணுங்கள்” என்றார்கள். ஒருநாள் வந்தது, கர்த்தர் எல்லாருடைய விண்ணப்பத்தையும் கேட்டார். அந்தப் பெண்ணை இரட்சித்து அபிஷேகித்தார். அதைத் தொடர்ந்து, அவளுக்கு நல்ல இடத்தில் திருமணம் ஒழுங்கானது. இப்பொழுது குடும்பமாக கர்த்தருக்கு ஊழியம் செய்கிறார்கள்.

உங்களுடைய பிள்ளைகள் யாராக இருந்தாலும் சரி, அவர்களை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்யுங்கள். கல்வாரி இரத்தத்தால் மீட்கப்பட்ட பிள்ளைகளாக மாறுவார்கள். “நானும் என் வீடாருமோவென்றால் கர்த்தரை சேவிப்போம்” என்று சொல்லி, யோசுவாவைப் போல பிள்ளைகளை கர்த்தருடைய கரத்தில் ஒப்புவியுங்கள். அப்பொழுது உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள் (சங். 128:3). ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார், “இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்” (ஏசா. 8:18).

“நீதிமான்களுடைய கூடாரங்களில், இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு” (சங். 118:15). “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி, அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்” (சங். 127:4,5).

நினைவிற்கு:- “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப். 16:31).