கட்டுகளிலிருந்து விடுதலை!

“தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்” (சங். 68:6).

உங்களை எழும்பவிடாதபடி, சாத்தான் கட்டும்போது, கர்த்தர், அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாய் உட்கார்ந்திருக்கிறவரல்ல. கட்டுண்டவர்களை, அவர் விடுதலை யாக்குகிறார். இயேசு பூமிக்கு வந்த நோக்கம் என்ன? “இருதயம் நொறுங் குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்க்கவும், இந்த உலகத்துக்கு வந்தார்” (ஏசா. 61:1).

எந்த மனுஷனும் விரும்பிப் போய், தன்னைத்தானே கட்டிக் கொள்வதில்லை. சிக்கிக்கொள்வதுமில்லை. சிலரை அவர்களுடைய பாவங்களும், அக்கிரமங்களும் கட்டுகிறது. சிலரை தண்டனை கொடுக்கும்படி, அரசாங்கம் கட்டுகிறது. சிலரை போலீசார் கைது செய்து, கையிலே கால்களிலே விலங்கிட்டு, கட்டிக்கொண்டு போகிறார்கள். வேறு சிலரை சாத்தான் கட்டுகிறான்.

அப்போஸ்தல நடபடிகைகளிலே, சீமோன் என்று, ஒரு மனிதனைக் குறித்து வாசிக்கிறோம். அவன் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன். பிலிப்புவை பற்றிக் கொண்டு, அவனால் நடக்கும் அற்புதங்களைக் கண்டு பிரமித்தவன். ஆனால் அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை, பணத்தினாலே வாங்கலாம், என்று எண்ணினான். அவனுக்குள்ளே, “பண ஆசை” என்ற ஒரு கட்டு இருந்தது. அப். பேதுரு அவனைப் பார்த்து, “நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்” (அப். 8:23).

நான் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தபோது, அங்கே ஒரு மளிகை கடைக்கு வெளியே, பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவனை, அந்த கடைக்கு முன்னாலிருந்த மரத்தில் கட்டி வைத்து அடி அடியென்று அடிக்கிறதைப் பார்த்தேன். அதை என்னால் தாங்க முடியவில்லை. அந்த கடைக்கார முதலாளி சொன்னார், “இவன் எங்கள் கடையிலே வேலை செய்கிறவன். ஆனால் பல நாட்களாக, கடையிலுள்ள கருப்பு கட்டியைத் திருடி, வெளியே உள்ளவர்களுக்கு விற்றுக்கொண்டிருந்தான். இன்று கண்டுபிடிக்கப்பட்டான். மற்றவர்களுக்கு எச்சரிப்புண்டாகும்படி, அவனை கட்டி வைத்திருக்கிறோம்” என்றார்.

அநேகருடைய புத்தியீனத்தினாலும், துணிகரமான செயல்களினாலும், கட்டப் பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அப். பேதுரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார் என்பதற்காக ஏரோது இரண்டு சங்கிலிகளினாலே அவரை கட்டி, இரண்டு போர்ச் சேவர்கள் நடுவே இருக்கும்படி, சிறைச்சாலையில் வைக்கப்பட்டார். அதுபோல அப். பவுல் சொன்னார், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம், நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ, கட்டப்பட்டிருக்க வில்லை” என்றார் (2 தீமோ. 2:9).

தேவபிள்ளைகளே, உங்களுக்கு இன்றைக்கு இருக்கும் கட்டுகள், எதுவாயிருந் தாலும், ஒன்றை நிச்சயமாய் உணருங்கள். உங்களுக்காக இயேசுவைக் கட்டி பிலாத்துவினிடத்தில் ஒப்புவித்தார்கள் (மத். 27:2). ஆகவே கட்டுகள் என்றால் என்ன? என்று அவருக்குத் தெரியும். அவரே இந்தக் கட்டுகளிலிருந்து உங்களை விடுவிப்பார். கர்த்தருடைய வல்லமை உங்கள்மேல் இறங்கும்போது, அந்த பரிசுத்த அக்கினியால், உங்களைக் கட்டியிருக்கும் எல்லாக் கட்டுகளும், அக்கினி நெருப்புப்பட்ட நூல் போல எரிந்துபோகும்.

நினைவிற்கு:- “அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது. அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி, இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்” (யோவா. 11:44).