சுமைகளிலிருந்து விடுதலை!

“எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள், ஜனங்களைத் தங்கள் வேலைகளை விட்டுக் கலையப்பண்ணுகிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப்போங்கள் என்றான்” (யாத். 5:4).

எகிப்தின் பார்வோனைப்போல, சாத்தான் எந்த ஈவு, இரக்கமில்லாமல், தேவ ஜனங்கள்மேல் சுமைகளை சுமத்துகிறான். பெற்றோர், போதுமான சம்பளமின்றி, பிள்ளைகளின் சுமையை, சுமக்க முடியாமல் சுமக்கிறார்கள். அநேக பாரங்கள், அவர்களை நெருக்குகிறது. வாழ்நாளெல்லாம் கவலைகளை சுமந்துகொண்டிருக் கிறார்கள்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ, அந்த பாரச் சுமைகளை தன்மேல் வைத்துவிடும்படி கேட்கிறார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத். 11:28,29) என்கிறார்.

சிலுவையிலே, நம்முடைய பாவங்களை சுமந்திருக்கிறார் (ஏசா. 53:12). அக்கிரமங்களை சுமந்திருக்கிறார் (ஏசா. 53:11). துக்கங்களைச் சுமந்திருக்கிறார் (ஏசா. 53:4). சாபங்களை சுமந்திருக்கிறார் (கலா. 3:13). பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நோய்களைச் சுமந்திருக்கிறார் (மத். 8:17). கிறிஸ்துவானவர் சுமந்ததை, இனி நீங்கள் வீணாக உங்களுடைய தலையிலே சுமந்துகொண்டிருக்க தேவையில்லை. அவைகளை, கர்த்தர்மேல் இறக்கி வைத்துவிட்டு, நீங்கள் இளைப்பாறுங்கள்.

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, மிகுந்த துக்கத்தோடு என்னிடம் சொன்னார், “அரசாங்கத் திலே எனக்கு தாங்கமுடியாத வேலைப்பளு. ஒரு மண் மூட்டையை என் முதுகிலே ஏற்றி, சுமந்துகொண்டு வா என்றால், நான் சுமந்துவிடுவேன். ஆனால், மண் நிறைந்த ஒரு லாரியை என் முதுகிலே கட்டி, இதை இழுத்துக்கொண்டு வா என்று சொன்னால், நான் என்ன செய்வேன்? என் வேலையை முடிக்க முடியாமல், திணறு கிறேன்.”

நான் சிங்கப்பூருக்கு போனபோது, அங்கு ஒரு கணவன் மனைவியைப் பார்ப்பது அபூர்வமாயிருந்தது. இரண்டு வேலை, மூன்று வேலை என்று ஒவ்வொருவரும் செய்துகொண்டிருந்தார்கள். வீடு வாங்குவதற்கு லோன், கார் வாங்குவதற்கு லோன், பிள்ளைகளை படிக்க வைக்க, லோன். வாங்கிய கடனை கட்டித்தீர்க்க முடியாமல், இரவு பகலாக உழைக்கிறோம். நாங்கள் ஒன்றாய் பேசி, மகிழ்ந்திருந்த காலங்கள் கடந்து போயின.

வேறு சிலர், “கடன் கொடுத்தவர்கள், எங்களை மிரட்டுகிறார்கள். கேவலமாய் பேசுகிறார்கள். குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளலாமா என்று எண்ணு கிறோம்” என்கிறார்கள். தேவபிள்ளைகளே, ஒருநாளும் தற்கொலையைப் பற்றி, நீங்கள் எண்ணவேக்கூடாது. அது கனவிலும், உங்களுக்குத் தோன்றக்கூடாது. எல்லா பார சுமையிலிருந்தும், உங்களை நீங்கலாக்கி, விடுவிக்கிற கர்த்தர் இருக்கிறார்.

இன்றைக்கு கர்த்தர் உங்களைப் பார்த்து, “உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக் கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி, உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்” (யாத். 6:7) என்று சொல்லுகிறார்.

நினைவிற்கு:- “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங். 55:22).