மனச் சோர்வா?

“போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல” (1 இராஜா 19:4).

தேவபிள்ளைகள், சோர்விலிருந்து நிச்சயமாகவே விடுதலையாக்கப்பட வேண்டும். மனச்சோர்வை, ஆங்கிலத்திலே “டிப்பிரஷன்” என்று அழைக்கிறார்கள். கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்ய விருப்பமில்லாமல், மனம் தளர்ந்து போய், பலவகை பெலவீனங்களால் தாக்கப்பட்டு, “மரித்தால் போதும்” என்ற எண்ணத்தை சாத்தான் கொண்டு வருவான்.

இதற்கு முந்தினநாள், எலியா கர்மேல் பர்வதத்திலே நின்று, முழங்கி, “அக்கினியால் உத்தரவு அருளுகிற தேவனே, தேவன்” என்று, பாகால் தீர்க்கதரிசிகளுக்கு சவால் கொடுத்து, அவர்களை வெட்டிப்போட்டார். அவ்வளவு உயர்ந்த பர்வதத்திலே காணப்பட்ட அவர், இப்பொழுது மனச்சோர்வடைந்து, “போதும் கர்த்தாவே” என்று சொல்லக்கூடிய அளவுக்கு, சாத்தான் சோர்விலே தள்ளி விட்டான். சோர்வு வரும்போது, உற்சாகத்தின் ஆவியை இழந்து போகிறோம். கர்மேல் பர்வதத்தில் வீர தீர சாகசம் புரிந்தவர். இன்று கோழையிலும் கோழையாய், சூரைச்செடியின் கீழ்ப்படுத்துக் கிடக்கிறதை, எப்படி விளக்க முடியும்?

கர்த்தரைப் பார்ப்பதை விட்டுவிட்டு, தீய மனுஷரை, யேசபேல்களைப் பார்க்கும்போது, இப்படிப்பட்ட எண்ணங்கள் வந்துவிடக்கூடும். சீஷனாகிய பேதுரு, கர்த்தரைவிட்டு சற்றே முகத்தைத் திருப்பி, கொந்தளித்து வருகிற அலையைப் பார்த்தபோது, மூழ்கவேண்டிய சூழ்நிலை வந்தது அல்லவா? சூழ்நிலைகளையும், எதிர்ப்புகளையும், ஒருநாளும் பார்க்காமல், கர்த்தரைப் பாருங்கள். ஒருநாளும் நீங்கள் இடறி விழுவதில்லை. தாவீது சொல்லுகிறார், “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால், நான் அசைக்கப்படுவதில்லை” (சங். 16:8).

அப். பவுலுக்கு, தெய்வீக வெளிப்பாடுகள் ஏராளமாயிருந்தது. ஆனால் அவரது உடலில், ஒரு முள் குத்திக்கொண்டேயிருந்தது. அந்த முள்ளை “சாத்தானின் தூதன்” என்று அழைத்தார் (2 கொரி. 12:7). ஆனால் கர்த்தர் சொன்னார், “நீ முள்ளைப் பார்க்காதே, என் கிருபையைப் பார். முள்ளை, சாத்தானுடைய தூதனாக பார்க்க, பார்க்க, அந்த முள் இன்னும் அதிகமாய் குத்திக்கொண்டேயிருக்கும். ஆனால் கர்த்தரு டைய கிருபையை எண்ணிப் பார்க்கும்போது, அந்த முள்ளை, மேற்கொள்ளுகிற கிருபை கிடைக்கும். சோர்வுக்கு இடங்கொடாமல், ஆண்டவரை துதித்து, மகிமைப் படுத்தும்போது, கர்த்தருடைய கிருபையிலே, மகிழ்ந்து களிகூர முடியும்.

தேவபிள்ளைகளே, உங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கிற, பாரங்களைக் குறித்து கவலைப்படாதிருங்கள். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங். 55:22). இன்றைக்கு, உங்களுக்கு இருக்கிற கவலைகளைக் குறித்து கலங்காதிருங்கள். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேது. 5:7)

தேவபிள்ளைகளே, உங்களை சோர்வுண்டாக்குகிற, எல்லா சத்துருவினுடைய வல்லமைகளையும், அவிசுவாசங்களையும், அதைரியங்களையும் எதிர்த்து நில்லுங்கள். சர்வாயுத வர்க்கங்களை தரித்து, பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நில்லுங்கள். அப்போது அவைகள் ஓடிப்போகும்.

நினைவிற்கு:- “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (யோசு. 1:5).