பால சிங்கம்போல!

“அந்த ஜனம், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்” (எண். 23:24).

இஸ்ரவேலைக் காக்கிறவர், உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை. அவர் உங்கள் காலைத் தள்ளாடவொட்டார். நீங்கள் தலை குனிந்து நிற்பதை அவர் தாங்கிக் கொள்ள மாட்டார். நீங்கள் கர்த்தருடைய பிள்ளை அல்லவா? ஆகவே, பால சிங்கத்தைப்போல, தலை நிமிர்ந்து நில்லுங்கள். “நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி” (நீதி. 14:34). “நீதிமான்களோ, சிங்கத்தைப் போலே தைரியமாயிருக்கிறார்கள்” (நீதி. 28:1).

உங்களை நிமிர்ந்து நடக்கவிடாமல், தலை குனிய வைத்த, சத்துருவினுடைய, சகல வல்லமைகளையும், இன்று கர்த்தர் அதமாக்கிப்போடுவார். எப்பொழுது உங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, விட்டு விடுகிறீர்களோ, அப்பொழுது உங்களுக்கு பாவ மன்னிப்பும், தேவ இரக்கமும் கிடைக்கும். நீங்கள் இரட்சிக்கப் படும்போது, தேவனுடைய பிள்ளைகளாகிறீர்கள் (யோவா. 1:12).
கர்த்தரை விசுவாசித்து, சகல பாவ சுபாவங்களையும் உதறிவிட்டு, நிமிர்ந்து நடவுங்கள். தாவீது ஜெபித்தார், “கர்த்தாவே, நான் உமது அடியேன். நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன். என் கட்டுகளை அவிழ்த்து விட்டீர்” (சங். 116:16). “என் கட்டுகளை அவிழ்த்து விட்டார்” என்பதே, தாவீதின் சாட்சி. உங்களுக்கும் அந்த சாட்சி உண்டாகட்டும்.

பணத்தையும், பொருளையும், செல்வாக்குகளையும் நம்பியிருக்கிறவர்கள், முறிந்து விழுவார்கள். துன்மார்க்கருக்கு சமாதானம் இருப்பதில்லை. “சிலர் இரதங் களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள். நாங்களோ, எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மை பாராட்டுவோம். அவர்கள் முறிந்து விழுந்தார்கள். நாங்களோ, எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்” (சங். 20:7,8).

பதினெட்டு வருடங்கள் கூனியாயிருந்தவளை, நிமிர்ந்து நடக்கப்பண்ண, கிறிஸ்துவினுடைய உள்ளத்திலே தோன்றிய காரணம் என்ன? ஆம், இவள், ஆபிரகாமின் குமாரத்தி, கர்த்தருடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டு, தேவனோடு நடந்த பரிசுத்தவானாகிய ஆபிரகாமின் சந்ததி. ஆகவே அவள், தலை குனிந்து நடக்கவேக் கூடாது. அவளை நிமிர்ந்து நடக்கப்பண்ணுவேன் என்ற வைராக்கியத்தோடு, கர்த்தர் அவளை நிமிர்ந்து நடக்கப்பண்ணினார்.

சகேயுவைப் பாருங்கள்! அநியாயமாய் வரி வசூலித்தபடியால், ஜனங்கள் அவனை வெறுத்தார்கள். அவன் தலை குனிந்து நின்றான். ஆனால், அவன் நிமிர்ந்து நடக்கும்படி செய்த தீர்மானம் என்ன? “ஆண்டவரே, நான் அநியாயமாய் வாங்கினதுண்டானால், அதை நாலத்தனையாய் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று சொன்னவுடனே, கர்த்தர் ஜனங்களைப் பார்த்து, “இவன் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே” என்று சொன்னார் (லூக் 19:9). கர்த்தருடைய குடும்பத்துக்குள், கொண்டு வந்தார். நீங்கள் கர்த்தரை விசுவாசியுங்கள். விசுவாச மார்க்கத்தார் யாவரும், ஆபிரகாமின் பிள்ளைகளென்று அழைக்கப்படுவார்கள்.

ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். ஒருவன் மாம்சத்தின்படி பிறந்த இஸ்மவேல். மற்றவன், விசுவாசத்தின்படி சாராளுக்குப் பிறந்த ஈசாக்கு. இன்றைக்கு தேவனுடைய நண்பனாகிய, ஆபிரகாமின் சந்ததியாகிய, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவின் பிள்ளைகளாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு இரட்டிப்பான நன்மைகள், ஆசீர்வாதங்கள் உண்டு. நிச்சயமாகவே, தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

நினைவிற்கு:- “அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்” (எபி. 2:16).