அதிகாரம் கொடுத்தார்!

“இயேசு கிறிஸ்து, பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (மத். 10:1).

தமிழ் நாட்டில், மந்திரம் செய்வதற்கு, ஏகப்பட்ட மந்திரவாதிகள் இருக்கிறார்கள். குறி சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். செய்வினை செய்கிறவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மந்திரவாதத்தால் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் விழுந்து, புத்தி தடுமாறுகிறவர்கள் ஏராளமிருக்கிறார்கள். ஆனால், அவர்களை விடுதலையாக்கி, கர்த்தருடைய பாதையில் வழிநடத்த போதுமான ஊழியக்காரர்களில்லை. இந்தியாவில் அநேக வேதப் பண்டிதர்களிருக்கிறார்கள். பல இறையியல் வல்லுநர்கள், டாக்டரேட்டு பட்டம் வாங்கினவர்களுமிருக்கிறார்கள். ஆனால் ஜனங்களுடைய பிரச்சனைகளிலிருந்து, அவர்களை விடுதலையாக்குகிறவர்கள், மிகவும் குறைவானவர்களே.

நீங்கள் விடுதலையாக்குகிற, ஊழியத்திலே இறங்குவதற்கு முன்பு, நான்கு சுவிசேஷங்களிலும் இயேசு எப்படி விடுதலையாக்குகிற ஊழியத்தை செய்தார்? என்ன விதமான ஆவிகளைத் துரத்தினார்? எப்படிப்பட்ட நோய்களைக் குணமாக் கினார் என்பதை வாசித்து, “ஆண்டவரே, அந்த கிருபையை எனக்குத் தாரும்” என்று ஜெபியுங்கள். அப்போஸ்தல நடபடிகளில் அப். பேதுரு, அப். பவுல், அப். பிலிப்பு எப்படிப்பட்ட விடுதலையாக்குகிற ஊழியத்தை செய்தார்கள், என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நானும், டாக்டர் கிளிபோர்டு குமார் அவர்களும் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள, “மேலச் சேவல்” என்ற கிராமத்துக்குப் போயிருந் தோம். பிரசங்க நேரத்தில், எங்கிருந்தோ திடீரென்று ஒரு சூறாவளிக் காற்று வீசியது. இதனால் அந்த ஊரிலிருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் வளைந்து, ஒடிந்து கீழே விழுந்தது. அந்த கிராமமே, இருளுக்குள் மூழ்கிப்போனது. எந்த மைக்கும் இல்லாமல், கர்த்தருடைய வார்த்தையை சத்தமாய் பிரசங்கித்து, கூட்டத்தை முடித்தோம்.

முடிவிலே, அநேக அசுத்த ஆவிகள் அலறி ஓடின. ஒரு ஆவி சொன்னது, “நீங்கள் பிரசங்கிக்கக்கூடாது என்று நான்தான் அந்த சூறாவளிக் காற்றை கொண்டு வந்தேன். நான்தான் அந்த டிரான்ஸ்பார்மரை முறித்தேன். ஆனாலும் நீங்கள் அதைப் பொருட்படுத்தாமல், நற்செய்தியை அறிவித்தீர்களே, இயேசு பெரியவர்” என்று அறிக்கையிட்டது.

இந்தியாவில் பிசாசுப் பிடித்தவர்கள், தலையை விரித்து ஆடுவதுபோல, வெளிதேசங்களில் அப்படி ஆடுகிறவர்கள் மிகவும் குறைவு. அவர்களுக்குள் டிப்பிரஷன் இருக்கிறது. மனச்சோர்வு, எதிலுமே உற்சாகமில்லாமல், நடை பிணமாய் வாழுகிறார்கள். வேறு சிலர், ஹிப்பிகளைப்போல, சோம்பேறித்தனமான வாழ்க்கை வாழ்ந்து, பல் விளக்காமல், குளிக்காமல், காட்டுமிராண்டிகளைப்போல நடக்கிறார்கள். வேறு சிலர், “புரேனோகிராப்பி” என்று சொல்லக்கூடிய, நிர்வாண படங்களைப் பார்ப்பதிலே, மோகமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.

தேவபிள்ளைகளே, நீங்களும் கிறிஸ்துவினுடைய முன்மாதிரியைப் பின்பற்றி, கட்டுண்ட மக்களை விடுதலையாக்குங்கள். சிலருக்கு நோய் கட்டுகள், சிலருக்கு பாதாளக் கட்டுகள், சிலருக்கு மரணக் கட்டுகள். “கர்த்தர் கொலைக்கு நியமிக்கப் பட்டவர்களை விடுதலையாக்குகிறார்” (சங். 102:19).

நினைவிற்கு:- “அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து; ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்” (லூக். 10:17).