சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை!

“கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர், என்மேல் இருக்கிறார். சிறைப்பட்டவர் களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும் என்னை அனுப்பினார்” (ஏசா. 61:1).

ஒரு தேவ மனுஷன் நடத்திய கூட்டத்திலே, அநேக பிசாசு பிடித்தவர்கள் கட்டுண்டவர்கள் வந்திருந்தார்கள். அவர் ஜெபிக்க ஆரம்பித்தபோது, அவை களெல்லாம் அலறி வெளியே வந்தன. அநேகர் குடிப்பழக்கத்திலிருந்தும், கஞ்சா போன்ற போதை மருந்துகளிலிருந்தும் விடுதலையானார்கள்.

அன்றைக்கு, அந்த தேவ மனிதனுக்குள்ளே, ஒரு கேள்வி எழுந்தது. மனிதர்கள் தங்களைத் தாங்களே விடுதலையாக்குகிற வழியை அறியாமல், அங்கலாய்க்கிறார்கள். ஆனால் பறவைகள், மிருகங்கள், “விடுதலையாகும் வழிகளை” அறிந்திருக்கிறதா? என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது அவர் வீட்டின் அருகே, மலைச் சரிவில், உயர்ந்த ஒரு மரத்தில், ஒரு கழுகு, கூட்டை கட்டி அங்கே மூன்று குஞ்சுகளை பராமரித்து வருவதைக் கண்டார். அந்த கழுகு குஞ்சுகளுக்கு இரையை கொடுத்துவிட்டு போனபிறகு, மிக வேகமாய் அந்த மரத்தில் ஏறினார். மூன்று குஞ்சுகளுடைய கால்களையும், சங்கிலிகளினால் பிணைத்து, மரத்தோடு உறுதியாய் கட்டிவிட்டு, இறங்கி விட்டார்.

சரி, இந்த கழுகுகள், “எப்படி குஞ்சுகளை, விடுவிக்கும் பார்க்கலாம்?” என்று எண்ணி, ஒவ்வொருநாளும் அந்த மரத்தை பார்த்துக்கொண்டேயிருப்பார். கழுகுகள் அதைக் குறித்து கவலைப்படாதது போல, வழக்கம்போல தங்கள் குஞ்சுகளுக்கு உணவைக் கொடுத்துவிட்டு, போய்க்கொண்டேயிருந்தன. குஞ்சுகள் வளர்ந்து, பறக்கிற நேரம் வந்தபோது, அவை அழகாய் பறந்து சென்றன. அவைகளின் கால்களிலே எந்த சங்கிலியையும் காணோம்.

அதைக் கண்ட பக்தன், மீண்டும் மரத்தின்மேல் ஏறினார். கழுகு கூட்டை அப்படியே பெயர்த்து, ஓடுகிற கால்வாயின் தண்ணீரில் போட்டபோது, அங்கு சில பச்சிலைகள், சில வேர்கள், தண்ணீரை எதிர்த்து நின்று கொண்டிருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டுவந்து, இரும்புச் சங்கிலிகள்மேலும், பூட்டுகள்மேலும் போட்டபோது, அவை, “டபக்” என்று திறந்துகொண்டன. கழுகுகளுக்கு அந்த வேரைப் பற்றி தெரிந்திருந்ததினாலே, தன் குஞ்சுகளை எளிதாய் விடுவிக்க முடிந்தது.

அதன்பின்பு அவர் வேதத்தை ஆர்வத்தோடு வாசிக்க ஆரம்பித்தபோது, ஜனங்களை விடுதலையாக்கும் மூன்றுவித சத்தியங்களை கண்டுகொண்டார். 1. “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36). 2. “சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவா. 8:32). 3. “கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ, அங்கே விடுதலையுமுண்டு” (2 கொரி. 3:17).

கிறிஸ்து எப்போதும், கட்டுண்ட மக்களை நோக்கிச் சென்று, மனதுருகி, அவர்களை விடுதலையாக்கினார். உங்களுடைய வாழ்க்கையிலே கிறிஸ்துவினுடைய மனதுருக்கத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள். ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு சுவாசமாகவும், இருதயத் துடிப்பாகவும் இருக்க வேண்டும். நீங்கள் இயேசுவைப்போல, பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் நிறைந்து, ஜனங்களுடைய சாபங்களை நீக்கி, ஆசீர்வாதமாக்க வேண்டும்.

நினைவிற்கு:- “நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். அவர் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” (அப். 10:38).